‘நாய்கள் சரணாலயம்’ - ஊனமுற்ற, காயம்பட்ட நாய்களை பராமரிக்கும் காவேரி!
ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்த காவேரி ரானா பரத்வாஜ் தனது கணவருடன் இணைந்து கிரேட்டர் நொய்டாவில் தொடங்கிய விலங்குகள் காப்பகம் ஊனமுற்ற, காயம்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சையளித்து வருகிறது.
சமீபத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடலை மீட்க அவர்களின் வளர்ப்பு நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நாயை மாவட்ட மோப்ப நாய் படையில் நாய்களுக்கு பயிற்சியளிக்கும் சிவில் போலீஸ் காவலர் தத்தெடுத்துக்கொண்டார்.
இதேபோல் வூஹானில் கொரோனா பாதித்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது தெரியாமல் எஜமானவர் வருவார் என்கிற நம்பிக்கையுடன் அவர் வளர்த்த நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தது காண்போர் நெஞ்சை கலங்கச்செய்தது.
இப்படி எத்தனையோ சம்பவங்களை நாம் கேட்டிருக்கிறோம். வீட்டில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு பெயர் வைத்து குடும்பத்தில் ஒரு அங்கமாகவே பார்க்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை நாய்கள் விலங்கு, செல்லப்பிராணி என்பதைத் தாண்டி வீட்டில் வளரும் மற்றுமொரு குழந்தையாக கருதுவதால் ஒரு இணைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
நொய்டாவைச் சேர்ந்த காவேரி ரானா பரத்வாஜ் விலங்குகள் நல ஆர்வலர். குறிப்பாக நாய்கள் மீது இவருக்குப் பரிவு அதிகம். இவர் எண்ணற்ற விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து வருகிறார்.
இவர் முதலில் மீட்ட நாய் சோஃபி. இது இவர் வாழ்க்கையில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. ஆனால் 2017-ம் ஆண்டு சோஃபி 12 வயதிருக்கையில் நோய்வாய்பட்டு உயிரிழந்தது.
காவேரியால் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்து போனார்.
“சோஃபி என் முதல் செல்ல மகள். நோய் தாக்கத்தால் உயிரிழந்தாள். அவளது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பயனுள்ள முறையில் நேரம் செலவிடத் தீர்மானித்தேன். ஆதரவின்றி தவிக்கும் நாய்களை மீட்டெடுப்பதே சிறந்தது என்று தோன்றியது,” என்று சோஷியல்ஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டார் காவேரி.
அதுவரை பகுதி நேரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவேரி, சோஃபியின் மறைவிற்குப் பிறகு முழநேரமாக களமிறங்கினார்.
கிரேட்டர் நொய்டாவில் விலங்குகளுக்கான தங்குமிடம் ஏதும் இல்லாத சுழலில் காவேரி தனது கணவர் யாஷ்ராஜ் பரத்வாஜ் உடன் இணைந்து SMART Sanctuary என்கிற தங்குமிடத்தை நகரில் முதல் முறையாகத் தொடங்கினார்.
நாய்களை இவர் குழந்தைகளாகவே பார்க்கிறார். எந்த நேரத்தில் குழந்தைகளுக்கு உதவி தேவைப்பட்டாலும் சென்றுவிடுகிறார். பெரும்பாலான நேரத்தை மீட்புப் பணிகளில் செலவிடுகிறார். ஓய்வு உறக்கமின்றி இந்த உன்னத பணியை மேற்கொண்டு வருகிறார்.
ஊனமுற்ற விலங்குகளுக்கு உதவுகிறார்கள்
காவேரியின் கணவர் ஃப்ரீலான்ஸ் டிஜிட்டல் மார்கெட்டிங் பிரிவில் பணியாற்றுகிறார். காயம்பட்ட ஒரு நாயை பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டிருப்பதால் தன்னார்வலர்கள் எந்த அளவிற்கு புரிதலுடன் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று சிந்தித்த இவர் தானே ஆம்புலன்ஸ் ஓட்டிச் செல்கிறார்.
ஊனமுற்ற நாய்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதே காவேரியின் கவலை. இதுவே இவரைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது.
“முதுகெலும்பில் காயம் பட்ட நாய்களைப் படுக்க வைத்துவிடுவதே சிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. இந்த உயிரினங்களும் மீண்டு நார்மலாக வாழ வாய்ப்பளிக்கப்படவேண்டும்,” என்கிறார் காவேரி.
காயம்பட்ட நாய்களின் நிலையைப் பொருத்து அந்த இடத்திலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது அல்லது மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்படுகிறது.
இந்தத் தம்பதி தங்களது சேமிப்பைக் கொண்டு நாய்களைப் பராமரிக்கிறார்கள். அறுவை சிகிச்சை உள்ளிட்ட அதிக பணம் தேவைப்படும் சிகிச்சைகளுக்கு நன்கொடைகளையே நம்பியுள்ளனர்.
