புகையிலை உபயோகிப்பவரா நீங்கள்? இந்த கதை உங்கள் எண்ணத்தை மாற்றலாம்!
போதைப்பொருள் அடிமையிலிருந்து மீண்டு, நம்பிக்கைக்குரிய பெண்ணாக மாற்றியிருக்கும் சுனிதா!
வாழ்க்கையில் போதைப்பொருளால் அடிமையாகி, அதிலிருந்து மீண்டு, தன்னை நம்பிக்கைக்குரிய ஒரு பெண்ணாக மாற்றியிருக்கும் சுனிதாவின் வாழ்க்கைப்பயணம் உங்கள் வாழ்விலும் ஒளியை ஏற்றலாம்.
"எனது பெயர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனக்கு வயது 38. மும்பையின் புறநகர்ப் பகுதியான முலுண்டில் உள்ள இந்திரா நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டம் தான் எனது சொந்த ஊர்.
எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 15 வயதில் ஒரு மகனும், 8வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். என் கணவர் உள்ளூர் மளிகைக் கடையில் உதவியாளராக பணிபுரிகிறார், நான் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறேன். வெளிப்புறத்திலிருந்து பார்க்கும்போது, சாதாரணமான வழக்கமான ஒரு குடும்பத்தை போல நாங்கள் காட்சியளிக்கலாம். ஆனால், உள்ளுக்குள் நான் பல தடைகளையும், சவால்களையும், கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறேன்.
பாரம்பரிய வழக்கம் மற்றும் நம்பிக்கை காரணமாக, நான் கருவுற்றிருந்த காலத்தில் என் உறவினர் மூலம் புகையிலை பழக்கத்தை மெல்ல ஆரம்பித்தேன். நான் புகையிலைகளை நசுக்கி மென்று சாப்பிட்டேன். முதல் குழந்தை பிறந்தபிறகு, நான் புகையிலையை தினமும் சாப்பிட்டு அதற்கு அடிமையாகிவிட்டேன். இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போதும் இதே நிலைதான் நீடித்தது. இரண்டாவது மகன் பிறந்த பிறகும் கூட என்னால் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து மீள முடியவில்லை. இதற்கிடையில் நான் மீள முயற்சித்து தோற்றுப்போனேன்.
நிக்கோடின் பற்றாக்குறையால் வேலை செய்வதற்கான சக்தி இல்லாமல் தவித்தேன். மன அழுத்தம், ஆன்க்ஸைட்டி உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். எனது முதலாளிகள் பலர் தங்கள் வீடுகளில் புகையிலை மென்று சாப்பிடுவதைத் தடைசெய்திருந்தார்கள், நான் அதற்காக போராடவும் செய்தேன். நான் அவர்களுக்குத் தெரியாமல் அடிக்கடி புகையிலையை பயன்படுத்தி வந்தேன். ஒருநாள் உண்மை வெட்ட வெளிச்சமாகி என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். புகையிலையுடனான எனது தொடர்பு வேலையை மட்டும் பறிக்கக் காரணமாக இல்லை. மாறாக என்னை மனதளவிலும் கடுமையாக பாதித்தது.
கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நான் லைஃப் ஃபர்ஸ்ட் அமைப்பை அணுகினேன். இது நகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தொலைபேசி மூலம் தனிப்பட்ட உணர்திறன் அமர்வுகளை நடத்தி வந்தது. அதன் ஆலோசகர்களில் ஒருவரான ஆஷா காம்ப்ளே, நான் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதை பற்றி அறிந்துகொண்டு என்னிடம் வந்து பேசினார். புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்து பொறுமையாக என்னிடம் விரிவாக விளக்கத் தொடங்கினார்.
மேலும் புகையிலை பயன்படுத்துபவர்கள் எளிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அவர் விரிவாக சொன்னபோது, நான் பயந்துவிட்டேன். இதையடுத்து நான் புகையிலையை கைவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்தேன். கொரோனா ஊரடங்கு எனக்கு பெரிதும் உதவியது. ஏனென்றால் ஊரடங்கு காரணமாக புகையிலையை வாங்குவதற்கான வாய்ப்பு குறைந்தது. மேலும், அதன் விலையும் அதிகரித்தது. புகையிலை பெறுவதற்கான குறைந்த வழிமுறைகள் இருந்தபோதிலும், எனக்கு கிடைத்த எந்த சந்தர்ப்பத்திலும் நான் தொடர்ந்து என் பழக்கத்தை வளர்த்துக் கொண்டேயிருந்தேன்.
ஆனால் லைஃப்ஃபர்ஸ்டில் உள்ள ஆலோசகர்கள் என்னை உடனடியாக அதை கைவிட அனுமதிக்கவில்லை. என் போதை பழக்கத்தை போக்க ஆஷா எனக்கு கொடுத்த உதவிக்குறிப்புகள் / நுட்பங்களை அர்ப்பணிப்புடன் பின்பற்ற ஆரம்பித்தேன். இறுதியில், நான் புகையிலை பயன்படுத்துவதிலிருந்து முழுமையாக வெளியேறினேன். வெறுமனே என் போதை பழகத்திலிருந்து மட்டும் நான் வெளியேறவில்லை. மாறாக, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்த எனது உறவினர்கள் இருவரை நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் பயன்படுத்தி மீட்க முடிந்தது.
இன்று நான் என்னுடையை வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டேன். நான் தற்போது என்னுடன் பழகுபவர்களை புகையிலையிருந்து தள்ளியிருங்கள் என்று அறிவுறுத்துகிறேன். நான் நன்றாக சாப்பிடுவேன் என்று நம்புகிறேன், ஆரோக்கியமான, சத்தான உணவை சமைப்பதற்கான ஆர்வத்தையும் பெற்றிருக்கிறேன். வீட்டு பணிப்பெண்ணாக இருக்கும் வேலையை உதறித்தள்ளிவிட்டு, ரெஸ்டாரண்ட் ஒன்று நடத்தி மக்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. ஒருநாள் செஃப்-பாக மாறுவேன்,” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் சுனிதா.
தொகுப்பு: மலையரசு