சென்னை, கோவையில் சொந்தமாக வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படும்? எவ்வளவு செலவாகும்?
இந்திய நகரங்களின் சராசரி மாத வாடகையை கொண்டு அந்த நகரங்களில் சொந்தமாக வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படும் என்ற ஆய்வை Money Control மற்றும் Liases Foras மேற்கொண்டன. தமிழகத்தின் சென்னை, கோவையில் சொந்த வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படும்? அதற்கான தொகை எவ்வளவு? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
பலருக்கும் சொந்த வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் இனிமையாக வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் நடுத்தர வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு இந்த கனவு பெருங்கனவாகவே இருக்கும். அதற்காகவே அல்லும், பகலும் கடுமையாக உழைத்து, சிறுக சிறுக சேர்த்து சொந்த வீட்டுக் கனவை கண் முன்னே சிற்பி போல செதுக்கி நிஜம் செய்வார்கள்.
அதுவே சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீட்டு கனவை மெய்பிக்க கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும். அதனால் பெருநகரங்களில் சொந்த வீட்டை காட்டிலும் வாடகை வீட்டில் வசிப்பவர்கள்தான் அதிகம்.
பிற பகுதிகளில் இருந்து வேலை, தொழில் காரணமாக நகரங்களுக்கு புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். அவர்கள் இந்த நகரங்களில் ஈட்டும் வருமானத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 சதவீதம் வரை வாடகைக்கு செலவு செய்ய வேண்டி இருக்கும்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள சுமார் 32 நகரங்களின் சராசரி மாத வாடகையை கொண்டு அந்த நகரங்களில் சொந்தமாக வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படும் என்ற ஆய்வை Money Control மற்றும் Liases Foras இணைந்து மேற்கொண்டன.
நகரின் மையப்பகுதியில் இருந்து தூரங்களை ஐந்து பிரிவுகளாக கணக்கிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் வீடு வாங்க எவ்வளவு தேவை?
அந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் கோவை நகரங்களும் அடங்கும்.
சென்னையில் 511 மாதங்களின் வாடகைப் (நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் பரப்பளவு) பணத்தில் வீடு வாங்கமுடியும் என்றும், கோவையில் 498 மாதங்களின் வாடகைப் (சுமார் 20 கிலோமீட்டர் பரப்பளவு) பணத்தில் சொந்த வீடு வாங்கத் தேவைப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இந்த இரண்டு நகரங்களிலும் வீடு வாங்கத்தேவைப்படும் மொத்த தொகை எவ்வளவு, வீட்டின் அளவு என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சென்னை: தமிழகத்தின் தலைநகரின் மத்தியப் பகுதியில் துவங்கி நகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் வாடகை (2BHK) சுமார் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையில் உள்ளது.
கட்டிடத்தின் தன்மை, பரப்பளவு, கார் மற்றும் பைக் பார்க்கிங் போன்ற வசதிகளைக் கொண்டு வாடகையில் வித்தியாசம் இருக்கிறது. இதனை இணையதளத்தில் வாடகைக்கு வீடு பார்க்க உதவும் தளங்களின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் வாடகைத் தொகை இன்னும் கூடுகிறது.
இதில், சராசரியாக இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் வாடகை ரூ.17,000 என வைத்துக் கொண்டால் 511 மாதங்களுக்கு 86,87,000 ரூபாய் என்ற கணக்கு வருகிறது.
அதுவே சென்னையில் சிங்கிள் பெட்ரூம் வீடு (1 BHK) என்றால் ரூ.6 ஆயிரத்தில் தொடங்கி ரூ.12 ஆயிரம் வரை மாத வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த வாடகை தொகையும் அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கு சராசரியாக மாத வாடகை ரூ.10,000 என வைத்துக் கொண்டால் 511 மாதங்களுக்கு 51,10,000 ரூபாய் தேவைப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும்போது, சென்னையில் சிங்கிள் பெட்ரூம் வீட்டில் வாடகையில் வசிப்போர், கிட்டத்தட்ட 50 லட்சம்+ ரூபாயில் அதே சிங்கிள் பெட்ரூம் அளவில் வீடு சொந்தமாக வாங்கமுடியும்.
அதேபோல், டபிள் பெட்ரூம் வீட்டில் வசிப்போர், கிட்டத்தட்ட 90 லட்சத்தில் அதே அளவு வீட்டை சொந்தமாக வாங்கமுடியும் என ஆய்வுகள் கணக்கு கூறுகிறது.
கோவை: சென்னையை போலவே கோவையில் இந்த ஒப்பீட்டை மேற்கொண்டால் அங்கு இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் வாடகை சராசரியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையில் உள்ளது.
இங்கு பெரும்பாலான வீடுகள் தனி வீடாக வாடகைக்கு கிடைப்பதாகத் தெரிகிறது. Money Control ஆய்வின்படி, இங்கு சொந்தமாக வீடு வாங்க 498 மாதங்களின் வாடகை தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அறைகள் கொண்ட வீட்டின் வாடகை ரூ.13,500 என வைத்துக் கொண்டால், சொந்த வீடு வாங்க 67,23,000 ரூபாய் தேவைப்படுகிறது.
அதுவே சிங்கிள் பெட்ரூம் என்றால் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரையில் வீடு வாடகைக்கு கிடைக்கிறது. இதில் சராசரியாக வீட்டின் வாடகை ரூ.7,500 என வைத்துக் கொண்டால் 498 மாதங்களுக்கு 37,35,000 ரூபாயில் சொந்த வீடு வாங்க தேவைப்படுகிறது.
சென்னை - பெங்களூரு - மும்பை - ஹைதராபாத் ஓர் ஒப்பீடு
சென்னையில் சொந்தமாக வீடு வாங்க 511 மாதங்களின் வாடகை தேவைப்படும் என Money Control ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. அதுவே, ஐடி நகரமான பெங்களூருவில் சொந்தமாக வீடு வாங்க 330 மாதங்களின் வாடகை தேவைப்படும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 478 மாதங்களின் வாடகையும், ஹைதராபாத் நகரில் 472 மாதங்களின் வாடகையும் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் வெளியான Affordability தரவரிசையில், பெங்களூரு குறைந்த மாதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை 19, மும்பை 24, ஹைதராபாத் 25 மற்றும் கோவை 26-வது இடங்களில் உள்ளன.
‘அதிக சம்பளம் வாங்கும் ‘பாஸ்’கள் பலர் புத்திசாலிகளாக இருப்பதில்லை’ - ஆய்வில் ஆச்சரிய முடிவு!
Edited by Induja Raghunathan