இறுதிச்சுற்று வாய்ப்பிற்காக காத்திருக்கும் நிஜ நாயகி 'துளசி ஹெலன்'
பண பலமும் உரிய அங்கீகாரமும் கிடைத்திருந்தால், ஒலிம்பிக்கில் சென்று இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் ஒன்றை நிச்சயம் வென்று கொடுத்திருப்பேன் என அதற்கான தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை துளசி ஹெலன்.
தனக்கான ஒரு இறுதிச்சுற்று கிடைக்காதா என ஆவலுடன் காத்திருக்கும் இந்த நிஜ நாயகி, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்ப கட்ட வாழ்க்கை
சிறு வயது முதலே வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் கடப்பது துளசிக்கு பெரும் கஷ்டமாகவே இருந்துள்ளது. கால் ஊனமான தந்தையால் தன் குழந்தைகளுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத நிலையில், தன் அக்கா சரஸ்வதிக்கு குத்துச் சண்டை விளையாட்டின் மீது இருந்த ஆர்வம், துளசிக்கும் அவ்விளையாட்டின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அதற்கான எந்த ஒரு பயிற்சியையும் முறையாக மேற்கொள்ளாமல் அக்காவின் விளையாட்டை மட்டும் ரசித்து வந்துள்ளார் துளசி.
இது இவ்வாறு இருக்க, ஒரு நாள் அக்காவின் குத்துச் சண்டை போட்டியை பார்க்க சென்றுள்ளார் துளசி, அப்போது, அவரின் அக்கா எவ்வளவு திறைமையாக விளையாடிய போதும், நடுவர்கள் அவரை வெற்றியாளராக அறிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த துளசி நடுவர்களோடு பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
”உனக்கு குத்துச் சண்டையை பற்றி என்ன தெரியும்? உன்னால் முடிந்தால் முதலில் குத்துச் சண்டை கற்றுப் பார். அதன் பின்னர் இங்கு வந்து உன் வீரத்தைக் காட்டு ” என சவால் விட்டுள்ளனர் நடுவர்கள். இது துளசியின் ஆழ் மனதில் புதைந்திருந்த குத்துச் சண்டை ஆசையை தூண்டி விட்டுள்ளது. அப்போது அவருக்கு வயது 12 மட்டுமே.
பயிற்சிக் காலம்
12 வயதில் குத்துச் சண்டை பயிற்சியை ஆரம்பித்த துளசி ஹெலனுக்கு, பயிற்சியின் ஆரம்ப கட்டமே சவால் மிகுந்ததாகத்தான் இருந்துள்ளது.
அவரது பயிற்சிக்குத் தேவையான பண உதவி கூட, அவரது குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்காத நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய துளசி, கண்ணில் பட்ட வேலைகளை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, தன் படிப்பையும், குத்துச் சண்டை பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய 18 வயது வரை தன் சித்தி தான் தனக்கு பெரும் ஆதரவாக இருந்ததாக சொல்லும் துளசி,
"10 ஆவது வரைக்கும் தான் என்னால் படிக்க முடிந்தது. அதன் பின்னர் முழு நேர குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டேன், ஆனால் இன்று வரை என் குடும்பத்தின் ஆதரவு எனக்கு கிடைக்கவில்லை," என வருத்தத்துடன் தெரிவித்தார்.
பங்கு பெற்ற போட்டிகள்
குத்துச் சண்டை விளையாட்டின் மீது துளசிக்கு ஆர்வம் ஏற்பட, அவரின் அக்கா ஒரு காரணமாக இருந்தாலும், பிரபல குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியை பார்த்து தான் இந்த விளையாட்டு மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார் துளசி ஹெலன். இன்று வரை தன்னை எல்லோரும் "லேடி முகம்மது அலி" என்று செல்லமாக அழைப்பதாக பெருமையுடன் நம்மிடம் தெரிவித்தார் துளசி.
தனது 12 வயது முதல் முறையாக பயிற்சிகளை மேற்கொண்ட துளசி, கடந்த 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிய துளசி, "என்னை குத்துச் சண்டையில் தோற்கடிக்க தமிழகத்தில் எந்த குத்துச் சண்டை வீராங்கனையாலும் முடியாது," என நெஞ்சுறுதியுடன் நம்மிடம் தெரிவித்தார்.
இந்தியா சர்பாக ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமை ஒரு முறையேனும் எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டும் என்பதே என் ஆசை, என கூறுகிறார் துளசி.
பல முறை தான் மேரி கோமுடன் மோதியதாக சொல்லும் துளசி ஹெலன், ஒவ்வொரு முறை தான் விளையாடும் போதும், நடுவர்கள் மேரி கோமை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயெ செயல்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.
பணபலமும், உரிய அங்கீகாரமும் கிடைத்தால் நிச்சயம் இந்தியாவிற்காக பல பதக்கங்களை தன்னால் வெல்ல முடியும் என தெரிவிக்கும் துளசி ஹெலன், தற்போது, தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் பகுதி நேர பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இறுதிசுற்றுப் படம் பற்றி...
இறுதிச்சுற்றுப் படத்தின் கதையானது, தன்னுடைய சொந்தக் கதைதான் எனக் கூறும் துளசி, இப்படத்தின் இயக்குனர் சுதா, பல தடவை தன்னை நேரில் சந்தித்து தன் கதையை கேட்டதாகக் கூறினார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பானதாக இருந்ததாக கூறிய துளசி,
இப்படத்தில் வருவது போல், ஒருபோதும் குத்துச் சண்டை வீராங்கனைகள் அவர்களது பயிற்சியாளரை காதலிக்க மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை பயிற்சியாளர்கள் ஒரு குரு மாத்திரமின்றி அவர்களை எங்கள் தந்தையாக பாவிப்போம், என்கிறார்.
குத்துச் சண்டையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முறை தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியதாக சொல்லும் துளசி, இதுவரை தனக்கான அங்கீகாரம் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
குத்துச் சண்டையில் பிரகாசிக்க முடியாவிட்டாலும், காவல்துறை பணிக்காவது செல்லலாம் என பல முறை முயற்சி செய்தும், உயரம் குறைவாக இருந்த காரணத்தினால், தன்னால் அதில் கூட தேர்வாக முடியவில்லை என மிக கவலையுடன் தெரிவித்தார்.
தனக்கான இறுதிச் சுற்று நிச்சயம் கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கும் நிஜ நாயகி துளசி ஹெலனின் கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்ற வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு கனத்த இதயத்துடன் அவரிடம் இருந்து விடை பெற்றோம்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
'முகவரி தந்த முதல் வெற்றி'- தெருவோர குழந்தைகளின் ரோல்மாடல் ஆகியுள்ள ஹெப்சிபா
பேச முடியாத பயில்வானின் ஓசையற்ற குரலுக்கு காது கொடுப்பார்களா?