85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்: ‘முதல் கார்’ வாங்கி பெருமையுடன் பதிவிட்ட ‘நானாஜி’

85 வயதில் வயோதிகம் என முடங்கிப் போய்விடாமல், புதிய தொழில் தொடங்கி, அதில் ஒரே வருடத்தில் சாதித்தும் காட்டி, தன் வருமானத்தில் முதல் காரை வாங்கி அசத்தியுள்ளார் குஜராத்தில் ஒரு முதியவர். இவரது நம்பிக்கைக் கதைதான் இப்போது இணையத்தில் டாக் ஆப்தி டவுனே.

85 வயதில் தொடங்கி சக்சஸ் ஆன நிறுவனம்:  ‘முதல் கார்’ வாங்கி பெருமையுடன் பதிவிட்ட ‘நானாஜி’

Thursday July 21, 2022,

4 min Read

எவ்வளவுதான் பொருட்கள் வாங்கிக் குவித்தாலும், முதல் பொருள் எப்போதுமே ’சம்திங் ஸ்பெஷல்’தான். அதனாலேயே பழையது ஆனாலும், அப்படியான முதல் நினைவுகளை/பொருட்களைத் தூக்கிப் போடாமல் மனதிலும்/பரணிலும் பத்திரப்படுத்துவார்கள் மக்கள். அந்த ‘முதல்’ நினைவுகளும் எப்போதுமே இனிப்பானவை.

இப்போதும் அப்படித்தான் குஜராத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர், தனது முதல் கார் வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் பதிவு வைரலானதற்கு முக்கியக் காரணம், 85 வயதில் அந்த முதியவர் புதிய தொழில் தொடங்கி, அதில் கிடைத்த வருமானத்தில் அந்த முதல் காரை வாங்கி இருப்பதுதான்.

nanaji

85 வயது ஹீரோ

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் சௌத்ரி. இவரைச் சுருக்கமாக நானாஜி என அழைக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த இவர், மற்றவர்களைப் போலவே ஒரு குறிப்பிட்ட வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார். ஆனால், அதன் பிறகு தான் அவருக்கு மற்றொரு தொழில் வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

பணி ஓய்வுக்குப் பின் ஆரம்பத்தில் தனியாக இருந்த நானாஜியும், அவரது மனைவியும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தங்களது மகள் வீட்டிற்கு சென்று, அங்கேயே தங்கிவிட்டனர். பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, ஒருநாள் தனக்கு தலைமுடி மிகவும் உதிர்வதாகத் தெரிவித்துள்ளார் அவரது மகள். எப்போதும் ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டவரான நானாஜி, உடனடியாக முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வேலையில் இறங்கி விட்டார்.

“எனது மகள் முடி கொட்டும் பிரச்சினை குறித்து சொன்னதும், நானே அதற்கான தீர்வைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன். எனவே, நானே சத்துக்கள் மிகுந்த எண்ணெய்யை தயாரிக்க திட்டமிட்டு ஆராய்ச்சியை ஆரம்பித்தேன். நானும் எனது மனைவியும் தங்கியிருந்த அறையே எனது ஆய்வுக்கூடமாக மாறியது. பலதரப்பட்ட ஆய்வுக்குப் பின், நான் கண்டுபிடித்த கூந்தல் எண்ணெய்யை எனது தலையிலேயே தடவி, சோதனை செய்து பார்த்தேன். என்னவொரு ஆச்சர்யம். எனது வழுக்கைத் தலையில் மீண்டும் முடி வளர ஆரம்பித்தது.”
oil

இந்தத் தகவலை எனது பேரப்பிள்ளைகள் சமூகவலைதளங்கள் மூலமாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினர். எனவே, மற்றவர்கள் இந்த எண்ணெய்யை எங்களுக்கு வேண்டும் என கேட்கத் தொடங்கினர். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ’Avimee Herbal' (அவிமீ ஹெர்பல்) தயாரிப்புகள், என 85 வயதில் தான் தொழில் முனைவோரான கதையை ஒரு இன்ஸ்டா ரீலில் தெரிவித்துள்ளார் நானாஜி.

ஆயுர்வேதா மீது ஆர்வம்

சிறுவயதில் இருந்தே நானாஜிக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. எனவே உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதையே அவர் வழக்கமாக வைத்திருந்துள்ளார். பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையே முழு நிவாரணத்தை தரும் என்பதே அவரது நம்பிக்கையாக இருந்துள்ளது. எனவே ஆயுர்வேத சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் நானாஜி ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

பீகாரில் அவர் தங்கியிருந்தபோது, அவரிடம் ஆயுர்வேத சிகிச்சைப் பற்றி சுமார் 2500 புத்தகங்கள் இருந்ததாக, 'Avimee Herbal' இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தப் புத்தகங்களைக் கொண்டு வீட்டிலேயே சிறிய நூலகம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்துள்ளார் நானாஜி.

with wife

அதோடு, தன் மனைவிக்கு சர்க்கரை நோய் வந்தபோது, அவரே ஆயுர்வேத முறைப்படி ஒரு எண்ணெய்யைத் தயாரித்துள்ளார். அந்த எண்ணெய்யைப் பயன்படுத்தியதன் மூலம் அவரது கால் வலி காணாமல் போய் விட்டதாம். ஆனால், அப்போதெல்லாம் அவரது இந்த கண்டுபிடிப்புகளை வீடு வரை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.

பயத்தால் உருவான தொழில்

இந்நிலையில்தான், ஹேர் ஆயில் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமானதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அவிமீ ஹெர்பல்(avimeeherbal) என்ற தனி பிராண்டை உருவாக்கி, தனது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தத் தொடங்கிவிட்டார் நானாஜி.

“கொரோனா வந்த பிறகு எனது மகள் முடி உதிர்வுப் பிரச்சினையால் மிகவும் சிரமப்பட்டார். என்னைப் போலவே அவருக்கும் தலையில் உள்ள முடி எல்லாம் கொட்டி, வழுக்கை ஆகி விடுமோ எனக் கவலைப் பட்டேன். எனவே, ஆயுர்வேதத்தில் எனக்கிருந்த அறிவைக் கொண்டு ஒரு எண்ணெய்யைத் தயாரிக்க முடிவு செய்தேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரமான பொருட்களை வர வைத்து, 50 வகையான மூலப் பொருட்களைக் கொண்டு அந்த கூந்தல் எண்ணெய்யைத் தயாரித்தேன்.”

அக்கம்பக்கத்தார் மற்றும் உறவினர்களிடம் அந்த எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு இருக்கவே, அதனை மற்றவர்களுக்கும் விற்பது என முடிவு செய்தோம்.

”ஆரம்பத்தில் நானும், எனது மகளும் சேர்ந்து சிறிய அளவில் இன்ஸ்டாகிராம் மூலமாகவே விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஆனால் எனது பேத்தியின் மூலம் எனது கதை இணையத்தில் வைரலாகி விட்டது. ஒரே நாளில் நான் சமூகவலைதளப் பிரபலம் ஆகிவிட்டேன்,” என்கிறார் நானாஜி.

avimee

இப்போது தனி இணையதளம் தொடங்கி தங்களது தயாரிப்புகளை நானாஜி விற்பனை செய்து வருகிறார். அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிறார். கூடவே உடல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கு என ஆரோக்கிய உணவுகள் மற்றும் எண்ணெய் தயாரிப்புகள் போன்ற வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர் நானாஜியும், அவரது மனைவியும்.

சக்சஸ் பார்முலா

ஒரே வருடத்தில் வியாபாரம் மேலும் சூடுபிடிக்க, இப்போது தனது 85 வயதில் புதிய காரை வாங்கி அசத்தி இருக்கிறார் நானாஜி. தான் புதிய கார் வாங்கிய வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, தற்போது சுமார் 29 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களைக் கடந்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

ஆறே மாதத்தில் தனது தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டதையும் அந்தப் பதிவில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ள நானாஜி, தனது வெற்றிக்கான சூத்திரமாக பின்வருபனவற்றைக் குறிப்பிடுகிறார்.

1. விஷன் மற்றும் மிஷன் (Vision & Mission): ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி மீண்டும் முடி வளர்ச்சியைத் தூண்டுவது என்ற தெளிவான இலக்கை நாங்கள் கொண்டிருந்தோம்.

2. நம்பிக்கை: பொதுவெளியில் எங்களது தயாரிப்புகள் விமர்சனத்திற்கு ஆளானபோதும், நாங்கள் மோசடி செய்வதாக பலர் பகிரங்கமாக குற்றம் சாட்டியபோதும், தொடர்ந்து எங்களை இயங்கச் செய்தது எங்களது நம்பிக்கை தான். நாங்கள் சரியானதையே செய்து கொண்டிருப்பதாக நம்பினோம். அதுவே எங்களுக்கு ஊக்குவிப்பாக இருந்தது.

3. கடின உழைப்பு: கடின உழைப்பிற்கு ஈடு இணையே எதுவும் கிடையாது. ஓர் இரவில் வெற்றி பெற்றதன் பின்னணியில் எனது 25 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது.

4. குழுவாகப் பணிபுரிதல்: குழுவாகச் சேர்ந்து பணி புரிவதைப் பற்றி எப்போதுமே குறைவாக எண்ணி விடாதீர்கள். ஆரம்ப நாட்களில் எனது குடும்பமே ஒரு குழுவாக இருந்து எனக்கு உதவினார்கள். அவர்களது உதவியில்லாமல் என்னால் இவ்வளவு தூரம் நிச்சயம் வளர்ந்திருக்க முடியாது, என அந்தப் பதிவில் நானாஜி தெரிவித்துள்ளார்.

வயோதிகம் என ஏழாவது எட்டிலேயே ஓய்வுக்குத் தயாராகும் மக்களுக்கு மத்தியில், 85 வயது என்பது எதற்குமே தடையாக இருக்கவில்லை என்பதை தனது செயல் மூலம் நிரூபித்துக் காட்டி இருக்கிறார் நானாஜி.

85 வயதில் அவர் தனது முதல் காரை வாங்கியதற்காக மட்டுமல்லாமல், அவரது வாழ்க்கை மூலம் பலருக்கும் உற்சாகம் ஊட்டி வருவதற்காகவும் நானாஜியை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

“எஞ்சியிருக்கும் என் வாழ்நாளில் முடிந்தவரை தினமும் மற்றவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என விரும்பினேன்.. விரும்புகிறேன். இதுவே எனது நோக்கமாக உள்ளது. உங்களது நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் உங்களது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,” என்கிறார் நானாஜி.

Montage of TechSparks Mumbai Sponsors