’996’ அடிப்படையில் ஓவர்டைம் வேலை: அலிபாபா’ நிறுவனர் ஜாக் மா ஊழியர்களுக்கு அறிவுரை!
ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் என வாரத்தில் ஆறு நாட்கள் உழைக்க வேண்டும் என அலிபாபா நிறுவனர் ஜாக் மா பேசியிருப்பது சீனத் ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா குரூப் கம்பெனியின் நிறுவனர்.
1999-ம் ஆண்டு 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ நகரத்தில் தொடங்கப்பட்ட அலிபாபா, இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இன்றைய நாளில், ஜாக்மாவின் சொத்து மதிப்பு மட்டும் 40 பில்லியன் டாலரைத் தொட்டுவிட்டது. ஆசிய கோடீஸ்வரப் பட்டியலில் ஜாக் மாவின் பெயரும் உள்ளது.
தனது அயராத உழைப்பினால் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ள ஜாக்மா, தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தான், சீனத் ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி ஊழியர்கள் ஆவேசப்படும் அளவிற்கு அவர் என்ன பேசினார் எனத் தெரிந்து கொள்வதற்கு முன், அவர் உழைப்பால் உயர்ந்த கதையை சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
அலிபாபா வளர்ந்த கதை:
“இன்று கடினமான நாளாக இருக்கும். நாளை மிகவும் கடினமாக நாளாக இருக்கும். ஆனால் நாளைய மறுநாள் அழகான ஒன்றாக இருக்கும்,” இது தான் ஜாக்மாவின் வெற்றிக்கான தாரக மந்திரம்.
இதை முன்வைத்து தான், தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சவால்களையும், போராட்டங்களையும் எதிர் கொண்டு வெற்றி பெற்று வருகிறார். 1964ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஸ்வு ப்ரோவின்ஸ் என்ற இடத்தில் பிறந்த ஜாக்மாவிற்கு தற்போது வயது 55.
பள்ளிப் பருவம் முதல் பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும் வரை பெரும்பாலும் அனைத்திலும் முதலில் தோல்வியையே சந்தித்தவர் ஜாக் மா. இவர் வேலைக்காக விண்ணப்பித்த 30 வெவ்வேறு நிறுவனங்களிலும் இவரைத் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாத ஜாக்மா, சில காலம் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, அரசு சம்பந்தப்பட்ட வேலையில் சேர்ந்தார். அங்கு கிடைத்த குறுகிய கால அனுபவத்தின் மூலம், 1999ம் ஆண்டு தனது வீட்டிலேயே அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி-இல் அவர் நிறுவனத்துக்கு நீதி மறுக்கப்பட்ட பொழுதும் அவரின் விடாமுயற்சியால் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சாப்ட் பேங்க் மூலம் முதலீடு பெற்றார். அதன் மூலம் தனது அலிபாபாவை அவர் வலுப்படுத்தினார். ஜாக்மாவின் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் அலிபாபா சர்வதேச அளவுக்கு விரிவடைந்தது.
2014 ஆண்டு உலகின் மிகப் பெரிய ஐபிஓ ஆனது அலிபாபா. நியூயார்க் பங்குச்சந்தை மூலம் 25 பில்லியன் டாலர் முதலீட்டினை ஜாக் மா திரட்டினார். ஆன்லைன் சில்லறை வர்த்தகம், ஹாலிவுட் திரைப்படம், பணப்பரிவர்த்தனைகளில் எடுத்த துணிகரமான முயற்சி ஒரே ஆண்டில் அலிபாபாவுக்கு 400 பில்லியன் டாலர்களை ஈட்டித் தந்தது. இன்று வரை ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாக் மா கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
“நாம் எப்போதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது, உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உண்டு. விட்டுக்கொடுப்பது மிகப் பெரிய தோல்விக்கு உங்களை இட்டுச்செல்லும்,” என்கிறார் ஜாக் மா.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறிய ஜாக் மா, தான் சம்பாதித்த பணத்தையே செலவழிக்க தனது மீதி காலம் போதாது என கடந்தாண்டு ஓய்வு எடுக்க முடிவு செய்தார். அதன்படி, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அதோடு, மீண்டும் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஆனாலும், 2020-ம் ஆண்டு வரை அலிபாபாவின் இயக்குநராகவும், அலிபாபாவின் நிரந்தர இணை நிறுவனராகவும் அவரே தொடர இருக்கிறார்.
