ஒரு தந்தையின் மரணத்தில் முளைத்த கனவு - Adithi Millets-ன் எழுச்சிக் கதை!
தந்தையை இழந்த சோகமே ஒரு பெருங்கனவுக்கு வித்திட்டு, இயற்கை வேளாண் நிறுவனத்தை வழிநடத்தும் சோமசேகர் போகுலாவின் சமூக மாற்றப் பயணம் பெரும் தாக்கம் கொண்டது.
சோமசேகர் பெகுலாவுக்கு 2013-ஆம் ஆண்டில் ஒரு தனிப்பட்ட சோகம் நிகழ்ந்தது. ஆனால், அது தன்னை மூழ்கடிக்க அவர் அனுமதிக்கவில்லை. கார்ப்பரேட் எஃப்.எம்.சி.ஜி (FMCG) பின்னணியுடன் எம்பிஏ பட்டதாரியான சோமசேகர் பெகுலா, தனது புதிய பாதையையே அமைப்பதற்கான சாதனமாக தன் துயரத்தையே மாற்றியதுதான் அவரை இன்று ஒரு வேளாண் தொழில்முனைவராக உயர்த்தியுள்ளது.
சிறுநீரகக் கோளாறுகளுடன் தனது தந்தை போராடியதை வலியுடன் நேரில் பார்த்த சோமசேகருக்கு ஆரோக்கியமற்ற உணவுகளே உயிருக்கு ஆபத்தான நோய்களின் எழுச்சிக்குக் காரணம் என்பதை உணர்த்தியது. சொந்த சோகத்தினால் ஏற்பட்ட ஒரு நுண்மையான அறிவுடன் ‘விவசாயிகள் தற்கொலை’ என்னும் பொதுச் சோகமும் அவருக்கு வலியைத் தந்தது.
இதனையடுத்து, அவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்னூலில் தொடங்கியதுதான் ‘அதிதி மில்லெட்ஸ்’ (Adithi Millets) என்ற இயற்கை வேளாண்மை நோக்கிய நகர்வாகும்.
இயற்கை விவசாயத்தை நோக்கிய மாற்றம்
ரசாயனக் கறை படிந்த விளைபொருட்களின் தீங்கான தாக்கத்தை உணர்ந்த சோமசேகர், விவசாயத்தை அதன் இயற்கை வேர்களுக்குத் திருப்ப முற்பட்டார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் ஸ்டார்ட்-அப்கள் வளர்ந்து வரும் போக்கை அவர் கவனித்தார். ஆனால், இயற்கை வேளாண்மை என்ற கருத்து புதுமையானது அல்ல என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்தையே மேற்கொண்டு வந்தனர். ஆனால், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் விளைவுகள் பலரையும் தட்டி எழுப்பியது. ‘அதிதி மில்லட்ஸ்’ மூலம், சோமசேகர் இந்த ஆதி இயற்கை விவசாயப் பழக்கங்களுக்கு புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டார்.
உயரம் தொட்ட சோமசேகர்
2017ல் 30 விவசாயிகளுடன் எளிமையாகத் தொடங்கப்பட்ட ‘அதிதி மில்லெட்ஸ்’ இப்போது கர்னூலில் உள்ள 7 கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் கூட்டு வைத்துள்ளது. விவசாய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முழுமையான அணுகுமுறைக்கு சோமசேகரின் இந்த வளர்ச்சி ஒரு சான்றாகும்.
இந்நிறுவனத்தின் முக்கியப் பொருளான தினைகள், சத்தானவை மட்டுமல்ல... சிக்கனமாக வளரக்கூடியதாகவும் இருப்பதால், விவசாயிகளின் நிதிச் சுமைகளைக் குறைக்கிறது. அதிதி மில்லெட்ஸின் “தினை முதல் மில்லியன்கள் வரை” என்ற தத்துவம், இந்த மேலான உணவு தானியத்தின் பலன்களை அதிகமானோரிடம் எடுத்துச் சென்றுள்ளது.
அதிதி மில்லெட்ஸ் உடன் இணைந்துள்ள விவசாயிகள் உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் இலவச விதைகளைப் பெறுகிறார்கள். நிறுவனம் பின்னர் விவசாயிகளிடமிருந்து விளைபொருளையும் வாங்குகிறது. விவசாயிகளுக்கு நிலையான சந்தையை உறுதி செய்கிறது. கச்சா தினைகள் தொழிற்சாலையில் உள்ள உள்ளூர் பெண்களால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், இந்த தயாரிப்புகள் அமேசான் போன்ற தளங்கள் வழியாக நுகர்வோரை மலிவு விலையில் சென்றடைகின்றன.
லாபத்துக்கு அப்பால் சமூகப் பொறுப்பு
அதிதி மில்லெட்ஸின் அர்ப்பணிப்பு என்பது லாப வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. விவசாயிகளின் தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் கால்நடைகள் போன்ற மாற்று வாழ்வாதாரங்களை வழங்கும் பரிவு மிக்க சமூக உதவிகளை வழங்கும் சமூகப் பொறுப்புடன் இயங்குகிறது.
கே.ஹேமாத்ரி ரெட்டி என்ற உள்ளூர் விவசாயி அதிதி மில்லெட்ஸ் உடன் தனது நேர்மறையான அனுபவத்தைப் பகிரும்போது கூறியது:
“சோமசேகரின் மறுபயிர் முறையைப் பின்பற்றி எனது வருவாயை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியதாக மகிழ்ச்சி.”
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, வணிகத்துக்கும் சமூகப் பொறுப்புக்கும் இடையிலான இந்த ஒருங்கிணைப்பின் வெற்றியானது, அதிதி மில்லெட்ஸின் ஈர்க்கக்கூடிய வர்த்தகத்தை ரூ.2 கோடியாக உயர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
ஒரு கார்ப்பரேட் ஊழியராக இருந்து, தந்தையை இழந்த சோகத்துடன் ‘அதிதி மில்லெட்ஸ்’ நிறுவனத்தை வழிநடத்தும் சோமசேகர் போகுலாவின் சமூக மாற்றப் பயணம், ஒரு தனிமனிதன் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
சோமசேகரின் முயற்சியானது சமூக நலனுடன் வணிக புத்திசாலித்தனத்தை ஒத்திசைக்கும் திறனை வலியுறுத்திக் காட்டுகிறது. வர்த்தக நோக்கமும் சமூக ஊழியமும் உண்மையில் இணைந்து வாழவும் செழிக்கவும் முடியும் என்பதை சோமசேகரின் இந்த அரிய முயற்சி நிரூபிக்கிறது.
மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்
பாக்கு இலைகளில் தழைக்கும் வருவாய் - கேரள தம்பதியின் ‘பாப்லா’ பிராண்ட் வெற்றிக் கதை!
Edited by Induja Raghunathan