போதைக்கு அடிமையாகி உயிரிழந்த மகன் நினைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி!
முக்தியார், புபேந்தர் சிங் தம்பதி தங்கள் மகன் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழந்ததை அடுத்து வீடு வீடாகச் சென்று இந்த கொடிய பழக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்கள் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் மூன்றில் ஒருவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
அவ்வாறு போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களில் ஒருவர்தான் மன் ஜீத்சிங். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி இந்தக் கொடிய போதைப் பழக்கத்தால் இவர் உயிரிழந்தார். முக்தியார் சிங், பூபேந்திர கௌர் ஆகியோர் இவரது பெற்றோர். இவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தத் தம்பதி தங்களது மகனின் உடலின் மேல் போர்த்திய துணியை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்து மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தத் தம்பதி வீடு வீடாகச் சென்று இந்தக் கொடிய பழக்கத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
முக்தியார் சிங், பூபேந்திர கௌர் தம்பதி தாம் தரண் மாவட்டத்தில் உள்ள பட்டி நகரில் குடியிருப்போர்களை அணுகி இந்தக் கொடிய பழக்கத்தில் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த மோசமான பழக்கத்தில் இருந்து மீண்டெழ தொடர்புடைய அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனர்.
“அடுத்தடுத்த அரசாங்கங்களும் இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. கள நிலவரம் எப்போதும் மோசமாக உள்ளது,” என்று முக்தியார் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் உதவி லைன்மேனாக கெம் கரண் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள முக்தியார் வார இறுதி நாட்களில் குறைந்தபட்சமாக ஐந்து குடும்பங்களை சந்திக்கிறார்.
“இரண்டு குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் உடலை தகனம் செய்வதற்காக என்னிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருட்களுக்கு அடிமையான காரணத்தினாலேயே அவர்கள் உயிரிழந்தனர் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர். இதுபோல் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பல குழந்தைகள் உயிரிழக்கும்போதும் அவர்களது பெற்றோர் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்வதில்லை. சமூகம் மற்றும் காவல்துறை தரப்பில் கொடுக்கப்படும் அழுத்தமே இதில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கு முக்கியக் காரணம்,” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதற்கு முன்பு முக்தியார் தனது மகனின் உடலின் மேல் போர்த்திய துணியை சுமந்துகொண்டு சப்-டிவிஷனல் மேஜிஸ்டிரேட் அலுவலகத்தை அணுகினார். பிரதமர் நரேந்திர மோடியிடமும் முறையிட்டார். பஞ்சாபில் உள்ள இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்கவேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
“அப்போதைய சப்-டிவிஷனல் மேஜிஸ்டிரேட் இடம் என் மகனின் உடலில் போர்த்தியிருந்த துணியை சமர்ப்பித்து பிரதமர் அலுவலகத்திற்கு அதை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அது சென்றடையவில்ல்லை. அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக எனக்கு ஏற்பட்டுள்ள வலி குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லலாம் எனத் தீர்மானித்தேன். என் மகனின் மரணத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக ‘Kaffan Bol Peya’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கினேன்,” என்று ‘தி ட்ரிப்யூன்’ இடம் தெரிவித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA