அம்பானியை பின்னுக்குத் தள்ளிய ‘தண்ணீர் பாட்டில் கிங்' ஆசிய பணக்காரர் ‘ஜாங் ஷான்ஷன்'
ஜாங் ஷான்ஷன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்!
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி, ஜாக் மா ஆகிய தொழிலதிபர்களை பின்னுக்குத்தள்ளியிருக்கும் இவரைப் பற்றி பார்ப்போம்.
ஜாங் ஷான்ஷன். 66 வயதான இவர், சீனாவின் பிரபலமான தொழிலதிபர். இவர், காளான் வளர்ப்பு, மருத்துவம், ஊடகம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் தொழில்களை செய்து வருகிறார்.
2020ம் ஆண்டு ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பு 70.9 பில்லியன் டாலரில் இருந்து 77.8 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததன் மூலம், ஜாங் ஷான்ஷன் உலகின் 11 ஆவது பணக்காரராக உயர்ந்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் உலகப் பணக்காரர்கள் செய்யும் பிரபல தொழில்கள் எதையும் செய்வதில்லை. அரசியல்வாதிகளுடனோ, அரசியல்கட்சிகளுடனோ அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால் தான் அவர், சீனாவின் ‘லோன் வூல்ப்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
அவருக்கு சம்பந்தமில்லாத துறைகளில்தான் அவர் வெற்றிப்பெற்றுள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பெய்ஜிங் வாண்டாய் மருந்தியல் நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கினார். அதற்கடுத்த சில மாதங்களில் நோங்பூ ஸ்பிரிங் கோ என்ற தண்ணீர் பாட்டில்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் வாங்கினார்.
வாண்டாய் நிறுவனத்தின் பங்குகள் 2000சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து அவருக்கு கைகொடுத்தது. அதுமட்டுமின்றி, நுங்பு ஸ்பிரிங் தண்ணீர் பாட்டில் நிறுவனத்தின் பங்குகள் 155 சதவீதமாக தற்போது எகிறி இருக்கிறது. இதன்மூலம் அவர் ஆசியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த வருடம் அம்பானி, ஆசியாவின் முதல் பணக்காரராவதற்கு முன்பு, அவருக்கு போட்டியாக இருந்தவர் ஜாக் மா. அவரது சொத்த மதிப்பு 61.7 பில்லியன் டாலரில் இருந்து 51.2 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது. ஆனால், அம்பானியின் சொத்து மதிப்பு 18.3 பில்லியன் டாலரில் இருந்து 76. 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பல்வேறு தொழில்கள் மாற்றங்கள் மூலம் முன்னேறி வந்தாலும், ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்புடன் ஒப்பிடும்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் அம்பானி.