லாக்டவுனில் பிறந்த திறமை: குப்பைப் பொருட்களை கலைகளாக்கும் காரைக்குடி மாணவி!
கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கீர்த்திகா காலியான பாட்டில்களில் அற்புதமாக ஓவியங்கள் தீட்டி வருகிறார்.
ஒருவர் பயனற்றது என்று தூக்கியெறியும் ஒரு பொருள் மற்றொருவருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுண்டு.
வீணானது என தூக்கெயெறியப்படும் வளையல்கள், காலி பாட்டில்கள், அட்டைகள் போன்றவற்றை கண்கவர் கலைப்பொருட்களாக மாற்றி வருகிறார் காரைக்குடியைச் சேர்ந்த பொறியியல் மாணவி கீர்த்திகா.
கீர்த்திகாவின் அப்பா உலகப்பன். அம்மாவின் பெயர் கண்ணம்மாள். கீர்த்திகா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணிணி அறிவியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.
இவருக்கு சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். இடையில் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் ஓவியம் வரைவதை தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்தார்.
இவரது திறனை மீண்டும் வெளிக்கொணர்ந்தது கொரோனா பெருந்தொற்று. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கீர்த்திகா ஓவியம் வரைவதைத் தொடர்ந்தார்.
முதலில் பேப்பரில் வரையத் தொடங்கினார். காலி பாட்டில்களில் வரையலாம் என்கிற எண்ணம் தோன்றியதும் அதை முயற்சித்தார். காலி பாட்டிலில் இவர் வரைந்த ஓவியங்கள் தத்ரூபமாக இருந்தது. இதைக் கண்ட இவரது பெற்றோர் வியந்து பாராட்டினார்கள். தொடர்ந்து வரைய ஊக்குவித்தனர். தேவையான உதவிகளையும் செய்துள்ளனர்.
ஓவியம் வரைவது மட்டுமல்லாது வீணாக தூக்கியெறியப்படும் அட்டைகள், வளையல்கள் போன்ற பொருட்களை அற்புதமான கலைப்படைப்புகளாகவும் மாற்றி வருகிறார்.
“கொரோனா காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் எனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காமல் என் திறனை மேம்படுத்திக்கொள்ள நினைத்தேன். காலி பாட்டில்களில் ஓவியம் வரைந்தேன். கலைப்படைப்புகளையும் உருவாக்கினேன். என் படைப்புகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். பலர் பாராட்டினார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்களும் என் படைப்புகளை வாங்கி வருகின்றனர்,” என்று கீர்த்திகா ஆர்வம் குறையாமல் குறிப்பிடுகிறார்.
தகவல் உதவி: தி இந்து | கட்டுரை: Think Change India