மிலாப் கூட்டுநிதி தளம் மூலம் நிதி திரட்டி காவேரியும், யாஷ்ராஜும் 120-க்கும் அதிகமான நாய்களுக்கான தங்குமிடத்தை கிரேட்டர் நொய்டாவில் கட்டியுள்ளனர். 500-க்கும் அதிகமான நாய்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய உள்ளனர். SMART Sanctuary-யில் Canine Paralysis and Rehabilitation unit இயங்கி வருகிறது.
SMART Sanctuary
இந்தத் தம்பதி நிதி திரட்டத் தொடங்கியபோது வாடகைக்கு நிலம் மட்டுமே வைத்திருந்தனர். இதைத் தயார்படுத்தவேண்டியிருந்தது. அந்த சமயத்தில்தான் கூட்டுநிதி பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவு மேற்பரப்பு மண்ணால் நிரம்பியிருந்தது. நாய்கள் காயம் ஏற்படும்போது பின்னங்காலை இழுத்துக்கொண்டே நகரும் என்பதால் அதற்கேற்ப உயர்தர டைல்ஸ் பொருத்தப்பட்டது. கால்களில் புண் ஏற்படாதவாறு இந்த டைல்ஸ் பாதுகாக்கும்.
ரெய்ட் நடக்கும்போது பறிமுதல் செய்யப்படும் விலங்குகளின் குட்டிகள், கழுதைகள், நீலான் போன்றவை இந்த சரணாலயத்தின் ஒரு பகுதியில் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் ஊனமுற்ற விலங்குகளுக்கும் இங்கு அடைக்கலம் கொடுக்கப்படுகின்றன.
இருப்பினும் இங்கு பெரும்பாலும் நாய்களே அதிகளவில் உள்ளன. நூற்றுக்கணக்கான நாய்களுக்கு இவர்கள் சிகிச்சையளிக்கும் நிலையிம் சுமார் 130 நாய்கள் இந்த சரணாலயத்திலேயே தங்கியுள்ளன.
கால்நடை மருத்துவமனைகள் இல்லாத சுற்றுவட்டார கிராமங்களில் தடுப்பூசி முகாம்களை இந்நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. இவைதவிர இக்குழுவினர் பாம்புகளை மீட்டு கிரேட்டர் நொய்டாவில் உள்ள வனப்பகுதிகளில் விடுகின்றனர்.
“பாம்புகளை கொல்லவேண்டாம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைப்பது கடினமாக உள்ளது. எங்களுக்கு அழைப்பு வந்தால் நாங்கள் சென்று பாம்புகளை மீட்கிறோம். இதை இலவசமாக நாங்கள் செய்வதால் பாம்பு பிடிப்பவர்கள் எங்களை வெறுக்கிறார்கள்,” என்கிறார் காவேரி.
காவேரி மேனகா காந்தியுடனும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (PfA) உடனும் இணைந்து செயல்படுகிறார்.
விலங்குகளை பராமரித்து புதுவாழ்வு அளிக்கும் இக்குழுவினரின் பயணம் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்கின்றன.
“சிலர் எங்கள் செயல்களை பாராட்டினாலும் பலர் வெறுக்கிறார்கள். காயம்பட்ட நாய்களை நாங்கள் மீட்கும்போது வலியால் துடிக்கும் அந்த நாய்கள் கத்துவதும் குரைப்பதும் இயல்புதான். இதனால் அருகில் வசிப்பவர்களும் குடியிருப்போர் நலச் சங்கங்களும் எங்களுடன் சண்டையிடுவார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.
பெருந்தொற்று பாதிப்புகள்
இந்த சரணாலயத்தில் விலங்குகளுக்கு உலர்ந்த மற்றும் சமைக்கப்பட்ட உணவு வகைகள் வழங்கப்படுவது வழக்கம். பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நன்கொடை குறைந்தது, டெலிவரி பாதிக்கப்பட்டது, உலர்ந்த உணவு வகைகள் கையிருப்பு இல்லாமல் போனது.
குழுவில் 10 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தவிர தன்னார்வலர்கள் அவ்வப்போது உதவுவார்கள். ஆனால் பெருந்தொற்று காரணமாக தன்னார்வலர்கள் வரவில்லை.
அதேபோல் நாய்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்கிற வதந்தி பரவியதன் காரணமாக தத்தெடுப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ உரையின்போது விலங்குகளை தத்தெடுப்பது பற்றி உரையாற்றிய பிறகு இந்த போக்கு மாறியது.
“ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டதால் ஊனமுற்ற விலங்குகளின் விகிதம் குறைந்தது மகிழ்ச்சியளித்தது. ஆனால் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் மீண்டும் அதிகரித்தது,” என்கிறார்.
வருங்காலத் திட்டம்
பெரிய நாய்களுடன் குட்டிகள் தங்கவைப்பட முடியாது என்பதால் இக்குழுவினர் நாய் குட்டிகளுக்கான மறுவாழ்வு மையத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளனர்.
மிலாப் கூட்டுநிதி தளத்தின் மூலம் செய்யப்படும் பிரச்சாரம் தொடர்கிறது. அனைத்து விலங்குகளுக்கும் இலவசமாக சிகிச்சையளிக்க இலவச கால்நடை மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா