இன்ஸ்டாவில் கலைத் திறமையை வெளிப்படுத்தி பிசினசில் வெற்றி கண்ட அக்ஷதா ஜெயின்!
அக்ஷதா ஜெயின் கலை வேலைப்பாடுகளில் இருந்த ஆர்வம் காரணமாக தொடங்கிய Knot Your Type வணிகம் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட தேவைக்களுக்கு ஏற்ப பரிசுப்பொருட்களை வழங்கும் வணிகம்தான்
. இன்ஸ்டாகிராமில் இது மிகவும் பிரபலம். இதில், ஒரு ரீல் வைரலான இரண்டு வாரங்களில் 19 மில்லியன் வியூஸ், 75,000 ஃபாலோவர்ஸ் கிடைத்தனர்.2021-ம் ஆண்டு மே மாதம் இதன் ரீல்கள் அனைத்தும் இரண்டு கோடியைக் கடந்துவிட்டன. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கின்றனர்.
இதன் பின்னணியில் இருப்பது யார் தெரியுமா? அக்ஷதா ஜெயின். புனேவைச் சேர்ந்த இவர் ஒரு இல்லத்தரசி. ட்ரெண்டியான இந்த ரீல்களை உருவாக்கியவர் இவர்தான்.

அக்ஷதா ஜெயின் - நிறுவனர், Knot Your Type
“வீட்டிலேயே இருந்ததால் கலையில் எனக்கிருந்த திறனை மெருகேற்ற நினைத்தேன். மாதத்திற்கு 10 அல்லது 15 ஆர்டர்கள் கிடைக்கும் என்று நினைத்தே இதைத் தொடங்கினேன். ஆனால் தற்போது மாதத்திற்கு 200 ஆர்டர்கள் பூர்த்தி செய்து வருகிறேன்,” என்கிறார் அக்ஷதா.
ரீல்கள் உருவாக்குவதில் தொடங்கிய இவரது முயற்சி ஒருகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வணிகமாகவே மாறிவிட்டது.
தொடக்கம்
அக்ஷதாவிற்கு கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகளில் ஆர்வம் அதிகம். நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ பரிசளிக்க வேண்டியிருந்தால் இவர் கடைகளுக்குச் சென்று பரிசுப்பொருட்கள் வாங்குவதில்லை, இவரே தன் கைகளால் உருவாக்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இத்தகைய வேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்ததால் கூகுள், யூட்யூப் போன்றவற்றில் தானாகவே கற்றுக்கொண்டுள்ளார். 'ஃபுரோஷிகி’ என்கிற ஜப்பானிய கலையில் இவர் திறன்மிக்கவர். இந்தக் கலையில் துணிகள் அல்லது கைகளால் தயாரிக்கப்படும் கார்டுகளைக் கொண்டு பரிசுப்பொருட்கள் ராப் செய்யப்படும். இதில் அக்ஷதா தேர்ந்தவராக இருந்தார். இப்படி இவர் கொடுத்த பரிசுப்பொருட்களைக் கண்டு நண்பர்களும் குடும்பத்தினரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
அக்ஷதா எம்பிஏ பட்டதாரி. பேஷன் டிசைனிங் பிரிவில் ஓராண்டு டிப்ளமோ முடித்துள்ளார்.
எம்பிராயிடரி வேலைப்பாடுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். இது தொடர்பாக இவர் தொடங்கியதுதான் Knot Your Type.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இவரது நண்பருக்கு திருமணம் நடந்தது. அக்ஷதா ஒரு பரிசுப் பொருளை எம்பிராயிடரி கொண்டு அழகுப்படுத்தி பரிசளித்தார். இது தொடர்பான ஒரு ரீல் பதிவு செய்திருந்தார். ஒரே வாரத்தில் ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கின. அவரவர் தனித்தேவைக்கேற்ப ஆர்டர் செய்திருந்தனர். ஆர்டர் அளவு அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் மேற்கொண்டு ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்தி வைத்திருந்தார்.
Knot Your Type நிறுவனம் ஓராண்டு காலத்தில் 1,500 ஆர்டர்களை நிறைவு செய்துள்ளது. இதில் 20 சதவீதம் சர்வதேச ஆர்டர்கள்.
அக்ஷதா சமூக வலைதளங்களைக் கையாள்வது, தயாரிப்பு, ஆர்டர் ட்ராக்கிங் என அனைத்தையும் தனி ஆளாக சமாளித்து வந்தார். தற்போது 10 பெண்கள் அடங்கிய குழுவாக இயங்கி வருகிறது. இந்தப் பெண்களுக்கு எம்பிராயிடரி வேலைப்பாடுகளிலும் கைகளால் எழுத்துகளை வடிவமைப்பதிலும் அக்ஷதா பயிற்சியளித்திருக்கிறார்.
அதேபோல், வீட்டிலிருந்து செயல்பட்டு வந்தவர் ஒரு ஸ்டுடியோவிற்கு மாற்றலாகியிருக்கிறார். ஆர்டர்களை ட்ராக் செய்ய வலைதளம் உருவாக்கியிருக்கிறார். முன்பு ஆர்டர் செய்த பிறகு டெலிவர் செய்ய 60 நாட்கள் வரை எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது சரியான குழு உருவாக்கியிருப்பதால் 20-25 நாட்களில் டெலிவர் செய்யப்படுகிறது.
சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்
பெருந்தொற்று சமயத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஸ்டுடியோவிலும் வீட்டிலும் மாறி மாறி வேலை செய்யவேண்டிய சூழல் இருந்துள்ளது.
“இடப்பற்றாக்குறை, மூலப்பொருட்கள் போன்றவை தொடர்பாகவும் சவால்களை சந்தித்தேன். டெலிவரிக்கு பெரும்பாலான தயாரிப்புகள் தயார்நிலையில் இருக்காது. இதுவும் சவாலாக இருந்தது,” என்கிறார்.

10,000 ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்ட Knot Your Type முதல் நாளிலிருந்தே லாபகரமாக செயல்பட்டு வருகிறது. 50 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார் அக்ஷதா.
பைகள், நேம்பிளேட் போன்ற கூடுதல் தயாரிப்புகளை இணைத்துக்கொண்டு விரிவடைய திட்டமிட்டிருக்கிறார்.
இன்று மக்களின் வருவாயும் செலவிடும் திறனும் மேம்பட்டுள்ள நிலையில், 2019ம் ஆண்டு 119 மில்லியன் டாலராக இருந்த பரிசுப்பொருட்கள் சார்ந்த சந்தை மதிப்பு 2025ம் ஆண்டில் 159 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக TechSci ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அக்ஷதா பொழுதுபோக்கிற்காக இந்த முயற்சியைத் தொடங்கியிருந்தபோதும் இது ஒரு வலுவான நிறுவனமாகவே மாறியிருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஆலோசனை கூறும் அக்ஷதா,
“தொழில் முயற்சியைத் தொடங்கி நூறு சதவீத ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துங்கள். என்றாவது ஒரு நாள் நீங்கள் நிச்சயம் வெற்றியடைவீர்கள். தோல்வியைக் கண்டு துவண்டு மனம் தளராதீர்கள்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சிம் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா