பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் சீமா!
பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வாழ்வை அளித்திட தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார் சீமா.
பிரியாவிற்கு வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் புனேவில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள போரி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடக்க உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரியாவைப் போன்றே புனேவின் சிகப்பு விளக்கு பகுதியான புத்வர் பெத் பகுதியில் பாலியல் தொழிலாக இருப்பவர்களை மக்கள் மரியாதையின்றியே நடத்தி வந்தனர். பாலியல் ரீதியான சுரண்டல் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பிய பிரியா, சீமாவை அணுகினார். இவ்வாறு இதிலிருந்து விடுபட விரும்பும் பாலியல் தொழிலாளர்களை மீட்டு வருகிறார் சீமா.
இந்தப் பகுதியில் உள்ள மற்றவர்களும் இந்த நடைமுறையில் ஈடுபட்டுள்ள இளம் வயதினர் குறித்து தெரிவிக்கலாம். காவலர்களின் உதவியுடன் அவர்கள் மீட்கப்படுகின்றனர்.
அபிலாஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மற்றொரு பெண் பிகாம் முடித்துவிட்டு வங்கிப் பிரிவில் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். காயகல்பாவைச் சேர்ந்த சீமா வாக்மோட் இந்த இரு பெண்களும் தங்களது வாழ்க்கையைத் தொடர உதவியுள்ளார்.
அபிலாஷா தனது படிப்பைத் தொடர இவரது நிறுவனம் 52,000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளது. ஆனால் தான் செய்து முடிக்க வேண்டிய பணி ஏராளம் என்கிறார் சீமா.
1993ம் ஆண்டு சீமா ஹெச்ஐவி-எய்ட்ஸ் தொடர்பாக இந்தியாவில் செயல்படும் மாநில அரசாங்கத்தின் ஆய்வுக்குழுவில் சேர்ந்தார். இந்த நோய்க்கிருமி குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பாலியல் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய இந்தக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் புனேவின் சிகப்பு விளக்குப் பகுதியான புத்வர் பெத் பகுதியை வந்தடைந்தபோது சுகாதார ஆய்வு மட்டும் மேற்கொள்வதில் பலனில்லை என்பதை சீமா உணர்ந்தனர்.
சீமாவால் பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது குழந்தைகளையும் அதே நிலையில் விட்டுத் திரும்ப முடியவில்லை. சீமா அவர்களது மேம்பாட்டிற்காக பணிபுரிய விரும்பியபோது அவரது கணவர் சிரீஷ்,
“அவர்களுக்காக நீ பணிபுரிய விரும்பினால் நீ தாராளமாக ஈடுபடலாம். ஆனால் இதில் அதிக கஷ்டங்கள் இருக்கும்,” என்றார்.
போராட்டம் நிறைந்த வாழ்க்கை
புனேவின் புத்வர் பெத் சிகப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளும் உள்ளனர். ஒருமுறை சீமா இந்தப் பகுதிக்கு சென்றிருந்தபோது சிறுவன் ஒருவன் தனது அம்மாவிடம் தனக்கு பசியெடுப்பதால் அவர் அதிக வாடிக்கையாளர்களுடன் இருக்குமாறு கூறியதைக் கேட்டுள்ளார். இந்த சம்பவம் சீமாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.
அந்தக் குழந்தைகள் அத்தகையச் சூழலில் பிறப்பது அவர்களது குற்றமல்ல என்பதை உணர்ந்த சீமா அவர்களுக்கு உதவ விரும்பினார். அந்தக் குழந்தைகள் குற்றமற்றவர்கள் என்றும் அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் நினைத்தார்.
ஓராண்டிற்குப் பிறகு 1994-ம் ஆண்டு புத்வர் பெத் பகுதியில் ’காயகல்பா’ (Kayakalpa) அமைத்தார். பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையமாக விளங்குவதுடன் ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயாளிக்கும் சேவையளிக்கும் ஒரே அரசு சாரா நிறுவனமாக இது உருவானது.
பராமரிப்பு மையம்
இருபதாண்டுகள் கழிந்த நிலையில் சீமா 10,000-க்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவரை மேடம், அக்கா, அம்மா என்றும் தற்போது பாட்டி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.
2006-ம் ஆண்டு பாலியல் தொழிலுக்கான கடத்தல்கள் உச்சத்தில் இருந்தது. இதில் பெரிதாக யாரும் தலையிட்டு தீர்வுகாணவில்லை. குழந்தைகள் தங்களது அம்மா பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அருகிலிருந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிந்துகொண்டு இவரது நிறுவனம் ’காயகல்பா’ புனே ஒய்எம்சிஏ உடன் இணைந்துகொண்டு அந்தக் குழந்தைகளை பராமரிப்பதற்கான வசதியை ஏற்பாடு செய்தது.
இதைத் தொடர்ந்து சீமாவும் அவரது கணவரும் அந்தக் குழந்தைகளின் இருப்பிடத்தை அந்த மாவட்டத்தில் இருந்து சற்று தொலைவில் அமைக்கத் தீர்மானித்தனர். 2015-ம் ஆண்டு அவரது புகுந்த வீட்டினரான வாக்மோட் குடும்பத்தினர் போரி கிராமத்தில் ஒரு இடத்தை நன்கொடையாக வழங்கினர். அத்துடன் ஸ்காட்டிஷ் நன்கொடை நிறுவனத்தின் நிதியுதவியுடன் 6,500 சதுர அடியில் ’The Free to Live Trust’ குழந்தை மேம்பாட்டு மையம் கட்டப்பட்டது.
”இதையே நான் அவர்களுக்காக உருவாக்க விரும்பினேன்,” என்று ’சோஷியல் ஸ்டோரி’ உடன் சீமா பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஆண்டு மற்றொரு கட்டிடமும் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடவசதி செய்யப்பட்டது. போதுமான இடம் இருப்பதாகவும் விளையாட்டு மைதானம், தண்ணீர் தொட்டிகள் போன்ற இதர வசதிகளை செய்துகொடுக்க நிதிப்பற்றாக்குறை இருப்பதாகவும் சீமா தெரிவிக்கிறார்.
பெரிய குடும்பம்
இந்த மேம்பாட்டு மையம் அவரது மாமனார் ஹரிபாவ் வாக்மோட் படீல் பிரதிஷ்தான் அவர்களின் பெயரிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், தங்களது குழந்தைகளை பராமரிக்கும் பாலியல் தொழிலாளிகள் என அனைவரும் இங்கு வரவேற்கப்படுகின்றனர் என்று சீமா குறிப்பிட்டார்.
”உங்களுக்காக நான் இருக்கிறேன். எப்படிப்பட்டச் சூழலிலும் நீங்கள் அவர்களுக்கு துணை நிற்கவேண்டும்,” என்பதே சீமா அங்குள்ளவர்களுக்கு தெரிவிக்கும் முக்கிய கருத்து.
ஒருமுறை அதிகாலை நேரத்தில் ஒரு பச்சிளம் குழந்தை மையத்தின் வெளியே இருந்தது. அந்தக் குழந்தையை வரவேற்று ’ஏஞ்சல்’ என பெயரிட்டார். தற்போது அந்தக் குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது.
யாசகம் கேட்கிறார்
63 வயதாகும் சீமா, தன்னை நவீன பிச்சைக்காரி என்றே அழைத்துக்கொள்கிறார். மற்றவர்களிடம் கேட்டு பெறப்படும் தொகை ஒரு உன்னத நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதால் அது குறித்து தனக்குக் கவலையில்லை என்கிறார்.
“எனக்கு எதற்காக குற்ற உணர்ச்சி ஏற்படவேண்டும்?” என்று சீமா கேள்வியெழுப்புகிறார். தனது அரசு சாரா நிறுவனத்தை சிறப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளை சீமா தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். அவரிடம் உதவி பெற்ற அனைவரும் இதை நன்கறிவர்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சீமா புத்வர் பெத் பகுதியில் உள்ள காயகல்பா அலுவலகத்தில் கால் பதித்தபோது அங்கு வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. சீமாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாட இதய வடிவில் மலர் தூவப்பட்டிருந்தது.
பாலியல் தொழிலாளர்கள் 60,000 ரூபாய் திரட்டி சீமாவிற்கு பரிசளித்தனர்.
”நான் கூடுதலாக 40,000 ரூபாய் சேகரித்து என்னுடைய குழந்தைகள் சுத்தமான பால் பருகுவதற்காக ஒரு மாடு வாங்கினேன். தற்போது எங்களது பண்ணையில் வாத்து, முயல், மாடு போன்றவை உள்ளன,” என்றார்.
2004-ம் ஆண்டு காயகல்பாவிற்கு பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து ஆறாண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு கேட்ஸ் குடும்பத்தினர் அவர்களது மையத்தை பார்வையிட்டனர்.
உதவிக்கான பலன்
இந்த பாலியல் தொழிலாளர்கள் புறக்கணிப்படுகின்றனர். இவர்களது குறைகளை தீர்த்துவைப்பதற்கு அரசாங்கம் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை என்பதை சீமா உணர்ந்தார்.
குறைந்தபட்சம் ஆணுறை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவேண்டும் என்கிறார். சிகிச்சைக்கு மாதந்தோறும் செலவிடவேண்டிய தொகையான 5,000 ரூபாய் இல்லாததால் வேறு வழியின்றி அவதிப்படுகின்றனர். இதனால் நோயாளியின் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடுகிறது.
நோய்க்கான சிகிச்சையாக மருந்துகள் எடுத்துக்கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் நோயாளிகள் உட்கொள்ளவேண்டும். பாலியல் தொழிலாளர்கள் சுமார் எட்டாண்டுகள் உணவிற்கான நிதியைப் பெறும் வரை சமூக சமையலறை நடத்தினார்கள். பின்னர் நிறுவனம் குழந்தைகளுக்கான உணவை ஏற்பாடு செய்தது. அவர்கள் பள்ளிக்குச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
சீமாவின் இந்த முயற்சி எளிதாக இருந்துவிடவில்லை. மக்கள் தயக்கம் காட்டினர். அவரது நோக்கத்தை சந்தேகித்தனர். நீண்ட காலம் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தனக்கான நேரத்தை அவர் ஒதுக்கிக்கொள்ளவேண்டும் என்றும் சிலர் கருதினர்.
சீமாவின் மூத்த மகளுக்கு திருமணம் நடந்தபோது அவர் தன் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து தன் தங்கையுடனாவது நேரம் செலவிடவேண்டும் என்றும் சீமாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் ஒருவர் மனமுவந்து தேவை இருப்போருக்கு உதவி செய்யும்போது அதற்கான பலன் நிச்சயம் உண்டு என்று சீமா பதிலளிக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா