சிப்ஸ் பாக்கெட் கவர்களை மறுசுழற்சி செய்து ‘கூலிங் கிளாஸ்’ தயாரிக்கும் கலக்கல் ஸ்டார்ட் அப்!
அனிஷ் மல்பானியின் சமூகத் தொழில்முனைவு நிறுவனமான ‘ஆஷாயா’, சிப்ஸ் பாக்கெட், சாக்லெட் கவர் போன்ற பல அடுக்கு குப்பைகளில் இருந்து ‘வித்அவுட்’ எனும் பெயரிலான கூலிங் கிளாஸ்களை தயாரித்து விற்பனை செய்கிறது.
அனிஷ் மல்பனி சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் சேரும் செம்பூர் குப்பைமேடு வழியே சென்று கொண்டிருந்தார். இந்தக் குப்பைகளில் இருந்து ஏதேனும் பயனுள்ள பொருட்கள் செய்ய முடியுமா என யோசித்தார். விளைவு ஒரு சூப்பராக சமூகத் தொழில்முனைவு யோசனை.
“இது சுற்றுச்சூழல் நோக்கிலும், சமூக நோக்கிலும் மிகவும் சிக்கலான பிரச்சனை. எனினும், இதில் ஒரு பொருளாதார பலனும் இருக்கிறது. இதைக் கொண்டு குப்பை சேகரிப்பவர்களுக்கு பலன் அளிக்கலாம்” என்று இந்தச் சமூக தொழில்முனைவோர் ‘சோஷியல் ஸ்டோரி’யிடம் கூறுகிறார்.
மல்பனி ஒன்றும் சும்மா சொல்லவில்லை. சமூக தொழில்முனைவு மூலம் வறுமை ஒழிப்பில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதை நல்ல துவக்கம் என நினைத்தார்.
துபாயில் வளர்ந்த மல்பனி, நிதி மற்றும் விளையாட்டு நிர்வாகத்தில் பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அதன் பிறகு நிதித்துறையில் பணியாற்றியவர், கிரீன்கார்டு பெற்று புறநகர பகுதியில் தனது குடும்பத்துடன் செட்டிலாக விரும்பினார். எனினும், ஒரு சின்ன எண்ணம் இந்த கனவுக்கு இடையூறாக வந்தது.
“எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது, யோசித்து பார்த்தபோது ஏதேனும் அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டும் என நினைத்தேன்” என்கிறார்.
இந்தியா திரும்பி சமூக தொழில்முனைவில் ஈடுபட வேண்டும் என நினைத்தார். பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீடித்த தீர்வை வழங்க விரும்பினார். இதுவே, புனாவைச் சேர்ந்த ஆஷாயா (
) நிறுவனத்திற்கான அடித்தளமாக அமைந்தது.இந்நிறுவனம் சிப்ஸ் பாக்கெட்களில் இருந்து குளிர் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) தயாரிக்கிறது. மேலும் சாக்லெட் கவர்கள் உள்ளிட்ட பல அடுக்கு குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும் அறிமுகம் செய்யவுள்ளது.
சமூக தொழில்முனைவு
ஆனால், நியூயார்க்கில் இருந்த வந்த எல்லாம் தெரிந்த மனிதராக அவர் அறியப்பட விரும்பவில்லை. தான் செயல்பட விரும்பிய பரப்பை முழுவதும் புரிந்து கொள்ள விரும்பினார்.
“அதிர்ஷ்டவசமாக ஓராண்டு கவுதமாலா நாட்டில், மளிகை கடை, ஐஸ்கிரீம் கடை நடத்துபவர்கள் துவங்கி நிதி நுட்ப நிறுவனங்கள் நடத்துபவர்கள் வரை உள்ளூர் தொழில்முனைவோருடன் பழகியிருக்கிறேன். அதன் பிறகு நைரோபியில் ஆறு மாதங்கள் உள்ளூர் தொழில்முனைவோருடன் பழகியுள்ளேன்” என்கிறார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள தாக்கத்தை புரிந்துகொண்டு, அதை தனது அமைப்பில் இருந்து நீக்கிவிட்டு தாயகம் திரும்புவது அவரது நோக்கமாக இருந்தது. இருபது ஆண்டுகளாக அவர் இந்தியாவில் வசித்திருக்கவில்லை, விடுமுறையை மட்டுமே கழித்துள்ளார். இந்தியாவில் வறுமை குறித்து ஆய்வு செய்தவருக்கு குப்பைகள் நிர்வாகம் பல காரணங்களினால் ஈர்ப்புடையதாக அமைந்தது.
