உலகின் முதல் முற்றிலும் பெண்களே இயக்கும் ஆலை: 10,000 பெண்களுக்கு வேலை வழங்கும் ஓலா!
முதல் தொகுப்பை வரவேற்று உற்சாகம்!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிவிப்பு வெளியானது முதலே பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதற்கேற்ப, இ-ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது. தற்போது மற்றொரு நற்செய்தியை ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை. ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ஓலாவின் ஃப்யூச்சர் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும் என்றும் இங்கு 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர்,
“தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த வாரத்தின் முதல் தொகுதியை நாங்கள் வரவேற்றோம். இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்," என்று அறிவித்திருக்கிறார்.
மேலும்,
“பெண்களையும் உள்ளடக்கிய தொழிற்சாலையை உருவாக்க ஓலா நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் இது முதல் முயற்சி. பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க ஓலா முழு முனைப்புடன் உள்ளது. முக்கிய உற்பத்தித் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நாங்கள் கணிசமாக முதலீடு செய்துள்ளோம், மேலும், ஓலா எதிர்காலத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்தின் முழு உற்பத்திக்கும் பெண்கள் பொறுப்பாக இருப்பார்கள். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.”
தொழிலாளர் பணியிடத்தில் பெண்களுக்கு சமத்துவத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 27 சதவிகிதம் அதிகரிக்கும்.
"ஆனால் இதற்கு நம் அனைவரிடமிருந்தும் சுறுசுறுப்பான மற்றும் நனவான முயற்சிகள் தேவை, குறிப்பாக உற்பத்தியில் பங்கேற்பு மிகக்குறைவாக 12 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இந்தியா உலகின் உற்பத்தி மையமாக இருக்க, நாங்கள் எங்கள் பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் அகர்வால்.
ஓலா ‘வருங்கால தொழிற்சாலை' 2021-ஆம் ஆண்டிற்குள் அதன் முதல் இரண்டு மில்லியன் மின்சார வாகன (EV) ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னெடுக்கத் தயாராக உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 75-வது இந்திய சுதந்திர தினத்தன்று, S1 மற்றும் S1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளுடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-S1 அறிமுகம் மற்றும் விலையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.