தரிசு நில மலைப்பகுதியில் 14 குளங்களை அமைத்துள்ள 82 வயது முதியவர்!

மாண்டியா மாவட்டத்தில் குந்தினிபெட்டா என்ற பகுதியை குளங்கள் வெட்டி சீரமைத்துள்ளார் ஆடு மேய்ப்பவரான காமே கவுடா!

தரிசு நில மலைப்பகுதியில் 14 குளங்களை அமைத்துள்ள 82 வயது முதியவர்!

Friday July 20, 2018,

2 min Read

82 வயதான காமே கவுடா மேற்கொள்ளும் பணிகளில் இருந்தே இவர் சுற்றுச்சூழலை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் வசித்த மலைப்பகுதியான குந்தினிபெட்டா தரிசு நிலமாக மாறி வந்தது. அப்போதுதான் மாண்டியா மாவட்டத்தின் மலவள்ளி தாலுகாவில் உள்ள தாசணடோடி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவரான காமே கவுடா, குளம் அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து நாற்பதாண்டுகளில் இந்த மலைப்பகுதியில் 14 குளங்களை அமைத்துள்ளார். 

இவர் இந்தப் பணியைத் துவங்கியபோது அவரிடம் இதற்கான நிதி இல்லை. தனது ஆடுகளை விற்று அதில் கிடைத்த தொகையைக் கொண்டு குளம் அமைக்கத் தேவையான பொருட்களை வாங்கினார். முதல் குளத்தை தோண்டுவதில் ஆறு மாதம் செலவிட்டார்.  

image
image


காமே கவுடா கல்வியறிவு இல்லாதவர். இவருக்கு நிதியுதவியும் கிடைக்கவில்லை. இவர் இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கிறார். மிருகங்களும் பறவைகளும் அருந்த நீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒரு சிறிய குளம் அமைக்கத் துவங்கியதாக ’டெக்கான் ஹெரால்ட்’ தெரிவிக்கிறது. 

இவர் இதுவரை 10-15 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார். இந்தத் தொகை இவர் குளங்களை வடிவமைத்ததற்காகவும், குளம் அமைத்ததற்காகவும், -முறையாக நிர்வகித்தத்தற்காகவும் இவருக்கு கிடைத்த பல்வேறு விருதுகள் வாயிலாகக் கிடைத்தத் தொகையாகும். இந்தக் குளங்களுக்கு தனது பேரக்குழந்தைகளின் பெயர்களை சூட்டியுள்ளதாக ’இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கடந்த நாற்பதாண்டுகளாக ஆடு மேய்ப்பது, குளம் வெட்டுவது என பன்னிரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நிலத்தில் செலவிட்டுள்ளார். இவர் கூறுகையில்,

”சில சமயம் கைகளில் விளக்கை எடுத்துக்கொண்டு குளம் வெட்ட இரவு நேரத்தில் செல்வேன். சில சமயம் முழுநிலவு நேரத்திலும் செல்வேன்.”

பித்துப்பிடித்தவர் என்று அவமதிக்கப்பட்டதால் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் விலகி தனித்தே இருந்தார். ஆனால் இயற்கை இவருக்கு ஆறுதல் அளித்தது. முதல் குளம் அமைத்த பிறகு அடுத்த 13 குளங்களையும் குறைவான உயரத்தில் ஒன்றோடொன்று இணையும் விதத்தில் அமைக்கத் துவங்கினார். தற்போது தொழிலாளர்கள் அடங்கிய ஒரு குழு இவருடன் பணிபுரிகிறது.

”நான் என் குழந்தைகளுக்கோ, பேரக்குழந்தைகளுக்கோ பணம் கொடுத்தால் அது செலவாகி அவர்கள் திவாலாகிவிடுவார்கள். அதற்கு பதிலாக ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்த குளங்களை அவர்களுக்கு வழங்கினால் அவர்கள் பணக்காரர்களாகிவிடுவார்கள். யாராவது என்னுடைய தனிப்பட்ட உபயோகத்திற்காக பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொள்வேன். மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் தனக்குக் கிடைக்கும் அத்தனை பணத்தையும் மதுவிற்காக செலவிடுவது போல் நான் எனக்குக் கிடைத்த அனைத்து தொகையையும் குளம் வெட்ட செலவிடுவேன். நான் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்,” என்றார்.

இந்தக் குளங்களில் ஒன்பது குளங்கள் பனதள்ளி பகுதியிலும் மற்ற குளங்கள் குந்தினிபெட்டா பகுதியிலும் அமைந்துள்ளது. காமே கவுடா தினமும் இந்தக் குளங்களைப் பார்வையிடுகிறார். அவர் கூறுகையில்,

”நீங்கள் வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் சாப்பிட்டுவிட்டு மற்ற நாட்களில் பட்டினியாக இருப்பீர்களா என்ன? என்னால் வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் குளம் வெட்டி விட்டு மற்ற நாட்களில் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA