'சைக்கிளில்' விஜய்; கோபப்பட்ட அஜித்; செல்லூர் ராஜு தர்ணா: தேர்தல் சுவாரஸ்யங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் அப்டேட்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் தொடங்கியது. முன்பை விட எந்த இடத்திலும் இயந்திர கோளாறு உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக தாமதமாக தொடங்கவில்லை. இதனால் காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
மக்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். மதியம் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் பல இடங்களில் மக்கள் காலையில் சீக்கிரமே வந்து வாக்குச் செலுத்த வரிசையில் நின்றனர்.
தேர்தல் சுவாரஸ்யங்கள்!
திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். நடிகர் அஜித், முதல் ஆளாக தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து மக்களுடன் மக்களாக நின்று வாக்கு செலுத்தினார். அப்போது, அஜித்தை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்கள் தொடர்ந்து செல்ஃபி எடுப்பதில் மும்முரமாக இருக்க, அஜித் முதலில் வெளியேறுமாறு அவர்களை எச்சரித்தார். ஆனால், தொடர்ந்து ரசிகர் ஒருவர் செஃல்பி எடுத்துக் கொண்டே இருந்ததால் அவரின் மொபைலை அஜித் பிடுங்கிக் கொண்டார். பின்பு அவரிடமே கொடுத்து எச்சரித்து அனுப்பினார்.
இதேபோல், சூர்யா, கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
நடிகர் விஜய் நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, சைக்கிளில் வந்து பதிவு செய்தார். நடிகர் ரஜினி, கமல் ஆகியோரும் தங்கள் கடமையை நிறைவேற்றினர்.
செல்லூர் ராஜு தர்ணா!
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக இருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீனாட்சி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது விவிபேட் மிஷினில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் காண்பிக்கவில்லை என தெரிகிறது.
இதனால், வாக்குச்சாவடிலேயே அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் அதிகாரிகள் வந்து சரி பார்த்து அவரின் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என்று கூறியபின்பே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
வாழை தோரணம், சிவப்புக் கம்பளத்துடன் வாக்குச்சாவடி!
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் நெற்குன்றம் வாக்குச்சாவடி மையத்தில் வாழைமர தோரணம் மற்றும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
11 மணி நிலவரம்!
தமிழகத்தில், 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33% வாக்குப்பதிவும், குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குப்பதிவும் நடந்துள்ளது என்றார். சென்னையில் 23.67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.