'செயற்கை நுண்ணறிவு அனைத்து வேலைகளையும் ஒழித்து விடும்' - எலான் மஸ்க்
பாரீஸில் வியாழக்கிழமையன்று (23-5-2024) ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற எலான் மஸ்க், ஏஐ-யின் வளர்ச்சியால் இன்னும் சில காலத்தில் நம்மில் யாருக்கும் வேலை இல்லாமல் கூட போய்விடலாம், என்று பேசியுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (AI) அனைத்து வேலைகளையும் ஒழித்துக்கட்டி விடும் என்று கூறியுள்ளார். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான வளர்ச்சி அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரீஸில் வியாழக்கிழமையன்று (23-5-2024) ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற எலான் மஸ்க், “ஒருவேளை நம்மில் யாருக்கும் வேலை இல்லாமல் கூட போய்விடலாம்...” என்றார்.
இந்த நிகழ்வில் எலான் மஸ்க் பேசியபோது,
நீங்கள் ஹாபியாக ஏதாவது ஒரு வேலையைச் செய்யலாம் என்ற நிலைக்கு உங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு சென்று விடும். இருந்தாலும் கூட செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வழங்கி விடும்.
இப்படிப்பட்ட நிலை தோன்றி அது வெற்றி பெற வேண்டுமெனில் உலகளாவிய பெரும் சம்பள நிலை தோன்ற வேண்டும். இந்த உலகளாவிய பெரிய சம்பளத்தை அடிப்படை வருமானத்துடன் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
சரக்குகள் மற்றும் சேவைகளில் எந்தவித குறைபாடுகளும் ஏற்பட்டு விடக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக AI செயல்திறன்கள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. மிக வேகமாக முன்னேறி வருவதால் நிறுவனங்கள், பயனாளர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்கள் இதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில் இன்னும் தீர்மானமான முடிவை எட்டவில்லை.
கணினிகளும் ரோபோக்களும் நம்மை விட சிறப்பாக அனைத்தையும் செய்ய முடியும் என்றால் நம் வாழ்க்கையில் அர்த்தம் இருக்கிறதா என்ன? ஆனால், மனிதர்களுக்கு இன்னமும் கூட ரோல் உள்ளது என்றே கருதுகிறேன்.
மேலும், குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாடுகளை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் டோபமைன் செயல்பாட்டை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவினால் நிரல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு எலான் மஸ்க் பேசினார்.