‘அடுத்தடுத்து சோதனை; கனவுக்கு வயது தடை இல்லை’ - 69 வயதில் மருத்துவராகும் பிரதான்!

By YS TEAM TAMIL|2nd Jan 2021
எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷேனாக திகழ்கிறார் பிரதான்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கனவுகள் காண்பதற்கு எளிது. அடைவது அவ்வளவு சுலபமல்ல. போராடவேண்டும்; தியாகம் செய்யவேண்டும்; எல்லாவற்றிற்கும் தயராக இருக்கும் ஒருவரால் மட்டும்தான் அதை அடைய முடியும். சமயங்களில் தனது லட்சியம் கைவிட்டுகூட போகலாம். இருந்தாலும் தொடர் நம்பிக்கையுடன் உழைத்துக்கொண்டிருக்கவேண்டும். வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருப்பவருக்கு அந்த கனவு ஒரு நாள் கைகூடும். அப்படித்தான் கை கூடியிருக்கிறது பிரதானுக்கு.


ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்கார் மாவட்டத்தின் அட்டாபிராவைச் சேர்ந்தவர் பிரதான். அவருக்கு தீராத கனவு ஒன்று இருந்தது. அந்த கனவை அவர் ஆழமாக நம்பினார்.


எம்.பி.பி.எஸ். படிக்கவேண்டும்; மருத்துவராக வேண்டும் என்பது தான் அது.


தனது லட்சியத்தை நோக்கி நடைபோட்டவருக்கு, காலம் வேறு ஒரு பதிலை வைத்திருந்தது. மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதியவருக்கு தோல்வியே மிஞ்சியது. இதனால், வேறு வழியில்லாத பிரதான், வங்கிப் பணிகளுக்கான தேர்வை எழுதினார். அதில் வெற்றிபெற்றவர், 1983ம் ஆண்டு எஸ்.பி.ஐ வங்கியில் சேர்ந்து, வங்கி அதிகாரியாக தனது பணியைத் தொடர்ந்தார்.


என்னதான் இருந்தாலும், பிடித்த வேலை வேறு, கிடைத்த வேலை வேறு என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். அதன்காரணமாக அவரால் வங்கிப்பணியில் வேலை செய்ய மனம் விரும்பவில்லை. மனம் முழுக்க மருத்துவராக வேண்டும் என கனவுதான் இருந்தது. அதே நேரத்தில், வங்கிப்பணியை உதறி தள்ளவிட்டு, மருத்துவத் தேர்வுக்கு தயாராகவும் அவரால் முடியாது. காரணம் குடும்பச் சூழல்.


விருப்பமின்றியே பணியை செய்துவந்தவருக்கு திருமணமானது. இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகளும் பிறந்தது. வங்கிப்பணியில் இணை மேலாளர் என்ற பதவி உயர்வும் பெற்றார். 33 ஆண்டுகள் வேறு வழியில்லாமல் வங்கிப்பணியை நிறைவு செய்து கடந்த 2016ம் ஆண்டு ஓய்வுப் பெற்றார்.

பிரதான்

பிரதானின் இரண்டு மகள்களும் மருத்துவம் படிக்க விரும்பினர். அதன்படி, ஓய்வு பெற்ற பிரதான் வீட்டிலிருக்கும்போது, மருத்துவப் படிப்பிற்கு தயாராகும் இரண்டு மகள்களுக்கும் படிப்பில் உதவி செய்யத் தொடங்கினார். அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவரால் எளிதாக பாடங்களை படித்து உடனே புரிந்துகொள்ளவும் முடிந்தது. காலம் எப்போதும் வாய்ப்பை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்துகிறோமா என்பதுதான் விஷயம்.


அப்படித்தான் அவருக்கான வாய்ப்பு உச்சநீதிமன்றம் வழியாக கதவை தட்டியது. ஆம்! உச்சநீதிமன்றம் 2019ம் ஆண்டு வெளியிட்ட நீட் தொடர்பான தீர்ப்பு ஒன்றில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை நீக்கியது. பிரதானுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.


மகள்கள் இருவரும் தந்தையை ஊக்கப்படுத்தினர். அதன்படி, நீட் தேர்வு எழுதியவர், வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு சம்பல்பூரில் உள்ள விம்சார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது.


இதுகுறித்து விம்சார் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பிரஜாமோகன் பேசுகையில்,

“மருத்துவப் படிப்பில் சேருவதற்கென வயது வரம்பு எதுவுமில்லை. அப்படிப்பார்க்கும்போது, மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள வயதான மாணவராக பிரதான் இருப்பார். நான் அவரை என் வகுப்புத் தோழனைப் போல்தான் பார்ப்பேன். இது ஒரு புது அனுபவம் தான். வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் அறிவியல் குறித்த விஷயங்களைப் புரிந்துகொள்வதில் அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதானுக்கான சோகம் தொடர்ந்துகொண்டுதானிருந்தது. அவரால் தன்னுடைய கனவு நிறைவடையப் போகிறது என்ற மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாட கூட முடியவில்லை. காரணம், அவரது ஒரு மகள் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அவர் நொடிந்துபோனார்.


கண்கலங்கியபடி செய்தியாளர்களிடம் பேசிய பிரதான்,

“என் லட்சியம் மருத்துவம் படிப்பது. அந்த கனவை இந்த வயதில் அடைய முடிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், என் மகளின் இறப்பால், என்னால் அதை கொண்டாட முடியவில்லை. நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்; அவளது நினைவாகவே நான் மருத்துவத்தை படிக்க ஆசைப்படுகிறேன். மருத்துவப் படிப்பை முடிக்கும்போது, எனக்கு 69 வயதாகியிருக்கும். படித்துவிட்டு வேலைக்கு போக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் மருத்துவத்தை தனியாக பயிற்சி செய்வேன். அது என் மகளுக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும்,” என்று கண்ணீர் மல்க கூறுகிறார். 


எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷேனாக திகழ்கிறார் பிரதான்!


தகவல் உதவி - indiatimes