அம்மாக்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருமானம் ஈட்ட 8 வழிகள்...
வீட்டில் இருந்தே பணியாற்றுவது இப்போது மிகவும் பிரலபலமாகி வரும் நிலையில், வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்பும் அம்மாக்களுக்கு வழிகாட்டும் ஐடியாக்கள் சில:
இல்லத்தலைவிகளுக்கு, வீட்டையும் பார்த்துக்கொண்டு, வர்த்தக நிறுவனங்களிலும் பணியாற்றுவது என்பது எளிதானது அல்ல. ஆனால் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிந்தால் நன்றாக தானே இருக்கும். இது நேரத்தை மட்டும் அல்லாமல் பணத்தையும் மிச்சமாக்குகிறது. மேலும், வீட்டில் இருந்தே பணியாற்றுவது என்பது இப்போது புதிய போக்காகவும் பிரபலமாகி வருகிறது.
இதில் நீங்கள் தான் உங்களுக்கு பாஸ் என்பதோடு, உங்கள் கெடுவுக்கு ஏற்ப செயல்படலாம். பெண்களுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது.
வீட்டில் இருந்தபடியே அம்மாக்கள் செய்யக்கூடிய பணிகளுக்கான 8 எளிய ஐடியாக்கள் இதோ:
வலைப்பதிவு: இது மிகவும் பிரபலமான வழி. இதற்கு எந்த முதலீடும் தேவையில்லை. வலைப்பதிவு செய்வதற்கான ஐடியா இருந்தால் போதுமானது. அதன் பிறகு வலைப்பதிவை துவக்கி, தொடர்ந்து பதிவிடலாம்.
பயண வலைப்பதிவாக அல்லது எழுத்தாளர் வலைப்பதிவாக அல்லது விற்பனை பொருட்களுக்கான வலைப்பதிவாகவோ இருக்கலாம். word press, blogger, weebly, wix உள்ளிட்ட பல சேவைகள் வலைப்பதிவை துவங்கி நடத்துவதற்கான வசதியை அளிக்கின்றன.
யோகா பயிற்சியாளர்: நீங்கள் தினமும் யோகாசனம் செய்து உடல் தகுதியுடன் இருப்பவரா? எனில், நீங்கள் யோகா பயிற்சியாளராகவும் விளங்கலாம். பெரும்பாலும் வாழ்க்கையில் நாம், நம்முடனே செலவிடுவதற்கான நேரம் இல்லாமல் தவிக்கிறோம். யோகா மன அமைதி கொடுத்து, சுயத்தை அனுபவிக்க உதவுகிறது. யோகா பயிற்சி சிறந்த வர்த்தக வாய்ப்பாகவும அமைகிறது.
நீங்கள் தினமும் யோகா செய்யும் போது மனமும் உடலும் அமைதியாக இருப்பதை உணர்ந்திருக்கலாம். இவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். அதன் பிறகு உங்களை நோக்கி வாடிக்கையாளர்களை வரவைக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள அறை அல்லது தோட்டத்தில் இருந்தே துவங்கலாம்.
ஆன்லைன் வகுப்புகள்: தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, இன்று பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே தங்கள் போக்கில் ஆன்லைனில் கற்றுக்கொள்வதை விரும்புகின்றனர். உங்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் வல்லமை இருந்தால், நீங்களும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்.
பயிற்றுவிப்பதில் முன் அனுபவம் இருந்தால் மாணவர்களை ஈர்ப்பதில் அது உதவும். இணையதள வடிவமைக்கும் திறன் இருந்தால், உங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான இணையதளத்தை நீங்களே அமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எளிதாக வருவாய் ஈட்டலாம்.
ஹோம் செஃப்: ஒரு நல்ல உணவு ஒருவரது நாளை பிரகாசமாக்கி அவரது முகத்தில் புன்னகையை வரவைக்கலாம். உங்களுக்கு சமையல் கலையில் ஆர்வம் இருந்தால் இதை வாய்ப்பாக மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நல்ல உணவை சமைப்பது தான். திருமண ஏஜென்சிகள் அல்லது வாடிக்கையாளர்களுடன் இணைந்து திருமண உணவுகளை தயாரித்து கொடுக்கலாம்.
