அலுவலகம் எனும் மினி சமூகத்தில் மகிழ்ச்சியுடன் வலம்வர 6 ஈசி டிப்ஸ்!
நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை செலவிடும் அலுவலகம் எனும் மினி சமூகத்தில் நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு துணைபுரியும் 6 டிப்ஸ்.
அலுவலகப் பணியை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான் செய்கிறோமோ என்ற கேள்விக்கு பதில் பெரும்பாலும் ‘இல்லை’ என்பதே நம்மில் பலரும் அலுவலகப் பணியை ஒரு கட்டாயக் கடமை என்ற அளவில்தான் தேவை சம்பந்தப்பட்டு செய்கின்றோமே தவிர மகிழ்ச்சியுடன் ஒன்றிப்போக முடிவதில்லை என்பதுதான் நிஜம். இதைத்தான் காரல் மார்க்ஸ் ‘அன்னியமாதல்’ (alienation) என்கிறார்.
அதாவது, எந்த வேலையாக இருந்தாலும் அது வழக்கமாகச் செய்யும், திரும்பத் திரும்பச் செய்தல் நிகழ்வாக இருப்பதால் நம்மை சோர்வு பற்றிக் கொள்கிறது என்பது ஒருபுறம், இன்னொரு புறம் நாம் செய்யும் வேலை என்பது நாம் விரும்பும் வேலையல்ல; மாறாக, நாம் செய்து தீரவேண்டிய வேலை என்பதாக இருப்பதாலும் மனச்சோர்வு ஏற்படுகின்றது.
நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நாட்களை அலுவலக வேலைகளில்தான் செலவிடுகின்றோம். சமூகம் என்பது ஒரு பெரிய வட்டம் என்றால், அலுவலகம் என்பது அந்தச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் கொண்ட ஒரு மினி சமூகம்தான். இங்கும் உணர்ச்சிகள், ஆசாபாசங்கள், சிந்தனைப் பரிமாற்றங்கள், வாழ்வியல் பரிமாற்றங்கள், பொருளாதார பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றின் ஊடாகவும் அலுவலகத்தில் ஊழியர்களிடையே நிலவி வரும் படிநிலை அமைப்பு நம்மில் ஏற்படுத்தும் தாக்கங்களும் நிறை-குறைகளும் நம் மனத்தைப் பாதிக்கவே செய்கின்றன.
நம்முடனேயே இருந்துவரும் சக ஊழியர் திடீரென பதவி உயர்வு பெற்று நம்மையே கண்காணிக்கும் நிலைக்குச் சென்று விடுவதும், அவரது பொருளாதார முன்னேற்றமும், மேலிடத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் நம்மிடையே எதிர்மறைத் தாக்கங்களையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்தக் கூடியவை.
ஆகவே, நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை செலவிடும் அலுவலகம் என்னும் மினி சமூகத்தில் நாம் நம்மை மகிழ்ச்சியாக நடத்திக் கொள்வதற்கு, நாம் மகிழ்ச்சியாக உணர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? -
இதோ வல்லுனர்கள் பரிந்துரைக்கும் 6 டிப்ஸ்:
1. ஆக்டிவாக இருங்கள்: உடற்பயிற்சியும், பிற உடல் சார்ந்த செயல்பாடுகளும் உங்கள் பிரச்சினைகள் அல்லது மன அழுத்தத்தை குறைக்காவிடினும், அவை பிரச்சனைகளினால் தோன்றும் உணர்ச்சியின் தீவிரத்தை, தீவிர உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு மனத்தளவில் ஓர் இடத்தை வழங்கும். அத்துடன் உங்களை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சியின் நேர்மறையான நன்மைகளை ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நமக்கு எடுத்துக்காட்டி வருகின்றன. எனவே, உங்கள் வேலை நாளை சில உடல் செயல்பாடுகளுடன் ஏன் தொடங்கக் கூடாது? உடல் செயல்பாடுகள் என்பது வெறும் உடல் செயல்பாடுகள் அல்ல. மனத்தின் செயல்பாடுகளுக்கான பயிற்சி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காலையில் இளையராஜா பாடல்களுடன் அருகில் இருக்கும் ஓர் அமைதியான பூங்காவில் நடைப்பயிற்சி செய்தால் ஸ்ட்ரெஸ் நிச்சயம் அகலுமா, அகலாதா? - நீங்களே செய்து பாருங்களேன்.
நடந்தே வேலைக்குச் செல்வதும் திரும்புவதும் வேலை நாளின் அழுத்தத்திலிருந்து உங்களை பிரித்து வைக்க ஒரு சிறந்த வழியாகும். அது முடியாவிட்டால், மதிய உணவுக்காக நடந்து செல்லலாம், சக ஊழியர்களுடன் அலுவலக அரசியல் பேசாமல் உலக விஷயங்கள், பொழுதுபோக்கு சமாச்சாரங்களை அளவளாவியபடியே செல்லலாம். அல்லது அன்றைய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு செய்ய ஓர் உடற்பயிற்சி வகுப்பை மேற்கொள்ளலாம்.
2. தொடர்பில் இருங்கள்: இரண்டாவதாக, நாம் பிறருடன் வைத்திருக்கும் உறவுமுறைகள் நம்மில் ஒரு பகுதி என்பதை மறந்து விட வேண்டாம். கொரோனா போன்ற தொற்றுநோய்களின் காலக்கட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளினால், சமூகத் தொடர்பு இல்லாததால் பலர் தங்கள் நல்வாழ்வு பாதிக்கப்பட்டதாக உணர்ந்தனர். உண்மையில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு ஆதரவான வலைப்பின்னல் உங்கள் வேலை சிக்கல்களைக் குறைத்து விஷயங்களை வித்தியாசமாகப் பார்க்க உதவும்.
உங்கள் சக ஊழியர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் மதிப்புமிக்கதாகும். நீங்கள் எவ்வளவு உங்கள் உணர்வை முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சுவாரஸ்யமாக உங்கள் நாள் அமையும். உங்கள் வாழ்க்கையில் சக ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுவது, உங்கள் சுயமரியாதையை மேம்படுத்தலாம். இது உங்கள் நல்வாழ்வு மற்றும் மனநிறைவுக்கு அவசியமான ஒரு நோக்கத்தை வழங்கும்.
3. புதுப்புது திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்: மூன்றாவதாக, அறிவாற்றல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உங்கள் மன நல்வாழ்வுக்கு முக்கியமானது. அத்துடன், உங்கள் தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் புதிய வாய்ப்புகளை உங்களுக்கு வழங்க முடியும். எனவே, தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதாவது கோர்ஸ் எடுத்துப் படிக்கலாம். சில புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு புதிய பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ளலாம்.
வேலைக்கு வெளியே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் உங்கள் உணர்ச்சி மற்றும் மன நல்வாழ்வுக்கு முக்கியம். நாம் உண்மையில் ரசிக்கும் விஷயங்களைச் செய்ய நாம் பெரும்பாலும் போதுமான நேரத்தை செலவிடுவதில்லை. அதிக நேரம் வேலை செய்ய வேண்டாம். பொழுதுபோக்குச் செயல்பாடுகளுடன், சோசியலைசிங், உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. நிகழ்காலத்தில் வாழுங்கள்: நான்காவதாக, கடந்த கால நினைவுகளுடனும் எதிர்காலம் நோக்கிய உந்துதலுடனும் இருப்பதை விடுத்து தற்போதைய கணத்தில் வாழப் பழகுங்கள். மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கணத்தில் இருப்பது என்பது உங்கள் மூளையை இந்தக் கணம் நோக்கித் திருப்புவதாகும். வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு அணுகுமுறையை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைகொள்ளலாம். உங்கள் சுற்றுச்சூழலை நன்றாக கவனித்து அவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதே விழிப்புணர்வு.
5. பாசிட்டிவ் வைப்ஸ்: அடுத்து, உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படித்தான் என்றால் அது அப்படித்தான், அதை மாற்ற முடியாது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனுடன் போய் மோதிக்கொண்டிருக்க முடியாது. நம் கட்டுப்பாட்டில் என்ன இருக்கின்றதோ அதை மட்டுமே சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த நேர்மறையான விஷயங்களையும் உற்சாகம் தரும் விஷயங்களையும் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். எப்போதும் பாசிட்டிவ் வைப்ஸ் பரவட்டும்.
6. கெட்டப் பழக்கங்களை தவிர்ப்பீர்: மகிழ்ச்சியாக இருப்பது என்றால் கடுமையாக மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது என்பதல்ல. இவையெல்லாம் பணிச்சுமையைக் குறைக்கும் வழிகள் என மயங்குதல் கூடாது. இதை எப்போதாவது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக, சோசியலைசிங் அம்சமாக வைத்துக் கொள்ளலாமே தவிர சாயங்காலாம் மணி 7 ஆனாலே கை நடுங்கும் அளவுக்கு கெட்டப் பழக்கங்களை பழகிவிடுதல் கூடாது.
குடிப் பழக்கம் முதலானவை ஸ்ட்ரெஸ் ரிலீஃப் அல்ல, மன அழுத்தத்தை அவை கூட்டவே செய்யும்.
உங்கள் நல்வாழ்வு பற்றி சிந்தியுங்கள், பணியிடங்களில் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும் உங்களுக்கான நல் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்
இவற்றைக் கடைபிடித்து, அலுவலகத்தில் முக்கியப் பணிகளை முதலில் முடிக்கும் கலையில் ஸ்மார்ட் ஆகிவிட்டால், நிச்சயம் மினி சமூகத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும்.
அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி? - ஊழியர்களை நிர்வகிக்க ‘புது’ மேலாளர்களுக்கு டிப்ஸ்!
Edited by Induja Raghunathan