கிரிப்டோ கரென்ஸி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்!
எதிர்கால நாணயம் என்று சொல்லப்படும் கிரிப்டோ கரென்ஸி தொடர்பான சர்ச்சைகளும், விவாதங்களும் அதிகரித்து வரும் நிலையில், இவற்றின் அடிப்படையான அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது.
கிரிப்டோ கரென்ஸிகள் மீதான கவனம் அதிகரித்து வரும் நிலையில், இவற்றில் முதலீடு செய்யும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கிரிப்டோ கரென்ஸிகள் தொடர்பாக அதிகரிக்கும் மோசடியும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த பின்னணியில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரென்ஸிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? இவற்றின் சட்டபூர்வமான அந்தஸ்து என்ன?, போன்ற பலவித கேள்விகள் உங்கள் மனதில் எழுலாம்.
பிட்காயின் முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்வதற்கு முன், கிரிப்டோ கரென்ஸிகள் என்றால் என்ன என்பதையும், அவை செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்வது அவசியம். கிரிப்டோ கரென்ஸிகள் தொடர்பாக பல்வேறு சிக்கலான தொழில்நுட்ப அம்சங்கள் இருந்தாலும், இவற்றின் அடிப்படையான அம்சங்களை அறிந்திருப்பது மேலும் புரிலுக்கு வழிவகுக்கும்.
கிரிப்டோ கரென்ஸிகள் தொடர்பான ஆதார அம்சங்கள் இவை:
- கிரிப்டோ கரென்ஸிகள் பலவிதமான பெயர்களில் புழங்குகின்றன. பிட்காயின் இவற்றில் முதலில் அறிமுகமானது மற்றும் பரவலாக அறியப்பட்டதாக இருக்கிறது. மேலும், எத்திரியம், லைட்காயின் என பல வகை உள்ளன.
- கிரிப்டோ கரென்ஸிகள் அடிப்படையில் மாற்று பரிவர்த்தனை முறை. என்கிரிப்ஷன் முறையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கரன்சி வகையைச்சேர்ந்தவை. இவை அடிப்படையில் கம்ப்யூட்டரில் வீற்றிருக்கும் கோடாக அமைகின்றன.
- என்கிரிப்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் இவை, பரிவர்த்தனைக்கான கரென்ஸியாக மட்டும் அல்லாமல் இணையம் சார்ந்த கணக்கீட்டு முறையாகவும் அமைகின்றன.
- இவை பிளாக்செயின் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகின்றன. பிளாக்செயின் என்பது விரிவாக்கப்பட்ட பதிவேடாக அமைகிறது. மைய பதிவேடாக அல்லாமல், வலைப்பின்னலில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தொடர்புடையதாக இருக்கும் பதிவேடு என்பதால் இதில் திருத்தம் செய்வது சாத்தியம் இல்லை.
- கிரிப்டோ கரென்ஸிகள் கம்ப்யூட்டர் கோடால் ஆனவை என்பதால், இவற்றை வாங்க, பரிவர்த்தனை செய்ய கிரிப்டோ வாலெட் வேண்டும். இந்த கிரிப்டோ பர்சில் தான் இவற்றை வைத்திருக்க முடியும்.
- கிரிப்டோ வாலெட்கள் அல்லது பர்ஸ்கள் என்பவை ஒரு வகை மென்பொருள் தான். இந்த மென்பொருள் கிளவுட் வடிவில் இருக்கலாம். கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் இருக்கலாம்.
- வாலெட்டில் தான் என்கிரிப்ஷன் பூட்டு உள்ளிட்ட தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
- கிரிப்டோ கரென்ஸியின் பலம் மற்றும் தன்மை மூன்றாம் தரப்பு இல்லாமல் பயனாளிகள் நேரடியாக பரிவர்த்தனை செய்யலாம் என்பது. ஆனால், மத்திய வங்கி அனுமதி இல்லாதது என்பது இவற்றின் பலவீனமும் ஆகும்.
கிரிப்டோ கரென்ஸி கருத்தாக்கம் மிகவும் புதியது என்பதால் உலகப் பொருளாதார அமைப்பில் வருங்காலத்தில் இது எப்படி பொருந்தும் என்பது பல்வேறு அம்சங்களை சார்ந்திருக்கிறது.
பல நாட்டின் அரசுகள் பிளாக் செயின் சார்ந்த டிஜிட்டல் கரென்சிகளை கொண்டு வருவது பற்றி யோசிக்கின்றன. இந்தியாவிலும் டிஜிட்டல் ரூபாய் பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுகளின் டிஜிட்டல் கரென்ஸி, பிட்காயின் போன்றவற்றில் இருந்து வேறுபட்டது. இவை மையமாக்கப்பட்ட தன்மையை கொண்டிருக்கும் என்பதோடு, அரசின் இறையாண்மை பலத்தையும் கொண்டிருக்கும். மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
பிட்காயின் போன்ற கிரிட்போ கரென்ஸிகளை வாங்குவது அல்லது முதலீடு செய்வது எல்லாம் அவரவர் விருப்பம். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன், இவற்றில் உள்ள இடர்களை மனதில் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக இவற்றின் அடிப்படை அம்சைங்களை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான துவக்கப்புள்ளியாக இந்த பதிவை கருதலாம்.
கிரிப்டோ கரென்ஸிகள் பற்றி மேலும் அறிய: https://www.visualcapitalist.com/beginners-guide-cryptocurrencies/