சமையலுக்கு பயன்படுத்த நறுக்கி வறுக்கப்பட்ட வெங்காயம் தயாராக கிடைத்தால் எப்படி இருக்கும்?
உணவுப் பிரிவில் செயல்படும் மும்பையைச் சேர்ந்த ’எவ்ரிடே கோர்மெட் கிச்சன் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Everyday Gourmet Kitchen Foods Pvt Ltd) 2014-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனத்தின் நிறுவனர் சத்யஜித் ராய். இந்நிறுவனம் பயன்படுத்த தயார்நிலையில் உள்ள வறுக்கப்பட்ட வெங்காயத்தை விற்பனை செய்கிறது.
நம்மில் சிலர் நமது பிரியமானவர்களுக்காக உயர்தர உணவைப் பரிமாறுவதற்கு அதிக நேரத்தையும் உழைப்பையும் மகிழ்ச்சியாக செலவிடுவோம். மிகக்குறைந்தவர்களே பணியை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க உதவியை நாடுவார்கள்.
சத்யஜித் ராயின் குடும்பம் முதல் ரகத்தை சேர்ந்தவர்கள். பெங்காலி குடும்பத்தினர் என்பதால் அவரது வீட்டு சமையலில் மட்டன் பிரியாணி வாரத்தில் ஒரு முறை இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த உணவை ருசிக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கும்.
”ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு சிறிய பணி நிமித்தமாக காலை 9 மணிக்கு வீட்டை விட்டுச் சென்று மதியம் வீடு திரும்பினேன். நான் விட்டை விட்டு கிளம்பும்போது வெங்காயம் நறுக்கத் துவங்கிய என் அம்மா நான் திரும்பும் வரை சுமார் மூன்று மணி நேரம் கண்களில் நீரோடு நறுக்கிக்கொண்டே இருந்தார். இதில் இவ்வளவு நேரம் செலவிடுவதற்கு பதிலாக சந்தையில் நேரடியாக வாங்கலாமே என்று கூறினேன். எந்த கடைகளிலும் கிடைக்காது என்று அவர் பதிலளித்தார்,” என்று நினைவுகூர்ந்தார் சத்யஜித்.
கூகுளில் இது குறித்து ஆராய்ந்த போது அப்படி ஒரு பொருள் உள்ளூர் சந்தையில் இல்லை என்பதை உணர்ந்தார். ஆனால் வெளிநாட்டுகளில் இவை கிடைக்கிறது. அப்போதுதான் உள்ளூர் இந்திய சந்தையில் இது ஒரு மிகப்பெரிய தீர்வாக இருக்கும் என்று கருதினார்.
இவ்வாறு 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் Everyday Gourmet Kitchen. இதன் முக்கிய தயாரிப்பு ஃப்ரெஷ்ஷான வறுக்கப்பட்ட வெங்காயம். இதை வணிக ரீதியான சமையலறைக்கும் குடியிருப்புகளுக்கும் வழங்கினர். இதன் மூலம் வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி வறுக்கவேண்டிய பணியில் உள்ள சிரமங்கள் போக்கப்படுகிறது.
பல்வேறு பயன்பாடுகள்
சத்யஜித் கூறுகையில்,
“சந்தையில் நிலைத்தன்மை இல்லாததால் விவசாயிகளுக்கு விளைச்சலுக்கான நியாயமான விலை கிடைப்பதில்லை. அத்துடன் அவை முறையாக சேமிக்கப்படுவதில்லை. இந்த காரணங்களால் இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் 25 சதவீதம் வீணாகிறது. விளைச்சல் அதிகமாக இருப்பதால் நாங்கள் வெங்காயம் வீணாகும் அளவை குறைக்க விரும்பினோம். இதனால் ஆண்டிற்கு சுமார் ஐந்து மில்லியன் டன் வெங்காயம் வீணாவது தடுக்கப்படுகிறது,” என்றார்.
பாரம்பரியமாக வறுக்கப்பட்ட வெங்காயம் அனைத்து வகையான பிரியாணி தயாரிப்பிற்கும் மேலே அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும். இதுதான் EGK-வின் ஃப்ரெஷ்ஷான வறுக்கப்பட்ட வெங்காயத்தின் முக்கிய பயன்பாடாகும்.
EGK-வின் வறுக்கப்பட்ட வெங்காயங்கள் பல்வேறு விதங்களில் பல்வேறு வகையான சமையல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
”இந்திய சந்தையில் EGK வெங்காயங்கள் கிரேவி தயாரிக்கும்போது பயன்படுத்தப்பட்டு நேரத்தை பெரியளவில் மிச்சப்படுத்துகிறது,” என்றார் சத்யஜித்.
