டீ-யின் மணத்தை உலகம் முழுதும் பரப்பிய இந்தூர் இளைஞர்: மாதம் 1.5 லட்சம் கப் விற்பனை!
சஷாங்க் ஷர்மா தொடங்கிய The Tea Factory அரபு நாடுகள், கனடா, யூகே, நேபால், பங்களாதேஷ் என உலகளவில் 180 அவுட்லெட்களுடன் செயல்படுகின்றன.
இந்தியாவில் டீ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 2021ம் ஆண்டில் 1.1 பில்லியன் கிலோ அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் இந்த சந்தையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
சாலையோர டீக்கடைகள் முதல் பெரியளவில் பல்வேறு கிளைகளுடன் செயல்படும் டீ பிராண்ட் வரை மக்களின் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றபடி சேவையளித்து வருகின்றன.
இந்த வாய்ப்பைப் பத்தாண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்து சந்தை தேவையைப் புரிந்துகொண்டார் சஷாங்க் ஷர்மா. காபி பிரியர்களுக்காக செயல்படும் கஃபே போன்றே டீ பிரியர்களுக்காக டீ கஃபே தொடங்கலாம் என முடிவு செய்தார்.
“எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது Café Coffee Day. காபி குடிக்க மட்டுமல்லாமல் வணிக ரீதியாக ஒன்றிணைய, டேட்டிங் செல்ல என பல்வேறு காரணத்திற்காக மக்கள் இங்கு ஒன்று கூடுவதைப் பார்த்தேன். நாமும் ஏன் டீ கஃபே தொடங்கக்கூடாது என நண்பர்களுடன் கலந்து பேசினேன்,” என்கிறார் சஷாங்க்.
இந்திய சந்தையில் டீ கஃபே இருந்தன, என்றாலும் அவை பெரிய நகரங்களிலேயே செயல்பட்டன. அதனால், சஷாங்க் தனது சொந்த நகரமான இந்தூரில் டீ கஃபே தொடங்க முடிவு செய்தார்.
ஆனால், அவரது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. எத்தனையோ போரட்டங்களைக் கடந்து வந்துள்ளார்.
இன்று சஷாங்க் தொடங்கிய The Tea Factory அரபு நாடுகள், கனடா, யூகே, நேபால், பங்களாதேஷ் என உலகளவில் 180 அவுட்லெட்களுடன் செயல்படுகின்றன.
இது எப்படி சாத்தியமானது? கனவை எப்படியாவது எட்டிவிடவேண்டும் என்கிற எண்ணம்தான் இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது என்கிறார் சஷாங்க்.
சிறுநகரில் இருந்து வெளிப்பட்ட உலகளாவிய பிராண்ட்
சஷாங்க் தனது பெற்றோரிடமிருந்து 6 லட்ச ரூபாய் வாங்கிய முதலீடு கையில் இருந்தது. ஆனால் அனுபவமில்லாத ஒரு துறை. இருந்தாலும் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பானம் என்பதால் தேவை அதிகமிருக்கும், வெற்றியடையலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
குறைந்த விலையில் டீ கொடுத்தால் மக்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. எனினும் எல்லோரும் கொடுக்கும் டீயைத்தானே நாமும் கொடுக்கிறோம்? இதில் அப்படி தனித்துவமாகவோ, சிறப்பாகவோ என்ன இருக்கிறது? இந்த கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.
“நான் இருப்பது மும்பையோ டெல்லியோ கிடையாது. அங்கிருப்பவர்கள் குறைந்தபட்சம் அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கலாம் என நினைக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இருப்பது சிறு நகரம். ஒரு டீ குடிக்க அங்கு செல்லவேண்டுமா என்று இங்கிருப்பவர்கள் நினைக்கலாம். கஃபே சூழலை மக்களைக் கவரும் வகையில் அமைக்க முடிவு செய்தேன். ’என்னதான் இருக்கிறது என்று ஒருமுறை சென்று பார்க்கலாமே’ என்கிற எண்ணம் மக்கள் மனதில் வரவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார்.
வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்யலாம் என யோசித்த சஷாங்க், 20 ரூபாய் முதல் 250 ரூபாய், 500 ரூபாய் வரை வெவ்வேறு டீ வகைகளை வழங்க ஆரம்பித்தார்.
“இதென்ன முட்டாள்தனம் என்றுகூட சிலர் நினைக்கலாம். ஆனால் எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. எல்லோரும் கஃபே வரவேண்டும் என்பதுதான் என் நோக்கம்,” என்கிறார் சஷாங்க்.