ஓவர்டைம் :
இந்தச் சூழ்நிலையில் தான், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜாக்மா, ஊழியர்களின் வேலை நேரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர்,
“என்னைப் பொறுத்தவரை ஊழியர்கள் ஓவர்டைம் வேலைபார்ப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்கிறேன். 996 என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும். இளைஞர்கள், இந்த வயதில் ஒருநாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்யவில்லை என்றால், வேறு எப்போது செய்யப்போகிறீர்கள்?,” என கேள்வி எழுப்பியுள்ளார்.
996 என்பது காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பதன் அர்த்தமாகும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் உழைத்ததால்தான், அலிபாபா போன்ற சீனாவில் உள்ள சில ஆன்லைன் நிறுவனங்கள் இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் ஜாக்மா முன்னுதாரணம் காட்டியுள்ளார். மேலும்,
‘நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் மற்றவர்களை விட அதிகமாக உழைப்பைக் கொடுக்கவில்லை என்றால் எப்படி நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். இன்றைய உலகில் உள்ள எல்லோருக்குமே தங்களுக்கான வெற்றி தேவைப்படுகிறது தானே..? ஒரு அருமையான வாழ்க்கை தேவைப்படுகிறது தானே..? ஒரு மதிப்பு மற்றும் மரியாதை தேவைப்படுகிறது. இதை கொடுக்க நீண்ட நேரம் உழைப்பதில் என்ன தவறு?’ எனக் கேட்டுள்ளார் ஜாக் மா.
கூடவே, ‘சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1970 முதல் 2000-ம் ஆண்டு வரை 10 சதவிகிதத்திற்கு அதிகமாகவே இருந்துவந்தது. ஆனால் அது தற்போது குறைந்தது 6 சதவிகிதமாக உள்ளது. இதனை அதிகப்படுத்த வேண்டுமானால், 996 முறையை கடைபிடிக்க வேண்டும். இது, மீண்டும் சீனாவை பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்லும். நீங்கள், அலிபாபா நிறுவனத்தில் சேர விரும்பினால், 12 மணி நேரம் வேலைசெய்யத் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், அலிபாபா நிறுவனத்துக்கு நீங்கள் தேவை கிடையாது. 8 மணி நேரம் வேலைசெய்பவர்கள் யாரும் எங்களுக்குத் தேவையில்லை’ என தன் பேச்சில் ஜாக்மா தெரிவித்திருந்தார்.
ஜாக்மாவின் இந்தப் பேச்சு தான் சீன தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலர் சமூகவலைதளங்களில் தங்களது கண்டனங்களையும், கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
அதோடு, ‘இப்படி வேலை செய்தால் ஊழியர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்’ என தொழிலாளர் சங்கங்களும் ஜாக்மாவின் பேச்சுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த எதிர்ப்புகளைப் பற்றி கண்டு கொள்ளாத ஜாக்மா, ‘உங்களுக்குப் பிடித்த வேலையை நீங்கள் தேர்வுசெய்திருந்தால், உங்களுக்கு 996 ஒரு பிரச்னையாகவே தெரியாது. மாறாக, பிடிக்காத வேலையைச் செய்தீர்கள் என்றால், ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வேலை ஒரு துன்பமாகவே இருக்கும்’ எனக் கூறி எரியும் தீயில் மேலும் எண்ணெய் வார்த்துள்ளார்.
அப்படியென்றால் தற்போது நாங்கள் என்ன வேலை செய்யப் பிடிக்காமல், கடமைக்காகவா வேலை செய்து வருகிறோம் என்று ஜாக்மாவின் இந்தப் பேச்சும் ஊழியர்கள் மத்தியில் மேலும் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஜாக் மாவின் இந்தப் பேச்சால், அலிபாபாவும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம் சீன தொழிலாளர் சட்டங்களையும் மீறி தன் ஊழியர்களை வேலை வாங்கி இருப்பதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. சீனாவில் ஊழியர்களின் ஏழு நாட்களுக்கான பணிநேரம் 40 மணி நேரங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.