கோவில் அமைப்பில் தங்கம், வெள்ளி சிலைகள்: அசர வைக்கும் அனந்த் அம்பானி திருமண அழைப்பிதழ்!
ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அனந்த் அம்பானியின் திருமண பத்திரிகையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன கோவில் போன்று பிரமாண்டமாக இருக்கும் அந்த பத்திரிகை பார்ப்பவர்களை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
யாராவது ஏதாவது ஒரு விசயத்தை பிரமாண்டமாகச் செய்ய நினைத்தால், அவர்களைப் பார்த்து மற்றவர்கள், ‘பெரிய அம்பானி மகன்னு நினைப்பு’ எனச் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஏனென்றால், அம்பானி வீட்டு விசேஷங்கள் எல்லாமே அந்தளவுக்கு பேர் போன பிரமாண்டங்கள்.
அம்பானி தங்களது வீட்டு விசேஷங்கள் ஒவ்வொன்றையுமே ஊரே வியந்து பார்க்கும் அளவிற்குத்தான் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போதும் அப்படித்தான், அவரது இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபரின் மகளுமான ராதிகா மெர்செண்ட்டுக்கும் நடைபெற உள்ள திருமணத்தை உலகமே கவனிக்கும் அளவிற்கு ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள்
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதில் சர்வதேச அளவில் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் கப்பலில் மீண்டும் கொண்டாட்டங்கள் களை கட்டியது. இதிலும் பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளுமே கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டங்களாகும். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களே இவ்வளவு செலவில் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டதென்றால், நிச்சயம் திருமணம் இதைவிட விமர்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

3 நாள் கொண்டாட்டம்
அடுத்த மாதம் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது என்பது ஏற்கனவே நமக்குத் தெரிந்த தகவல்தான் என்றாலும், இந்த முறை திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. 12ம் தேதி சுப விவாஹ், 13ம் தேதி சுப் ஆசிர்வாத் மற்றும் 14ம் தேதி மங்கள் உட்சவ் என இந்த மூன்று நாட்களுக்கும் அழைப்பிதழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலும் சர்வதேச அளவில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படி கலந்து கொள்ளும் விருந்தினர்கள், எந்தெந்த நிகழ்விற்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என்றும் இந்த அழைப்பிதழிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் திருமணத்தில் இன்னும் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இப்போதே மக்கள் ஆர்வமாகி விட்டனர்.

வியக்க வைக்கும் அழைப்பிதழ்
இந்நிலையில், திருமண தேதி நெருங்கி விட்டதால், திருமண அழைப்பிதழ் வழங்கும் வேலையை ஆரம்பித்து விட்டனர் அம்பானி குடும்பத்தினர். அப்படியாக அம்பானி தனது மகனுக்காக பார்த்து பார்த்து வடிவமைத்த அந்த திருமண அழைப்பிதழில் என்னென்ன அமைந்திருக்கிறது என்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்த திருமண அழைப்பிதழானது பார்ப்பதற்கு சிறு கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. அதன் மேல் உள்ள கதவைத் திறக்கும்போது, மந்திரம் ஒலித்துக் கொண்டே உள்ளே ஒரு கோவில் பிரகாரம் மற்றும் கருவறை போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தங்கள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட சிலைகள் உள்ளது.
அதன் கீழே இருக்கும் பெட்டி போன்ற அமைப்பை வெளியே எடுத்தால் அதில் திருமண விவரங்கள் புத்தகம் போன்ற அமைப்பில் பல பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதன் அருகே இரண்டு பெட்டிகளில் கடவுள் சிலைகளும், ஒரு சால்வையும், அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு கைக்குட்டை போன்ற துணியும் உள்ளன.
தங்கமும், வெள்ளியும்..
இந்த அழைப்பிதழ் அமைப்பு பார்ப்பதற்கு பக்தி மயமாகவும், தங்கத்தாலும், வெள்ளியாலும் நிறைந்து ஆடம்பரமாகவும் இருப்பதாக இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மற்றொரு புறம்,
“பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். பத்திரிகைக்கு இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்ததற்குப் பதில், அந்தப் பணத்தில் ஏழை, எளியவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம்” என்பது மாதிரியான கண்டனப் பதிவுகளும் இந்த வீடியோவிற்கு குவிந்து வருகின்றன.

லண்டனில் அனந்த் அம்பானியின் திருமணமா? ரூ.572 கோடி மதிப்புள்ள அரண்மனையின் சிறப்பம்சங்கள் என்ன?