உணவு டெலிவரி பணியில் சேர்ந்த நாட்டின் முதல் திருநங்கை பிரீத்திஷா!
காவல்துறை, சட்டத்துறையில் முதன்முதலாக தமிழகத்தில் திருநங்கைகள் அடியெடுத்து வைத்ததைப் போல வீடு தேடிச் சென்று உணவை டெலிவரி செய்யும் 'உபேர் ஈட்ஸ்ல்' பணியில் சேர்ந்த முதல் திருநங்கை ஏஜென்ட் என்ற வரலாற்றை படைத்துள்ளார் பிரீத்திஷா.
புதிதாக சில நபர்களை சந்தித்து பேசும் போது அறிவார்ந்த விஷயங்களை அறிந்து கொண்ட திருப்தி கிடைக்கும், குறிப்பிட்ட சிலரை சந்தித்து பேசும் போது தான் ஆத்ம திருப்தி என்பது கிடைக்கும். அப்படியான நபர் தான் பிரீத்திஷா. சென்னையில் உபேர் ஈட்ஸ் உடன் இணைந்து டெலிவரி ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் டெலிவரி ஏஜென்ட் இவர் தான் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
பிரீத்திஷாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்யாணிபுரம். 1988ம் ஆண்டில் தனது குடும்பத்தில் 3வது பிள்ளையாக பிறந்தவர். பிறப்பில் ஆணாக இருந்தாலும் அவர் 9ம் வகுப்பு படிக்கும் போது பெண்ணாக மாற விரும்பினார்.
“எனக்குள் என்ன நடக்கிறது என்பது அப்போது தெரியவில்லை. நான் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டுமே தெரிந்தது. 11ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய உடல் பற்றிய நல்ல புரிதல் வந்திருந்தது. என்னுடைய நடவடிக்கைகளில் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்ததால் 2004ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியேறி புதுச்சேரியில் எனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன்.
அப்போது எதிர்பாராத விதமாக திருநங்கை சுதா என்பவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. சுதா மூலம் வேறு சில திருநங்கைகளின் அறிமுகம் கிடைக்க நாங்கள் அனைவரும் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். புனேவில் தான் சென்று பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியதாகக் கூறுகிறார் பிரீத்திஷா.
எல்லா குடும்பத்தினரைப் போல என்னுடைய பெற்றோரும் நான் பெண்ணாக மாற விரும்பியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததற்கு காரணம் இந்த உலகில் நான் எப்படி உயிர் வாழப் போகிறேன் என்ற பயம் தான். ஏனெனில் திருநங்கைகள் என்றால் காலம் காலமாக இருக்கும் தவறான கண்ணோட்டம் அவர்களை அச்சுறுத்தியது, தவறான பாதையில் நான் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் கருதியதாகக் கூறுகிறார் பிரீத்திஷா.
என் வாழ்நாளில் பல கடினமான சூழல்களைக் கடந்து வந்திருக்கிறேன், அந்த கடினமான பக்கங்களை மீண்டும் நினைத்துக் கூடப் பார்க்க விரும்பவில்லை. திருநங்கையாக மாற முடிவு செய்த போது நான் ஒரு விஷயம் மட்டும் உறுதியேற்றுக் கொண்டேன். கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும். உயிர்வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்பவராக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் திடமாக இருந்ததாகக் கூறுகிறார் பிரீத்திஷா.
வாழ்க்கையை நடத்துவதற்காக பிறரிடம் கையேந்தக் கூடாது என நினைத்தேன். மின்சார ரயில்களில் தினசரி கீ செயின் விற்று வருமானம் ஈட்டத் தொடங்கினேன். தொடக்கத்தில் நாள் ஒன்றிற்கு ரூ. 400 வருமானம் ஈட்ட முடிந்தது என்கிறார் பிரீத்திஷா.
சென்னை வருவதற்கு முன்னர் புனேயில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அங்கேயே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இதே போன்று டெல்லியிலும் 6 ஆண்டுகள் வசித்து வந்துள்ளார். டெல்லியில் இருந்த போது திருநங்கை கலை மன்றத்தினடன் இணைந்து பல்வேறு தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்தது.
மற்ற திருநங்கைகளுடன் சேர்ந்து திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்துள்ளார். சுப நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஆடி, பாடி பணம் ஈட்டியுள்ளேன், இதில் தவறு எதுவும் இல்லை என்கிறார் ப பிரீத்திஷா. (வடமாநிலங்களில் சுபநிகழ்ச்சிகளுக்கு திருநங்கைகளை அழைப்பது வழக்கம்).
சென்னைக்கு வந்த பிறகும் நடிகையாக தன்னுடைய பணியைத் தொடங்கி இருக்கிறார். நடிப்பு மற்றும் நடிப்பு பயிற்சியை கற்றுத்தருவ்தையும் அவர் செய்து வந்துள்ளார். இந்தத் துறையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே நிலையான வருமானம் இருக்காது. சில மாதங்கள் அதிக வேலை இருக்கும் பணக்கஷ்டம் இருக்காது, சில மாதங்கள் நடிப்பு வாய்ப்பே கிடைக்காமல் திண்டாட்டமாக இருக்கும் என்கிறார் பிரீத்திஷா. இதனால் நிலையான வருமானம் பெறும் ஒரு வேலையைத் தேடுவது கட்டாயமானது. எனவே திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஸ்டார்ட் அப் ஆன பெரிஃபெரியின் உதவியை நாடினேன். அந்த ஸ்டார்ட் அப் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் உபேர் ஈட்ஸ்ல் டெலிவரி ஏஜென்ட் வேலை என்கிறார் அவர்.
நாடகத்துறையில் இருந்ததால் என்னுடன் பணிபுரியும் சக நடிகர்கள் பற்றியே சுற்றி வந்த நிலையில் இந்த புதிய வேலை பற்றி எந்த எண்ணமும் இல்லாமலே இருந்தது. ஆனால் போகப்போக அந்தப் பணி எனக்கு பிடித்துவிட்டது.
காலை முழுவதும் வீட்டு வேலையில் மூழ்கி இருக்கும் பிரீத்திஷாவின் டெலிவரி ஏஜென்ட் பணி நண்பகல் தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கிறது. ஒரு நாளைக்கு 11 ஆர்டர்களையாவது டெலிவரி செய்ய வேண்டும், இதன் மூலம் பிரீத்திஷாவிற்கு ஒரு நாளைக்கு ரூ. 700 ஊதியமாக கிடைக்கிறது.
திருநங்கைகளைப் பார்த்தாலே ஒதுங்கிப் போகிறவர்கள் மத்தியில் டெலிவரி ஏஜென்ட்டாக சேர்ந்த பின்னர் நடந்த சம்பவங்கள் மனதிற்கு இதமளிப்பவையாக அமைந்ததாகக் கூறுகிறார் பிரீத்திஷா. ஒரு ரெஸ்டாரண்டில் இருந்து உணவை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டில் இருந்த அம்மாவிடம் கொண்டு சேர்த்தேன், அப்போது அவர் தாய்மையோடு பார்த்து ரூ.20 கொடுத்து, டி குடிக்கவும் வற்புறுத்தினார். அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது இங்கு விஷயமல்ல, அவர் என்னை நடத்திய விதம் மனிதநேயம் இன்னும் மறித்துப் போகவில்லை என்பதை உணர்த்தியது.
இதே போன்று மற்றொரு நாள் 3 மாடி ஏறிச் சென்று ஒரு வீட்டில் உணவை டெலிவரி செய்தேன், அந்த வீட்டில் இருந்த பெண் என்னை உள்ளே அழைத்து தண்ணீர் குடிக்கச் சொன்னார். அண்டை வீட்டாரிடமே பேசாதவர்கள் வாழும் காலகட்டத்தில் உணவை டெலிவரி செய்ய வந்த என்னை வீட்டிற்குள் அழைத்து தண்ணீர் குடிக்கச் சொன்னது மகிழ்ச்சியானதாக இருந்தது என்று பெருமிதம் கொள்கிறார் பிரதீஷா.
என்னை வித்தியாசமாக பார்ப்பவகளை நினைத்து நான் கவலைப்பட விரும்பவில்லை. என்னுடைய பணியில் எனக்கு திருப்தி கிடைக்கிறது, கண்ணியமாக வாழ இந்தப் பணியை தொடர்ந்து செய்வேன் என்கிறார் பிரீத்திஷா . என்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன், அது இன்னும் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.
என்னுடைய விருப்பமெல்லாம் திருநங்கைகளும் மற்ற ஆண், பெண்களைப் போல சமமானவர்களாக பார்க்கப்பட வேண்டும். அதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்கிறார்.
பிரீத்திஷா இந்தியாவிலேயே முதல் டெலிவரி ஏஜென்ட் என்பதைத் தாண்டி தமிழகத்தில் முதன்முதலில் திருநங்கை, திருநம்பி திருமணம் செய்து கொண்ட தம்பதியும் கூட. பிரதீஷாவிற்கு பிரேம்குமரன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். 5 ஆண்டுகள் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் இந்த ஆண்டு மகளிர் தினத்தின் போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இருவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமரன் பிறப்பில் பெண்ணாக இருந்தாலும் ஆணாகவே உணர்ந்ததால் பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர்.
திருநங்கைகளுக்கு கிடைக்கும் நல்ல வேலைவாய்ப்புகளை பயன்படுத்தி அவர்கள் கண்ணியமான, அனைவரும் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ வேண்டும். என்னைப் போன்ற திருநங்கைகள் இந்தப் பணியில் சேர அவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் ஊக்கமளித்து வருகிறார் பிரீத்திஷா.