நம் வாழ்கையில் ஒரு சிலரை பார்த்தால் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடத்தொன்றும். அப்படி ஒருவர் தான் பிரபுதாஸ். விபத்து ஒன்றில் தனது இடது காலை இழந்த இவர் தற்போது ஒரு டான்சர். ஒரு காலோடு பாடலுக்கு நடனம் ஆடி அரங்கத்தையே அதிரச்செய்தவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தோம்.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன் என்ற படி பிரபுதாஸோடு பேச்சுக்கொடுத்தோம்.
" நான் அவ்வளவாக படிக்கவில்லை. குடும்ப கஷ்டம் காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டேன். அப்பா ரயில்வேயில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். எனக்கு ஒரு தம்பி. அண்ணனாக குடும்ப பொறுப்புகளை சுமக்க வேலைக்கு சென்றேன். யார் எந்த வேலைக்கு கூப்பிட்டாலும் சென்றுவிடுவேன். நான் பார்க்காத வேலை இல்லை என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 12வருடங்களுக்கு முன்னால்..." என்று சொல்லி ஒரு நிமிடம் மெளனமாக இருந்தார்.
"சொல்லுங்கள்" என்று சொல்லி அவரின் மௌனத்தை கலைக்க,
"கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்னால் எனக்கு பெயிண்டிங் வேலை பார்க்க அழைப்பு வந்தது. சரி போகலாம் என்று சென்னை உள்ளூர் ரயில் ஏறி புறப்பட்டேன். கூட்ட நெரிசலில் ரயிலில் இருந்து கீழே விழுந்து எனது இடது காலை இழந்தேன்".
அதுவரை கிடைத்த வேலைக்கு சென்று கொண்டு வீட்டிற்கு சம்பாரித்துக்கொண்டிருந்த என்னால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னுடைய வீட்டிலும் அதே நிலைமை தான். அவ்வளவாக படிக்காதவர்கள், நடுத்தர குடும்பம் தான். என்னுடைய எதிர்காலத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்கள்.
இனி இவன் எதிர்காலம் அவ்வளவு தான் என்று என் காது படவே சொந்தங்கள் எல்லாம் பேசினார்கள். நாம் இப்படியே இருந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. அப்போது தான் 'டான்சர்' படம் வெளியானது. அதில் டான்சர் குட்டி ஒரு காலோடு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தார். அந்தப்படத்தைப் பார்க்கும் போது தான் என் வாழ்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. ஒரு காலை வைத்துக்கொண்டு இவ்வளவு அழகாக இவரால் நடனம் ஆடும் போது நம்மால் ஏன் முடியாது என்று தோன்றியது.
அன்று நான் எடுத்த முடிவு தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. வீட்டிற்கு சென்று நான் டான்ஸ் ஆடப்போகிறேன் என்று சொன்னேன். என் அப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது. திட்டி தீர்த்துவிட்டார். ஒரு காலோடு எப்படி உன்னால் டான்ஸ் ஆட முடியும் என்று அம்மா அமைதியாகக் கேட்டார்கள். என்னால் முடியும் என்று சொல்லி முறையாக டான்ஸ் கற்றுக்கொள்ள ஒரு டான்ஸ் மாஸ்டரை தேடினேன். என்னுடைய இந்த முடிவை அப்பா ஏற்றுக்கொள்ளவே இல்லை. அம்மா எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்.
டான்சர் படத்தை பல முறை பார்த்தேன். குட்டி போடும் ஸ்டெப்பை கவனமாக பார்த்து நானும் ஸ்டேப் போட்டேன். முதலில் கடினமாக இருந்தது. சரி இனி நமக்கு ஒரு மாஸ்டர் தேவை என்று முடிவு செய்து பலரை சந்தித்தேன். இறுதியாக ஜெயசீலன் மாஸ்டரை சந்தித்தேன். நான் டான்ஸ் ஆட ஆசைப்படுகிறேன். எனக்கு சொல்லிக்கொண்டுங்கள் என்று சொன்னேன். உன்னால் ஆட முடியுமா என்று கேட்டார்?
கையில் வைத்திருந்த ஸ்டிக்கை தூக்கிப்போட்டுவிட்டு ஒரு காலோடு ஒரு ஸ்டெப் போட்டுக்காட்டினேன். அசந்துவிட்டார். உனக்கு நான் சொல்லித்தருகிறேன் என்று சொல்லி எனக்கான பிரத்யேக ஸ்டெப்களை உருவாக்கி சொல்லிக்கொடுத்தார்.