சஷாங்க் வகுத்த இந்த உத்தி பலனளித்தது. இங்கு வந்தவர்கள் மற்றவர்களிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர். சமூக வலைதளங்கள் அத்தனை பிரபலமில்லாத காலகட்டத்திலேயே மக்கள் The Tea Factory வழங்கும் தனித்துவமான சுவையைப் பகிர்ந்துகொண்டு விளம்பரப்படுத்தியிருக்கின்றனர்.
”எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக செய்யும்போது அதற்கே உரிய சவால்கள் இருக்கும். அப்படித்தான் எனக்கும். பல சவால்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஓராண்டு காலத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஃப்ரான்சைஸ் மாதிரியில் விரிவடைந்தேன்,” என்கிறார்.
2014-ம் ஆண்டு இந்தூரில் The Tea Factory முதல் ஃப்ரான்சைஸ் அவுட்லெட் திறக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜோத்பூரிலும் ராஜஸ்தானும் திறக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு நேபாலில் அவுட்லெட் திறக்கப்பட்டது. அப்போதிருந்து வெளிநாட்டு செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.
The Tea Factory முழுமையாக ஃப்ரான்சைஸ் மாதிரியில் செயல்பட்டு வருகிறது. இந்தியா, யூகே, கனடா, அரபு நாடுகள் போன்ற பகுதிகளில் 180 அவுட்லெட்கள் திறக்கப்பட்டுள்ளன. The Tea Factory ஒரு மாதத்திற்கு 1.5 லட்சம் கப் டீ விற்பனை செய்வதாக சஷாங்க் தெரிவிக்கிறார்.
தொழில்நுட்பத்தின் உதவிடன் விரிவாக்கம்
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் The Tea Factory பிரெட், பால், பன் போன்ற மூலப்பொருட்களை வாங்கி விற்பனையாளர்களுக்கும் ஆதரவளித்து வருகிறது.
விரிவாக்கப் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் The Tea Factory குஜராத்தில் விரிவடைய உள்ளது. அத்துடன் யூகே மற்றும் அரபு நாடுகளில் விரிவடையவும் திட்டமிட்டுள்ளது.
குஜராத்தில் மையப்படுத்தப்பட்ட கிச்சன் உருவாக்கப்பட்டு வருகிறது. The Tea Factory அவுட்லெட் முழுவதும் ஒரே மாதிரியான ஃபார்முலேஷன் இருப்பதற்காக செஃப் இல்லாமல் தயாரிக்கப்படும் செயல்முறை பின்பற்றப்படுகிறது.
”The Tea Factory அவுட்லெட் முழுவதும் பயிற்சிபெற்ற செஃப்களை நியமித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 800 செஃப் அடங்கிய நெட்வொர்க் உள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுவை இருக்கவேண்டும் என்பதற்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் செஃப் இல்லாத செயல்முறையைப் பின்பற்றுகிறோம். செஃப் தலையீட்டை முற்றிலுமாக நீக்குவது எங்கள் நோக்கமல்ல, ஒரே மாதிரியான சுவையை வழங்கவே விரும்புகிறோம்,” என்று சஷாங்க் தெளிவுபடுத்தினார்.
சந்தை நிலவரம் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
2018-ம் ஆண்டு நிலவரத்தின்படி உலகளவில் ஸ்பெஷலிஸ்ட் காபி மற்றும் டீ ரீடெயில் செயின் சந்தையில் இந்தியா 2,570 கோடி ரூபாய் மதிப்புடன் பத்தாம் இடத்தில் இருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனமான Euromonitor International சுட்டிக்காட்டுகிறது.
Chai Point, Chaayos போன்றவை இந்தியாவின் முன்னணி டீ கஃபேக்கள். Chai Sutta Bar, MBA Chaiwalla போன்ற நிறுவனங்களுடன் The Tea Factory போட்டியிடுகிறது.
வாடிக்கையாளர்களின் பரிந்துரை மூலமாகவே வளர்ச்சி இருப்பதாக கூறும் சஷாங்க், நடுத்தர வருமானம் ஈட்டும் பிரிவினர் தனது ஃப்ரான்சைஸ் மாதிரி மூலம் பலனடையலாம் எனத் தெரிவிக்கிறார்.
“நானும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்தான். இந்தப் பின்னணி கொண்டவர்களுக்கு கனவுகள் இருக்கும். அந்தக் கனவுகள் நிறைவேற்றப்படவேண்டும்,” என்கிறார் சஷாங்க்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா