கோவை டூ சீரடி: இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை இன்று தொடக்கம்!
இந்தியாவிலேயே முதன் முறையாக தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தொடங்குகிறது.
இந்தியாவிலேயே முதன் முறையாக தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தொடங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இன்பச் சுற்றுலாவை விட ஆன்மீகச் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். திருப்பதி வெங்கடாஜலபதி, சீரடி சாய்பாபா, காசி, ராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர் என தமிழ்நாடு முழுவதும் பல கோயில் நகரங்களுக்கு பஸ் மற்றும் ரயில் மூலமாக ஆண்டுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்கின்றனர். இந்த ஆன்மீக சுற்றுப்பயணத்தின் அடுத்த அதிரடியாக இந்தியாவிலேயே முதன் முறையாக தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகின்றன. இந்த நிலையில், ரயில் சேவையிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக ரயில்களை வாடகைக்கு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கோவை - சீரடி தனியார் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது.
கோவை டூ சீரடி தனியார் ரயில் சேவை:
பிரதமர் மோடியின் 'பாரத் கௌரவ்' என்ற திட்டத்தின் கீழ் சீரடிக்கு இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் இருந்து ரயில்களை இயக்க தனியார் நிறுவனத்திற்கு ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. அந்த 5 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கோவையும் இடம் பிடித்துள்ளது.
வட கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை ஆறு மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்படுகின்றது. முதல் தனியார் ரயிலை கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த நிலையில் ரயிலை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தி, பெயிண்ட் அடித்துள்ளனர். முதன் முறையாக தனியார் ரயிலை இயக்குவதனால் அலங்காரப் பணிகளும் நடந்துவருகின்றன.
ரயில் மஞ்சள் , நீலம் நிறங்களில் வண்ணம் பூசியிருக்கின்றனர். இரயில் பெட்டியின் உட்பகுதியில் பேப்பர்கள் ஒட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தனியாரின் கீழ் சீரடிக்கு முதல் சேவை இன்று ஆரம்பவாதனால் ரயில் புது பொலிவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம் என்ன?
கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு வழக்கமாக ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,280 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியார் நிறுவனம் 2500 ரூபாய் வசூலிக்கிறது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 2,360 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 5000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறது.
குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய் ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 8,190 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ரயில்வே கட்டணத்தை விட தனியார் நிறுவனம் இருமடங்கு அளவிற்கு அதிகக் கட்டணத்தை வசூலிப்பது சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. இருமடங்கு அளவிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் விற்பனை கோவையில் ஐந்து இடத்திலும், திருப்பூர், ஈரோட்டில், தலா ஒரு இடத்திலும் டிக்கெட் கிடைக்கிறது. இதுதவிர, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூரில் உள்ள அனைத்து சாய்பாபா கோவில்களிலும், டிக்கெட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.