Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை நடனம் மூலம் பரப்பும் சுந்தரமூர்த்தி!

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை நடனம் மூலம் பரப்பும் சுந்தரமூர்த்தி!

Saturday January 09, 2016 , 3 min Read

பட்டப்படிப்பு முடிந்தவுடன் வேலை தேடும் நோக்கத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில், சுந்தரமூர்த்தி ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தார். கலைக்குடும்பத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் பிறந்த இவர், கலையின் மீதுள்ள ஆர்வத்தால், தஞ்சை, அரக்கோணம், காஞ்சிபுரம், சென்னை போன்ற இடங்களில் கலையை முறையாகப் பயின்று, அடையார் அரசு கலைக்கல்லூரியில் நாட்டுப்புறக் கலை பட்டப்படிப்பை முடித்த பின்னர் இவரது கனவான "சுக்ரா நடனப்பள்ளி"யை தொடங்கினார்.

image


குழந்தைப் பருவம்

சுந்தரமூர்த்தியின் தந்தையும், மாமாவும் இசை வாத்தியம் வாசிப்பதில் வல்லுநர்கள். இவருடைய தாயாரும் கலையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர்களுக்கிடையில் வளர்ந்த சுந்தரமூர்த்தி, தான் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பாரம்பரிய நடனத்தை சிறு வயதிலேயே கவனித்து வந்தார். அதே சமயம் ஒவ்வொரு வருடமும் இவருடைய வயது அதிகரிக்கும் போதும், கிராமியக் கலை ஆங்காங்கே அழியும் செய்திகளையும் கேட்டு வந்தார். படிப்பைத் தாண்டி, சிறு வயதிலிருந்தே தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், கிராமியக்கலைக்கும் அதிக மதிப்பு கொடுத்து வந்தார் இவர்.


பள்ளி தொடங்கியதன் நோக்கம்நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இந்த உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு 2014 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி, 'சுக்ரா டான்ஸ் அகாடமி' யை சென்னையில் தொடங்கினார்.இங்கே சாஸ்திரிய நடனமான பரத நாட்டியம், காவடி, கரகம், மூங்கில் பாதம், கணியன் கூத்து முதலிய 60 வகையான தமிழகத்தின் நாட்டுப்புற நடனங்கள் கற்பிக்கப்படுகின்றன. மேலும் புதிய அணுகுமுறையில் மேற்கத்திய நடனமும் இங்கு கற்றுத்தரப்படுகிறது.
image



சுந்தரமூர்த்தி தான் தொடங்கிய பள்ளியைப் பற்றி பேசத்தொடங்கிய போது, அவர் முதலில் கூறியது,
"நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? என் வாழ்க்கை முழுவதையும் இந்த குறிக்கோளைக் கொண்டே வாழ்கிறேன்", என்றார்.
60-க்கும் மேற்பட்ட கிராமிய நடன வகைகளை, அந்தந்த கலை வல்லுனர்களின் இருப்பிடத்திற்கே சென்று குருகுலம் முறையில் பயின்று வந்துள்ளார் சுந்தரமூர்த்தி. சென்னையில் இவரது நடனப்பள்ளியை நிறுவிய சமயத்தில், மக்களிடம் மேற்கத்திய நடனத்திற்கே அதிகமான வரவேற்பு இருப்பதை கண்டார்.      
image



இந்த நிலையை மாற்றுவதற்கு, பல கல்லூரிகள் மற்றும் கலை வளாகங்களுக்குச் சென்று கிராமியக்கலையைக் கற்பிக்கத் தொடங்கினார். இதற்கு வரவேற்பு அதிகமானதை அடுத்து, இவருடைய சுக்ரா நடனப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கிராமிய நடன பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். பல மாணவர்கள், நாட்டுப்புற நடனக்கலை மீது ஆர்வம் கொண்டு, இவரது பள்ளியில் சேர்ந்ததாக கூறுகிறார்.கிடைத்த மாணவர்களைக் கொண்டு, 2014-ஆம் ஆண்டு முதல், தக்க்ஷின் சித்ரா போன்ற பாரம்பரியத்தைப் போற்றும் இடத்தில் நிகழ்ச்சிகள் செய்யத் தொடங்கினார். அயல்நாட்டிலிருந்து வந்த பலரை இவ்வகை நடன நிகழ்ச்சிகள் மிகவும் ஈர்த்தது. அவர்களில் பலரும் இதை ரசித்து, கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். முறையாக அக்கலையைக் கற்றுக்கொண்டு, தங்களுடைய நாட்டிலும் கற்பித்து, போற்றத் தொடங்கினார்கள் என்று பூரிப்புடன் பகிர்கிறார் சுந்தரமூர்த்தி.
image


சுந்தரமூர்த்தியின் கலைப் பயணம் கலைப் பயணத்தை பற்றி சுந்தரமூர்த்தியுடன் உரையாடும் போது, அவர் கண்கள் கலங்குவதைக் கண்டு அதுப்பற்றிக் கேட்டபோது,
"கிராமிய நடனத்தைத் தொடங்கிய போது, சமுதாயத்தில் என்னை பலரும் மதிக்கவில்லை. அணுகுமுறைகளை மாற்றிக் கற்றுக்கொடுக்கும் போது, நான் சமுதாயத்தில் ஒருவன் ஆனேன். இன்று பல்வேறு நாடுகளிலும் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சாதனையாளர் விருதுகள் பல பெற்றிருக்கிறேன், என்கிறார் பெருமிதம் பொங்க.
"இன்று நான் வெற்றியாளராக இருப்பதற்கு என் மாணவர்களும் முக்கியக் காரணம். அவர்களும் என்னுடைய குறிக்கோளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப வாழ்கிறார்கள்", என்கிறார். இவரிடம் இருந்த துடிப்பைப் பார்கும் போது, யாராக இருந்தாலும் ஈர்க்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.      இவர் அண்மையில், 154 பாரம்பரிய நடனவகைகளை அரங்கேற்றியதற்காக கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
image



இதுவரை 400 நிகழ்ச்சிகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் சேர்ந்து இன்று சுக்ரா நடனப்பள்ளியை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.சுந்திரமூர்த்தி போன்ற ஒரு துடிப்பான ஆசானால், நாளைய தலைமுறையினரிடம் கலாச்சாரத்தின் சிறப்பைச் செவ்வனே கொண்டு செல்ல முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.கலாச்சாரத்தைப் பின்பற்றுவது பெருமைக்குரியது மட்டுமல்லாமல், அது என்றைக்கும் நமக்கு சமுதாயத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் சுந்தரமூர்த்தி. அவருடைய இந்த கலைப்பயணத்திற்கு நம் சார்பில் வாழ்த்துக்கள்.இணையதள முகவரி: Sukraa Dance Academy