நானும் நன்றாக ஆடினேன். நான்கு சுவருக்குள் நீ ஆடினால் யாருக்கும் தெரியாது, மக்கள் முன் ஆடி உன்னை நிருபித்துக்காட்டு என்று மாஸ்டர் சொன்னார். அந்த சமயம் எங்கள் பகுதியில் ஊர் திருவிழா நடந்தது. ஊர் பெரியவர்களிடம் டான்ஸ் ஆடுவதற்கு அனுமதி கேட்டேன். முதலில் மறுத்தனர். பிறகு சரி ஆடு என்று சொல்லிவிட்டனர். அது தான் என்னுடைய முதல் மேடை. 4 பாடலுக்கு தொடர்ச்சியாக நான் ஆடிய நடனத்தைப் பார்த்து எல்லோரு அசந்துவிட்டனர். ஒரு காலை வைத்துக்கொண்டு இப்படி நடனமாடுகிறானே இவன் என்று எல்லோரும் என்னை பாராட்டினார்கள்.
இந்த விஷயம் உள்ளூர் செய்தித்தாள்களில் வர கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பெயர் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அந்த பகுதி முழுவதும் என்னுடைய நடனத்தை விரும்பினார்கள். வீட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி பொது நிகச்ழ்சிகள் வரை எந்த நிகழ்ச்சி எங்கள் பகுதியில் நடந்தாலும் என்னுடைய நடனம் கண்டிப்பாக இருக்கும். அவர்களுடைய நண்பர்கள், நண்பர்களுடைய நண்பர்கள் என அனைவருடைய நிகழ்ச்சிகளிலும் என்னை டான்ஸ் ஆட கூப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக ப்ரோக்ராம் வர ஆரம்பித்தது. என்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிகழ்சிகள் குவிந்தன.
நானே சில நிகழ்ச்சிகளை தவிர்த்துவிடுவேன். அதுவரை என் மீது கோபமாக இருந்த என் அப்பா என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்பட்டு என்னிடம் பேசினார். ஒரு நாள் நான் வீட்டில் இருந்தாலும், இன்னைக்கு ப்ரோக்ராம் இல்லையா என்பார். என்னை விட என் அப்பா தான் என் டான்சை ரசிக்கிறார், என்று புன்னகை பூக்க பேசியவரிடம், "ஒரு காலால் குறைந்தது 4 பாடலுக்கு டான்ஸ் ஆடும்போது உங்கள் உடல் எப்படி ஒத்துழைக்கிறது?" என்று கேட்க,
"கால் வலி அதிகமாக இருக்கும், காலை நீட்டி மருந்து தேய்த்துக் கொள்வேன். தொடர்ச்சியாக டான்ஸ் ஆடுவதால் சில சமயங்களில் காலை அசைக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும், என்னுடன் இருந்து என்னை என் மனைவி தான் பார்த்துக்கொள்வார்,"
என்றவரை இடை மறித்து, "உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?" என்றோம்,
"ஆயிருச்சு..! ஒரு பையன் இருக்கான். மனைவி பெயர் கலாவதி, பையன் பெயர் பிரவீன் ராஜ். ஒரு வயசு ஆகிறது. என்னுடைய நடனத்தைப் பார்த்து என்னை விரும்பி கல்யாணம் செய்துகொண்டார். சொந்தம் தான். இருந்தாலும் மனசு வேணுமே... என்று மனைவியை நினைத்து ஆனந்த பெருமூச்சு விட்டார்.
பெரும்பாலும் உங்களை அழைக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன? என்று நாம் கேட்க, "பெரும்பாலும், கோவில் திருவிழாக்கள், கல்யாணம், போன்ற நிகழ்சிகளுக்கு அழைப்பார்கள், கல்லூரி, பள்ளிகளில் கூப்பிடுவாகள். என்னை பார்த்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக, அங்கே என்னைப் பற்றி சொல்லி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைப்பேன். சில சமயங்களில் பெரிய குழுக்களோடு இணைந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். ஒரு போன் போட்டு தேதி சொன்னால் போதும், அந்த தேதியில் நான் வேறெங்கும் நிகழ்ச்சிக்கு செல்கிறேனா இல்லையா என்று சொல்லிவிடுவேன். இது தான் என் நம்பர், உங்கள் வீட்டு நிகழ்ச்சியோ, அல்லது உங்கள் நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சியோ, ஒரு போன் போடுங்கள் போதும்" என்று நம்பிக்கை மிளிர போன் நம்பரை கொடுத்தார் பிரபுதாஸ்.
பிரபுதாஸ் தொடர்பு கொள்ள : 9790358354
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
மாற்றுத்திறனாளி அல்ல! உலகை மாற்றும் திறனாளி: ஸ்ரீகாந்த் போளா...!
இணையத்தில் அதிக ஃபாலோயர்களை கொண்ட மாற்றுத்திறனாளி மாமனிதர்