ஓசூரில் 4 லட்சம் பைக்குகள் தயாரிக்கும் ஏதர் எனர்ஜியின் பிரம்மாண்ட ஆலை: சிறப்பு அம்சங்கள் என்ன?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 650 கோடி ரூபாய் முதலீடு!
Hero MotoCorp-ஐ ஆதரிக்கும் மின்சார இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy) தனது இரண்டாவது உற்பத்தி ஆலையையும் தமிழகத்தின் ஓசூர் நகரில் அமைத்து வருகிறது.
450 எக்ஸ் மற்றும் 450 பிளஸ் என்ற இரு மாடல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு 4லட்சம் என்ற எண்ணிக்கையில் உற்பத்தியை அதிகரிக்க இரண்டாவது உற்பத்தி வசதியை அமைத்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைத் தவிர, புதிய உற்பத்தி அலகு, லித்தியம்-அயன் பேட்டரிகளிலும் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும்,
ஆண்டுக்கு 400,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய திறன் 120,000 யூனிட் மட்டுமே என்பதால் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஏதர் எனர்ஜி கடந்த அக்டோபரில், அதிக மாதாந்திர விற்பனையைக் கொண்டிருந்தது. அதன்மூலமாக கடந்த ஆண்டை விட 12 மடங்கு வளர்ச்சியை அந்த நிறுவனம் பதிவுசெய்தது. தவிர, நிறுவனம் 100 மில்லியன் டாலர் வருவாய் விகிதத்தை அடைந்துள்ளது.
இந்த மிகப்பெரிய வருவாய் காரணமாக எலெக்டிரிக் வாகனப் பிரிவில் மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய தயாரிப்பாளராக ஏதர் எனர்ஜி திகழ்கிறது. இந்த வளர்ச்சி குறித்து பேசிய ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா,
நாடு முழுவதும் எலெக்டிரிக் வாகனத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மின்சார ஸ்கூட்டர்களை விரும்புகிறார்கள். எங்களின் 450 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான 450X மற்றும் 450 பிளஸ் நாட்டிலேயே சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பதால், இந்த ஸ்கூட்டர்களுக்கு அதிகத் தேவை உள்ளது,” என்கிறார்.
”வரும் காலாண்டுகளில் எங்கள் சில்லறை வர்த்தகம் ஆறு மடங்கு வளர்ச்சி அடையும். 2022 ஆம் ஆண்டிற்குள் இரண்டாவது ஆலையை நாங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவருவோம். இந்தத் திறன் விரிவாக்கத்தின் மூலம், அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் மிகப்பெரிய எலெக்டிரிக் வாகன உற்பத்தியாளராக ஆவதற்கு ஏதர் எனர்ஜி தயாராகி வருகிறது," என்றுள்ளார்.
சிறப்பம்சங்கள்!
* ஓசூரில் திறக்கப்படவுள்ள இரண்டாவது ஆலை அடுத்த ஆண்டுக்குள் (2022) செயல்பாட்டுக்கு வரும்.
* நவம்பர் 2020 முதல் ஏதர் எனர்ஜி 20% மாத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
* இந்தியாவில் அதிகம் விருது பெற்ற EV ஸ்கூட்டராக ஏதர் எனர்ஜியின் 450X பெற்றுள்ளது.
* வாடிக்கையாளர்களின் அதிகத் தேர்வாகவும் 450X ஸ்கூட்டர் இருக்கிறது.
* ஏதர் எனர்ஜியின் 450X மற்றும் 450 Plus மாடல் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் 90% இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
* இந்த ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பேக் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும்.
* உற்பத்தித் திறனை மேம்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது ஏதர் எனர்ஜி.
* EV உற்பத்தியைத் தவிர, லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பிலும் கவனம் செலுத்தும் நோக்கில் புதிய ஆலை திறக்கப்படவுள்ளது.
* லித்தியம்-அயன் (li-ion) பேட்டரிகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் 13 காப்புரிமைகளை ஏதர் எனர்ஜி தாக்கல் செய்துள்ளது.
* மார்ச் 2023க்குள் 100 நகரங்களில் சுமார் 150 மையங்களை விரிவுபடுத்த ஏதர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.