“வருமானம் அளவில் மட்டும் அல்லாது சுகாதாரம், கல்விக்கான அணுகல் என அனைத்து அம்சங்களிலும் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்த 40 லட்சம் குப்பை சேகரிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் சுகாதாரமற்ற சூழலில் பணி செய்வதோடு, அவர்கள் செய்வதும் மதிப்பு மிக்கதாக கருதப்படவில்லை” என்கிறார்.
மேலும் 50- 80 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படாதது பலவிதங்களில் பிரச்சனையை உண்டாக்குகிறது. ஒரு சிறிய குழு மற்றும் டாக்டர்.ஜிதேதரா சம்தானி எனும் வல்லுனருடன் இணைந்து மல்பனி, குப்பைகளில் இருந்து மதிப்பை உருவாக்குவது மற்றும் அதன் பின்னே உள்ள அறிவியலை ஆய்வு செய்தார். ஏற்கெனவே பெட்பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்டுகின்றன. வேறு யாரும் மேற்கொண்டிராத பிரிவில் பிரச்சனையை அணுக தீர்மானித்தார்.
“எம்.எல்.பி-யில் இருந்து துவங்கி, புனேவில் சிறிய ஆய்வுக்கூடத்தில் செயல்பாடுகளை துவக்கினோம். முதல் ஒன்றரை ஆண்டுகளில் எம்.எல்.பி-யில் இருந்து மூலப்பொருட்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தினோம். முதல் ஆண்டு ஆயிரம் சோதனைகள் செய்தோம். மோசமான பிளாஸ்டிக்கில் இருந்து தரமான பொருட்களை எடுக்கலாம் என கண்டறிந்தோம்” என்கிறார்.0
இந்நிறுவனம் ரசாயன இயந்திய முறையில் உருவாக்கிய காப்புரிமைக்கு காத்திருக்கும் தொழில்நுட்பம் குப்பைகளை தரமான பொருட்களாக மாற்றுகிறது.
குப்பைகளில் இருந்து ...
முதலில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டோம். ஆனால், 10 கிலோ பொருளை வாங்க யாரும் இல்லை. அவர்கள் டன் கணக்கில் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு உற்பத்தி செய்யும் திறன் இல்லை. மேலும், பொருட்களை விற்பனை செய்தாலும், அந்த அளவில் லாபம் ஈட்டுவது சாத்தியம் இல்லை.
அடுத்தகட்டமாக விற்க கூடிய பொருட்களை உருவாக்குவது பற்றி யோசித்தனர். பல விதமான ஆலோசனைகளுக்கு பிறகு, இந்தக் குழு விற்க கூடிய 400 பொருட்களை பட்டியலிட்டு, அவற்றில் இருந்து 70 பொருட்களை தேர்வு செய்தது.
“கூலிங் கிளாஸ் ஃபிரேம்கள் நல்ல ஐடியாவாக இருந்தது. இது நீடித்த தன்மை கொண்டது என்பதோடு, பொருளாதார நோக்கில் நல்ல லாபமும் அளிக்கக் கூடியது. இது நுட்பம் மிக்கதாக இருந்ததோடு, அதிக சிக்கல்கள் இல்லாமல் அறிமுகம் செய்ய ஏற்ற பொருளாகவும் அமைந்தது” என்கிறார் மல்பனி.
