பாலியல் வன்முறை சாத்தியமுள்ள பகுதிகளைச் குறிக்கும் வரைபடத்தை உருவாக்கியுள்ள மாணவி!
பெங்களூருவைச் சேர்ந்த மாணவியான நுபுர் பட்னி பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அத்தகைய சம்பவங்கள் குறையவும் ‘It’s not my fault’ என்கிற வரைபடத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.
அரசாங்கம் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கான பல்வேறு தீர்வுகள் குறித்து தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில் சில தனிநபர்களும் இதில் பங்களித்து வருகின்றனர்.
பெங்களூருவின் சிருஷ்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட், டிசைன் அண்ட் டெக்னாலஜி மாணவியான 21 வயது நுபுர் பட்னி ஒரு வரைபடத்தை உருவாக்கியுள்ளார். இதில் நகரில் அதிகளவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கக்கூடிய பகுதிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
நுபுரின் இந்தத் திட்டத்தின் பெயர் ‘It’s not my fault’. இது பாதிக்கப்பட்டோருக்கும் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் உதவியாக இருப்பதுடன் இதுபோன்ற குற்றங்கள் குறையவும் வழிவகுக்கும்.
’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் நுபுர் கூறும்போது,
“ஈவ் டீசிங் உள்ளிட்ட பாலியல் ரீதீயான துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் முன்வந்து புகார் அளிக்கின்றனரா என்பதைக் கண்டறிவதே என்னுடைய முயற்சியின் நோக்கம். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த ப்ராஜெக்டில் துன்புறுத்தல் சம்பவங்கள் பற்றிய விவரங்கள் மொபைல் கேமரா (கூகுள் கேமரா) வாயிலாக தொகுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடக்க சாத்தியமுள்ள பகுதிகள் குறித்து பாதிக்கப்படாதவர்களை எச்சரிக்கலாம். இத்தகைய ஆபத்து குறித்து காவல்துறைக்கும் தெரியப்படுத்தலாம்,” என்றார்.
அடுத்தகட்டமாக நுபுர் ஆக்மெண்டட் ரியாலிட்டி சார்ந்து நிறங்களால் காட்சிப்படுத்தப்படும் வெப்ப வரைபடங்களை (heat map) உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பாலியல் ரீதியான துன்புறுல்கள் நடப்பதற்கு சாத்தியமுள்ள பகுதிகள் அடையாளம் காட்டப்படும்.
இது பெண்களுக்கான பகுதி என்றும் இதில் அவர்கள் குறிப்பிட்ட இடம் தொடர்பான அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் நுபுர் குறிப்பிடுகிறார்.
நுபுர் இந்த வரைபடத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தனது திட்டத்தில் ஆர்வம் காட்டிய பெங்களூரு நகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவை சந்தித்தார். காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் கூறும்போது,
“அவர் (நுபுர்) மிகச்சிறந்த முயற்சி மேற்கொண்டுள்ளார். இது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் மதிப்பு சேர்க்கும். எனவே இந்த முயற்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல கூடுதல் கவனம் செலுத்துமாறு அவரிடம் தெரிவித்தேன். பெங்களூருவில் பெண்களுக்கு அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கும் இடங்களை சுட்டிக்காட்டும் வரைபடத்தை உருவாக்குவதற்கு அவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து உதவத் தயாராக உள்ளார்.
பெங்களூருவை பாதுகாப்பான நகரமாக உருவாக்கும் எங்களது திட்டத்திற்கு இத்தகைய விவரங்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவோம்,” என்று தெரிவித்ததாக ’இந்தியா டுடே’ குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA