இந்தியாவில் மது பானங்கள் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஸ்டார்ட் அப்!
நிதின் விஷ்வாஸ் ’கடவுளின் பானம்’ என்றழைக்கப்படும் ’மீட்’ (mead) குறித்து விமான பயணத்தின்போது ஒரு பத்திரிக்கையில் படித்தார். பழமையான மதுபானம் குறித்த அந்த கட்டுரை இவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. பயணம் முடிந்து தரையிரங்கியதும் இந்தத் தகவலை ஆர்வம் கொண்ட நெருங்கிய நண்பரான ரோஹன் ரெஹானியுடன் பகிர்ந்துகொண்டார்.
பொறியாளர்களாக பயிற்சி பெற்ற இவ்விருவருமே McKinsey, Abbott, Monster போன்ற பெரிய கார்ப்பரேட்களுடன் பணியாற்றியுள்ளனர். இவர்கள் மதுபான வகையான ’மீட்’ குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தனர். இந்த பானம் தேனை தண்ணீருடன் சேர்த்தோ அல்லது சில சமயம் பல்வேறு பழங்கள், மசாலாக்கள், தானியங்கள், போன்றவற்றுடன் சேர்த்தோ புளிக்கவைத்து தயாரிக்கப்படும் மதுபானம் ஆகும்.
இவ்வாறு உருவானதுதான் மூன்ஷைன் மெடரி (Moonshine Meadery).
2014-ம் ஆண்டு மீட் வகை மதுபானம் குறித்து சோதனை செய்யத் துவங்கிய இணை நிறுவனர்கள் 2016-ம் ஆண்டு தங்களது முயற்சியைத் துவங்கினர்.
மீட் என்றால் என்ன?
’மீட்’ தேனை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு புளிக்கவைக்கப்பட்டு தயாரிக்கபடும் பானம் என அமெரிக்க மீட் மேக்கர்ஸ் அசோசியேஷன் விவரிக்கிறது.
”பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, பீர் மற்றும் பாரம்பரிய திராட்சை ரசம் அறிமுகமாவதற்கு முன்பே, மனிதன் அறிந்த மிகவும் பழமையான மது பானம் இது,” என இந்த அசோசியேஷன் தெரிவிக்கிறது.
விவசாயம் துவங்குவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்த இந்த பானம் வேதங்களிலும் வைகிங் நாட்டுப்புறவியலும் இடம்பெற்றுள்ளது. இதில் 4 முதல் 18 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது.
மைசூரைச் சேர்ந்த 34 வயது நிதின் கூறுகையில், “ரோஹனுக்கும் எனக்கும் வீட்டிலேயே கொதிக்கவைத்து வடிகட்டி பீர் தயாரிக்க உதவும் கிட் பரிசாகக் கிடைத்தது. வணிக ரீதியாக அல்லாமல் வீட்டிலேயே மது தயாரித்துப் பார்க்கும் ஆர்வம் இருவருக்கும் ஏற்பட்டது,” என்றார்.
மீட் குறித்து இருவரும் ஆராய்கையில் இந்தியாவில் இன்னமும் பல சமூகத்தினர் உள்ளூர் மதுவை தயாரிப்பது தெரியவந்ததால் இந்த மது பானம் மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது.
இருவரும் பாரம்பரிய மீட் மது வகையை வீட்டிலேயே தயாரிக்கத் துவங்கினர். விரைவிலேயே முசுக்கட்டை (hops), திராட்சை, பருவகாலத்திற்குரிய பழம் என உள்ளூர் உற்பத்தியைக் கொண்டு ஆய்வு செய்யத் துவங்கினர்.
நண்பர்கள் இதன் சுவையை முயற்சித்துப் பார்த்தனர். இந்த புதிய பானம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. விரைவில் இந்த பானத்தை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் உற்பத்தியை நிறுத்திவிடுவது குறித்து நிதினும் ரோஹனும் சிந்தித்தனர். ஆனால் அவர்களது தயாரிப்பை சுவைத்தவர்கள் அதிக விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதுவே இவர்கள் வணிக முயற்சியை கையில் எடுக்க குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.
துவக்கம்
தொழில்முறையாக கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கும் அனுபவம் இல்லாததால் ரோஹன் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள Colony Medery-ல் இண்டர்ன்ஷிப்பில் சேர்ந்தார். அத்துடன் மீட் தயாரிப்பில் தேன் முக்கிய மூலப்பொருள் என்பதால் தேனீ வளர்ப்பு குறித்த பாடத்தையும் படித்தார்.
”மக்களுடன், குறிப்பாக கிராஃப்ட் பீர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேசினோம். அவர்கள் எங்களுக்கு பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தனர்,” என்றார் 34 வயதான ரோஹன்.
இவர் மீட் தயாரிப்பு, கலையும் அறிவியல் சேர்ந்தது என நம்புகிறார். கிராஃப்ட் பீர் தயாரிப்பாளர்கள், குறிப்பாக இண்டிபெண்டென்ஸ் ப்ரூயிங் கம்பெனி மற்றும் Doolally, இந்த இரு தொழில்முனைவோருக்கு வழிகாட்டியுள்ளனர்.
2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் புனேவில் உள்ள ஒரு பழைய சிமெண்ட் தொழிற்சாலையைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் மெடரியை அமைத்தனர்.
விரைவிலேயே முதல் சவாலை எதிர்கொள்ள நேர்ந்தது. மீட் ஒரு மதுபானமாக அங்கீகரிக்கப்படாததால் அதை வகைப்படுத்த முடியவில்லை. இதை ஒரு தனிப்பிரிவாக உருவாக்க இணை நிறுவனர்கள் மஹாராஷ்டிராவின் எக்ஸைஸ் துறையைத் தொடர்பு கொண்டனர். வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற ஒன்றரை ஆண்டுகள் ஆனது.
ஆப்பிள் சாறு, காபி ஆகிய இரண்டு வகைத் தயாரிப்பைத் துவங்கினர். ”மக்களை உற்சாகப்படுத்தும் மீட்டை தயாரிக்க விரும்பினோம். ஆப்பிள் சாறு மிகவும் பிரபலமாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தோம். இளைஞர்களுக்கு காபியுடன் வலுவான இணைப்பு இருப்பதை உணர்ந்து அதையும் தேர்வு செய்தோம். மீட் மதுபானத்தின் இரு வேறு சுவைகள் மக்களை இருபிரிவாக பிரிக்கவேண்டும் என விரும்பினோம்,” என்றார் ரோஹன்.
மூன்ஷைன் மெடரியின் முதல் பாட்டில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தயாரானது.
”முதல் முறை தயாரிப்பை வெளியே அனுப்பியபோது மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். இந்த பானத்திற்கான சந்தை இருப்பதை முதல் வார இறுதி விற்பனை உறுதிசெய்தது,” என்றார் ரோஹன்.
மூன்ஷைன் மெடரி ஒரே ஒரு பகுதியில் துவங்கி இன்று மும்பை மற்றும் புனே பகுதி முழுவதும் 225 ஸ்டோர்களிலும் ரெஸ்டாரன்களிலும் இடம்பெற்றுள்ளது. இரண்டு தயாரிப்பை வழங்குகின்றனர். ஆப்பிள் சைடர் மீட் மற்றும் காபி மீட். 330 மிலி பாட்டிலும் விலை 220 ரூபாயாகும். இதில் 6.5 சதவீத ஆல்கஹால் உள்ளது. ஆப்பிள்கள் காஷ்மீரில் இருந்து பெறப்படுகிறது. காபி சிக்மகலூர் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. தற்சமயம் ஒரு மாதத்திற்கு 6000 முதல் 10,000 லிட்டர் மீட் தயாரிக்கப்படுகிறது.
பவாய் பகுதியில் உள்ள ஹைகோ மாலில் உள்ள அவுட்லெட்டில் மூன்ஷைன் மீட் முதலில் விற்பனையானது. இன்று யெல்லோ பனானா ஃபுட் கம்பெனி, பீட்சா பை தி பே, நேச்சர்ஸ் பாஸ்கெட், சோஷியல் ஹேங்அவுட்டின் சில பகுதிகள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
மீட் தயாரிப்பிற்கான அளவுகோல் ஏதும் இல்லை. ஆனால் இந்தியர்கள் இனிப்பு சுவை கொண்ட மது பானங்களையே அதிகம் விரும்புவதை தங்களது ஆய்வு வாயிலாக தெரிந்துகொண்டதாக நிதின் தெரிவித்தார். விஸ்கி, ரம், வோட்கா போன்றவற்றுடன் கார்பனேட்டட் பானங்களைச் சேர்த்துக்கொள்ளும் போக்கு இதை நிரூபிக்கிறது.
உத்தர்காண்ட், பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற பகுதிகளில் இருந்து பெறப்படும் தேனை சேர்ப்பதால் மீட் பானத்திற்கே உரிய மிதமான இனிப்பு சுவை கிடைக்க உதவுகிறது.
”முதல் தொகுப்பை அனுப்பிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொத்த இருப்பும் விற்பனையானது. இதுவே இந்தச் சுவையை மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியாகும்,” என்றார் ரோஹன்.
இந்தியாவில் 2018-ம் ஆண்டு மது பானங்கள் சந்தையின் மூலம் ஈட்டப்படும் வருவாய் சுமார் 67 பில்லியன் டாலர் ஆகும். இந்த மதிப்பு 2018-21 ஆண்டுகளிடையே 7.9 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என Statista தெரிவிக்கிறது. இந்தியாவில் மிகச்சில மதுபான ஸ்டார்ட் அப்களே உள்ளன. I Brands Beverage, HipBar போன்றவை இந்த பட்டியலில் அடங்கும். 24 முதல் 35 வயதுடையவர்களே மூன்ஷைன் மீட் முக்கிய க்ளையண்ட்களாகும்.
வருங்கால திட்டம்
வருங்காலத்தில் மக்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் புதிய வகையை அறிமுகப்படுத்த மூன்ஷைன் மெடரி திட்டமிட்டுள்ளது.
”சிறு தொகுதிகளாக முதலில் அறிமுகப்படுத்துவோம்,” என்றார் நிதின்.
மேலும் குறிப்பிட்ட பருவத்திற்கான உள்ளூர் உற்பத்தியைக் கொண்டுள்ளதே மீட் மது பானத்தின் சிறப்பம்சமாகும்.
மூன்ஷைன் மெடரி ’மெட் லேப் சீரிஸ்’ நடத்தி வருகிறது. இங்கு புதிய சுவைகள் சோதனை செய்யப்படுகிறது. இவை குறைந்த அளவில் அனுப்பப்படுகிறது. அசாம் தேநீர், மேங்கோ சில்லி, கோவா சில்லி, நெல்லி வென்னிலா போன்ற சுவைகள் சோதனை செய்யப்படுகிறது.
ஒன்பது பேரை பணியிலமர்த்தியுள்ள இந்த ஸ்டார்ட் அப் சில காலம் முன்பு ஒரு ஏஞ்சல் முதலீட்டு குழுமத்திடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் சீட் நிதிச்சுற்று உயர்த்தியுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்கான நிதி குறித்து சில முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மூன்ஷைன் மெடரி திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அதன் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. விரைவில் இதை நான்கு மடங்காக அதிகரிக்க உள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் புதிய மாநிலங்களில் செயல்படவும் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2,000 லிட்டர் திறன் கொண்டிருந்த இந்த ஸ்டார்ட் அப் விரைவில் 25,000 லிட்டரை எட்ட உள்ளது. கோவா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய சந்தையை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : திம்மய்யா பூஜரி | தமிழில் : ஸ்ரீவித்யா