சிப்ஸ் பாக்கெட்களை எளிதாக உடைக்க முடியாது, அவை பல அடுக்கு உலோகம் மற்றும் செல்லுலோசை கொண்டுள்ளன. பல குளிர் கண்ணாடிகள் மறுசுழற்சி பொருட்களில் செய்யப்பட்டாலும், தங்கள் தயாரிப்புதான் எம்.எல்.பி-யில் இருந்து செய்யப்படும் முதல் பொருள் என்கிறார். லென்ஸ்கள் உள்ளூர் வணிகர்களிடம் இருந்து பெறப்பட்டாலும், நீடித்த தன்மை கொண்ட லென்ஸ்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆஷாயா ‘வித்தவுட் சன்கிளாஸ்’ முன்னோட்ட திட்டத்தை ட்விட்டர் மற்றும் லிங்க்டுஇன்னில் அறிவித்தது. நான்கு நாட்களில் 500 ஆர்டர்கள் கிடைத்தன. இந்த குளிர் கண்ணாடிகள், நீடிப்பவை மற்றும் வளையும் தன்மை, யூவி பாதுகாப்பு கொண்டவை. இவற்றின் எடை 26 கிராம்கள் தான். சார்கோல் பிளாக் வண்ணத்தில் கிடைக்கின்றன. ஒரு சன் கிளாஸ் ஐந்து சிப் பாக்கெட்கள் மூலம் மறுசுழற்சியில் செய்யப்படுகின்றன.
பல் நோக்கு மதிப்பு
புனே ஆய்வுக்கூடத்தில் தினமும் 30-50 கூலிங் கிளாஸ் தயாரிக்க முடியும் என்கிறார். இதன் சமூக தொழில்முனைவு அம்சம் முக்கியமாக அமைகிறது.
“பல் நோக்கு வறுமை குறியீடு எனும் காரணியில் கவனம் செலுத்துகிறோம். குப்பைகளை பல் நோக்கில் அணுகி, குப்பை சேகரிப்பவர்களுக்கு வருமானம், சுகாதார வசதி, கல்வி மற்றும் கண்ணியமான வாழ்க்கை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இதுதான் எங்கள் நீண்ட கால இலக்கு” என்கிறார்.
குறுகிய கால நோக்கில் விற்பனையில் 10 சதவீதம், குப்பை சேகரிப்பவர்களின் குழந்தைகளுக்கு செல்கிறது. வழக்கமாக செலுத்தப்படுவதை விட அதிகமாக, குப்பைகளுக்கு கிலோவுக்கு ரூ.6 அளிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் தற்போது ஐந்து குப்பை சேகரிப்பவர்களுடன் செயல்பட்டு வருகிறது. வர்த்தகம் வளரும்போது மேலும் பலரை இணைக்க உள்ளது. அமைப்பு சாரா ஊழியர்களுக்கு வங்கி கணக்கும் துவக்கி கொடுத்துள்ளது. இதுவரை மல்பனி தனது சொந்த சேமிப்பு மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா சீட்பண்ட், சோஷியல் ஆல்பா நேஷன், எச் % எம் ஃபவுண்டேஷன், இன்குபேஷன் நெட்வொர்க் ஆகிய அமைப்புகளின் மானியம் கொண்டு செயல்பட்டு வருகிறது.
“எங்கள் அடுத்த திட்டம் இந்தத் தொழில்நுட்பத்தை ஆய்வுக்கூடத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு சென்று பெரிய அளவில் முயற்சிப்பதாகும். நாள் ஒன்றுக்கு 500 கிலோ மறுசுழற்சி செய்ய விரும்புகிறோம். குப்பைகளை உள்ளடக்கிய, மையமில்லா செயல்முறை ஆலைகள் அமைத்து, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நோக்கில் நீடித்த தீர்வுகளை அளிப்பதே எங்கள் இலக்கு” என்கிறார்.
ஆஷயா பி2பி கோரிக்கைகளை பெற்றிருந்தாலும், தற்போதைக்கு அதை மறுத்துள்ளது. வாய்ப்புள்ள முதலீட்டாளர்களுடனும் மல்பனி பேசி வருகிறார். இது கடினமாக இருப்பதாக கூறுகிறார். “எங்கள் நிறுவனத்திற்கு பொறுமையான முதலீடு தேவை. இது கடினமாக உள்ளது. எல்லோரும் ஆர்வம் கொண்டிருந்தாலும் காசோலை அளிப்பது சிக்கலாகிறது” என்கிறார்.
தகவல் உறுதுணை: ரேகா பாலகிருஷ்ணன்
Edited by Induja Raghunathan