உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஆப் உருவாக்கிய 10 வயது சிறுவன்!
சஜன் ரமேஷ் உருவாக்கியுள்ள இந்த செயலி மூலம் ஒருவரது பிஎம்ஐ, உயரம், உடல் எடை ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
சமூகத்தில் நிலவும் ஒரு பிரச்சனையை வெறுமனே கடந்து சென்றுவிடமால் அதை கூர்ந்து கவனிப்பவர்களே கண்டுபிடிப்பாளர்களாக உருவெடுக்கின்றனர். இவர்கள் அந்தப் பிரச்சனையை பார்க்கும் கோணமே மாறுபடுகிறது.
மற்றவர்கள் சிக்கல் நிறைந்ததாக பார்க்கும் களம் இவர்களது ஆய்வுக் களமாகவே மாறிவிடுகிறது. அந்தப் பகுதியை ஆழமாக ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வுகளை முன்வைக்கின்றனர்.
காமராஜ் நகரில் உள்ள நசரத் அகாடமி மாணவர் சஜன் ரமேஷ். இவருக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இவர் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“என்னுடைய செயலியின் பெயர் ’ஹெல்த் செக்’. இதன் மூலம் ஒருவரது பிஎம்ஐ, உயரம், உடல் எடை ஆகியவற்றை பரிசோதனை செய்து கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்,” என்கிறார் சஜன்.
இன்று பல குழந்தைகள் அதிக உடல் பருமனுடம் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுக்கே உரிய உற்சாகமும் சுறுசுறுப்பும் அவர்களிடம் இருப்பதில்லை. சஜன் இதை கவனித்தார். உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த விரும்பினார். இந்த விருப்பம் தான் இவர் ’Health Check’ என்கிற செயலியை உருவாக்க உந்துதலாக அமைந்தது.
இவர் மூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் மீது ஆர்வம் காட்டினார். இதை இவரது பெற்றோர் கவனித்தனர். கோடிங் மீது ஆர்வம் இருந்ததால் 2019ம் ஆண்டு WhiteHat Jr தளத்தில் ஆன்லைன் கோடிங் வகுப்பில் சேர்ந்தார்.
“நான் தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிகிறேன். நான் பணிபுரிவதை சஜன் அருகில் இருந்து கவனிப்பார். ஆரம்பத்தில் ஹெச்டிஎம்எல் சார்ந்து இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளோம். தற்போது என்னுடைய பணியில் இருக்கும் பிழைகளை திருத்தம் செய்யும் அளவிற்கு அவருடைய வளர்ச்சி உள்ளது. இதைப் பார்க்க பெருமையாக உள்ளது,” என்று சஜனின் அப்பா சிஎன் பாலு ரமேஷ் குறிப்பிடுகிறார்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை சஜன் மற்றவர்களுக்கு மட்டும் வலியுறுத்துவதில்லை. இவரும் இதில் கவனம் செலுத்துகிறார். டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிறார். கோடிங் செய்வது மட்டுமல்லாது சஜனிற்கு கணிதத்தில் ஆர்வம் அதிகம். விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதே இவரது விருப்பம்.
“நான் செயற்கை நுண்ணறிவு சார்ந்து செயல்பட்டு ரோபோக்களை உருவாக்க இருக்கிறேன். வருங்காலத்தில் இது அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வேன்,” என்றார் சஜன்.
இவரது ’ஹெல்த் செக்’ செயலியின் முன்வடிவம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் மக்களிடையே அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கோடிங் லேங்வேஜ் கற்றுக்கொள்வது, சிக்கலான வேத கணிதங்களுக்கு தீர்வுகாண்பது என மும்முரமாக உள்ள இந்தக் குழந்தை மேதை டோரிமான் பார்க்கும்போதுதான் இவருக்கு பத்து வயது என்பதே நம் நினைவிற்கு வருகிறது.
தமிழில்: ஸ்ரீவித்யா