இவை நொறுக்குத்தீனியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பி2பி பிரிவில் இருந்தே பெரும்பாலான வருவாய் ஈட்டப்படுகிறது. இதில் மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற பகுதிகளில் ரெஸ்டாரண்டுகளுக்கும், கேட்டரிங் சேவையளிப்போர், விமானம் மற்றும் ரயில்வே சமையலறைகள் போன்றவற்றிற்கு அதிகளவில் விற்பனை செய்கிறது. பெரும்பாலும் தெற்கு மற்றும் செண்ட்ரல் மும்பை பகுதியில் 300 கடைகளில் சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
“அடுத்த மூன்று மாதங்களில் மிகப்பெரிய சில்லறை வர்த்தகங்களுடன் செயல்பட உள்ளோம். அத்துடன் அடுத்த ஆறு மாதங்களில் நாட்டின் பிற மாநிலங்களில் விரிவடைய விரும்புகிறோம்,” என்றார் சத்யஜித்.
EGK தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 30 மெட்ரிக் டன் வறுத்த வெங்காயத்தை விற்பனை செய்வதாக தெரிவிக்கிறது. இதற்காக 150 மெட்ரிக் டன் பச்சை வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
”ஏப்ரல் மாத இறுதிக்குள் 100 மெட்ரிக் டன் அளவு ஃப்ரெஷ்ஷான வறுக்கப்பட்ட வெங்காயத்தை (500 டன் பச்சை வெங்காயம்) தயாரிக்கும் அளவிற்கு எங்களது செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறோம்,” என்றார் சத்யஜித்.
100 ஊழியர்களைக் கொண்டது EGK ஃபுட்ஸ் குழு அளவு. இதில் 70 தொழிலாளர்கள் அடங்குவர்.
ஆனியன் நைட்
சத்யஜித்தின் நெருக்கமானவர்கள் அவரை ’ஆனியன் நைட்’ (Onoin Knight) என்று அன்புடன் அழைக்கின்றனர். அவர் தொழில்முனைவு சாரந்த பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். EGK துவங்குவதற்கு முன்பு மேற்கொண்ட சில ஸ்டார்ட் அப் முயற்சிகள் பெரியளவில் வெற்றியடையவில்லை.
EGK ஃபுட்ஸ் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுயநிதியில் துவங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் நிதி கிடைப்பதும் நிலையற்ற வெங்காய சந்தையை கையாள்வதும் சவாலாக இருந்தது. தொழிற்சாலை உருவாக்கவும் நடப்பு மூலதனத்திற்காகவும் கடந்த மூன்றாண்டுகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாயிலாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
”2016-17 ஆண்டில் வருடத்திற்கு 30 மெட்ரிக் டன்னாக இருந்த விற்பனை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 30 மெட்ரிக் டன்னாக வளர்ச்சியடைந்துள்ளதாக EGK தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு மாத விற்பனை அளவு 100 மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணிக்கிறோம்,” என்றார்.
இவர்களது வருவாய் மாதிரியின்படி உற்பத்தியின் அளவை அதிகரிப்பதன் வாயிலாகவும் சரியான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதன் வாயிலாகவும் நிர்வாக செலவு குறைக்கப்படுகிறது. இந்த வருட இறுதிக்குள் தங்களது உற்பத்திக்கான பிரத்யேக தேவையை பூர்த்திசெய்வதற்காக விளைநிலைங்களின் உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். இதனால் இவர்களிடம் பொருட்களை வாங்குவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படுவதுடன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் EGK திட்டமிட்டு வருகிறது.
தயார்நிலை உணவு சந்தை
இந்தியாவில் தயார்நிலை உணவுத் துறை (heat-and-eat industry) 22 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் நிதியாண்டு 2019-ல் 6,405 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்டிஆர், மையாஸ், ஐடி ஃப்ரெஷ் ஃபுட்ஸ் போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் சில மிகப்பெரிய நிறுவனங்களாகும்.
தங்களை வேறுபடுத்திக் காட்டும் அம்சம் குறித்து சத்யஜித் விவரிக்கையில்,
“எங்களது இறுதி தயாரிப்பில் எண்ணெயை பிழிந்து எடுக்கப்படுவதால் வீட்டில் வெங்காயத்தை பொறித்து டிஷ்யூ பேப்பரைக் கொண்டு எண்ணெயை பிரித்தெடுப்பதைக் காட்டிலும் இது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்,” என்றார்.
வருங்காலத்தில் தற்போதுள்ள வாடிக்கையாளார்களின் விண்ணப்பத்தற்கேற்ப வறுக்கப்பட்ட வெங்காயங்களுடன் அது தொடர்பான பிற பொருட்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.
அடுத்த ஆண்டு பி2பி மற்றும் ஹோட்டல்/ரெஸ்டாரண்ட்/காஃபே (HoReCa) பிரிவில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சியடைவதுடன் பல்வேறு கிளைகளைக் கொண்ட சில்லறை வர்த்தகங்களுடன் அதிகளவு இணைந்து சில்லறை வர்த்தக சந்தையிலும் செயல்பட திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு அதிக தேவை இருப்பதை உணர்ந்ததால் ஏற்றுமதியையும் துவங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார் சத்யஜித்.
ஆங்கில கட்டுரையாளர் : நேஹா ஜெயின் | தமிழில் : ஸ்ரீவித்யா