ஒரு சிறிய கிட்சனை அமைக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள கிட்சனை மாற்றி அமைத்துக்கொள்ளவும். சமூக ஊடகங்களில் சுவையான சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் எளிதாக புதிய வாடிக்கையாளர்களை தேடிக்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள தொடர்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஃப்ரிலான்ஸ் எழுத்து: பலரும் எழுத்தை தொழிலாக கொள்ள விரும்புகின்றனர். உங்களுக்கு எழுதுவதில் அனுபவம் இருந்தால் இது ஏற்றது. அனுபவம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம், நீங்கள் எழுதுவதில் பயிற்சி எடுத்துக்கொண்டு, துவங்கலாம். ஃப்ரிலான்ஸ் பணி இன்று மிகவும் பிரபலமாக உள்ளது. வார்த்தைகள் அல்லது எழுவதுவதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கலாம்.
படிப்படியாக நல்ல கிளையண்ட்களை பெறலாம். உங்களுக்கு என சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் அதுவே விளம்பரமாக அமையும். அதிகம் வாசிப்பது மற்றும் ஆய்வு செய்வது உங்களுக்கு உதவும்.
நல்ல வாசகரே நல்ல எழுத்தாளராக முடியும் என்று சொல்லப்படுவதால், வாசிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். எனவே வீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் அம்மாக்களுக்கு 1ப்ரிலான்சிங் எழுத்துப்பணி ஏற்றதாக இருக்கும்.
கிராபிக் டிசைன்: நாளுக்கு நாள் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், புதிய ஸ்டார்ட் அப்கள் பல உருவாகி வருகின்றன. ஒவ்வொரு ஸ்டார்ட் அப் அல்லது வர்த்தகத்திற்கும் இணையதளம் தேவை. இங்கு தான் கிராபிக் டிசைனர்களுக்கான தேவை வருகிறது. ஆன்லைன் எடிட்டிங் மற்றும் போட்டோஷாப் திறன் இருந்தால் போதுமானது.
டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களை பெறுவதும் எளிதாகி இருக்கிறது. படைப்புத்திறன் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்கள் தொழில் முறைத்தன்மைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கலாம்.
ஆன்லைன் துணிக்கடை: நீங்கள் விரும்பியதை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். அமேசான், இபே போன்ற தளங்களில் உங்களுக்கான ஆன்லைன் கடையை அமைத்துக் கொள்ளலாம். இ-காமர்ஸ் தளங்களின் வீச்சு உங்களுக்கு வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும்.
நிகழ்ச்சி நிர்வாகம் : நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் சொந்த ஈவெண்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்தை துவக்கி, வாடிக்கையாளர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சேவை அளிக்கலாம்.
அதற்கு முன் வீட்டிலேயே விருந்துகள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அனுபவம் பெறலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி தருவதும் சிறந்த துவக்கமாக இருக்கும்.
பணி- வாழ்க்கை சமன்; வீட்டையும் பார்த்துக்கொண்டு, தொழிலையும் கவனிப்பது என்பது கடினமானது தான். ஆனால் எல்லா அம்மாக்களுக்குமே ஏதேனும் திறமை மறைந்திருக்கும். அந்த திறமைகளையே வீட்டில் இருந்தே பணியாற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டில் இருந்தே பணியாற்றத் தேவையான சிறந்த ஐடியாக்களுக்கான உதாரணங்களாக இவை அமைகின்றன. இவற்றை ஊக்கமாகக் கொண்டு நீங்கள் பணி-வாழ்க்கை சமனை தேடிக்கொள்ளலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ண பிரசாத், கண்டெண்ட் டெவலப்பர் | தமிழில் : சைபர்சிம்மன்
(பொறுப்புத்துறப்பு: இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி கம்யூனிட்டி பதிவு. இந்த பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் உள்ளடக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரியது. இங்கு இடம்பெறும் உள்ளடக்கம் ஏதேனும், உங்கள் காப்புரிமையை மீறுவது என கருதினால் எங்களுக்கு தெரிவிக்கவும்.)