'அன்னைத் தமிழில் அர்ச்சனை' - 47 தமிழக கோயில்களில் இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தின் 47 கோயில்களில் நடைமுறைக்கு வந்தது!
தமிழக அரசின் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்கிற திட்டம் இன்று தொடங்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின் உத்தரவின் படி, இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் இந்து கோயில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வந்தன. இதனால் உலகின் தொன்மையான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தமிழ் அமைப்புகள் சமீபகாலமாக போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.
இந்த கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் வகையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்தது. தற்போது இதனை செயல்படுத்தும் பொருட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பை சில தினங்கள் முன் வெளியிட்டு தற்போது இந்தத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக ஏற்கனவே சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். பின்னர், இன்றில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், உள்ள 47 திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த 47 திருக்கோயில்களிலும் ‘அன்னை தமிழில் அர்ச்சனை' என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதோடு, அந்த கோயில்களின் அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 1971ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி இதே திட்டத்தை பல்வேறு எதிர்ப்புக்கு மத்தயில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போதும் இந்தத் திட்டம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
அன்று கபாலீஸ்வர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்தவர் குமார குருக்கள் என்பவர் தான். தற்போது இந்த குமார குருக்களின் மகன் வெங்கட் சுப்பிரமணியன் இதே கபாலீஸ்வர் கோவிலில் தமிழில் மந்திரத்தை ஓத ஆர்வமுடன் இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தபோது இந்த திட்டத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக திருவாடுதுறை ஆதீனம் உட்பட ஆன்மீகக் குருக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த 47 கோவில்கள் மட்டுமில்லாமல் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.