'பூஜ்ஜியத்தில் தொடங்கி லட்சங்களில் வர்த்தகம்' - சவால்கள் மத்தியில் Towman ஸ்டார்ட்-அப் நடத்தும் கடலூர் இளைஞர்!
கார், பைக் அல்லது எந்த வாகனமாக இருந்தாலும் இந்தியாவின் எந்த சாலையில் பழுதாகி நின்றாலும் உடனடி சேவையை 24*7 நேரம் வழங்கி வருகிறது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்பான Towman.
கடலூரை அடுத்த திருவந்திபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சிலம்பரசன் ராமகிருஷ்ணன். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் அலாதி ஆர்வம்.
அதனால் தனது தொழிலையும் அந்தத் துறையிலேயே அமைத்து 2008ம் ஆண்டில் மாருதி நிறுவனத்தில் இணைந்து தன்னுடைய தொழில்முறை பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். அரசுப்பள்ளியில் படித்து ஆட்டோமொபைல் துறையில் பெற்ற அனுபவத்தை வைத்து தொழில்முனைவராக வளர்ந்து வருவது பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் Towman நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சிலம்பரசன் ராமகிருஷ்ணன்.
தொழில்முனைவராகும் சிந்தனையே நிறுவனங்களில் பணியாற்றிய போது தான் வந்தது. அது வரையில் நிரந்தர மாத சம்பளம், அடுத்தடுத்த பதவி உயர்வுகள் என்றே பயணித்துக் கொண்டிருந்தேன். மாருதி, ஃபோர்டு, ஹுண்டாய் நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதியாக 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.
அதன் பின்னர், குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உற்பத்திப் பிரிவிலும் பணியாற்றி இருக்கிறேன். அந்த நிறுவனத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர்கள் மற்றும் சீட்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனையை கவனிக்கும் மண்டல மேலாளராகப் பணியாற்றி இருக்கிறேன்.
2015ம் ஆண்டில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மண்டல மேலாளராக பிரேக் டவுன் ஆகும் வாகனங்களை சரிபார்த்து கொடுக்கும் பணியை செய்து வந்தேன். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் மற்றும் தென் இந்தியா முழுவதையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்தேன். அந்த சமயத்தில் சென்னை பெருவெள்ளம் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
”பெருவெள்ளத்தில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கிப் போனது. அந்த சமயத்தில் ’ஆபரேஷன் சென்னை’ என்கிற ஒரு குழுவை அமைத்து நீரில் மூழ்கிய சுமார் 10 ஆயிரம் வாகனங்களை மீட்டு சரிபார்த்துக் கொடுத்தோம்.”
அந்த நேரத்தில் வாகனங்களை tow செய்யும் வாகனங்களும் இங்கு இல்லை, மெக்கானிக்குகளும் கிடைக்கவில்லை. இந்தியாவின் இதர பகுதிகளில் பணியாற்றிய அனுபவத்தால் அந்த நபர்களுடனான தொடர்பை பயன்படுத்தி அவர்களை சென்னைக்கு வரவழைத்து, மீட்பு வாகனங்களைக் கொண்டு வந்தும் சென்னைவாசிகளின் வாகனங்களை மீட்டுத் தந்தோம்.
அப்போது தான் நாமே இதனை ஒரு ஸ்டார்ட் அப்பாக உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அனுபவமும், திட்டமும் இருக்கிறது, ஆனால், இதற்கான பின்புலத்தில் இருந்து ஆதரிக்க யாரும் இல்லாததால் அந்த எண்ணத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன், என்கிறார் சிலம்பரசன்.
Towman உருவாக
2021 வரை அதே நிறுவனத்தில் இந்தியா முழுவதிலும் பிரேக் டவுன் தொடர்பான ஆய்வுகளை செய்து கொண்டு இந்தத் துறை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
பெருவெள்ளத்தின் போது முளைவிட்ட ஸ்டார்ட் அப் எண்ணத்திற்கு விதைபோட நேரம் கிடைத்தது கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்கிறார் இவர். கோவிட் காலத்தில் வாகன நடமாட்டம் அதிகம் இல்லை எல்லோருமே வீட்டிலேயே முடங்கிப் போயினர், அந்த சமயத்தில் நாமே ஒரு ரீட்டெய்ல் ப்ராடக்டை கொண்டு வரலாம் என்று எண்ணி பிரேக் டவுன் என்றால் எப்படி towing சர்வீஸ் நினைவுக்கு வருகிறதோ அப்படியே சாலையில் வாகன பழுது என்றால் நாங்கள் நினைவுக்கு வரவேண்டும் என்று என்னுடைய ஸ்டார்ட் அப் பெயரையும் Towman என்று வைத்தேன்.
நானும் என்னுடைய நண்பர் என இருவர் மட்டுமே முதலில் ஸ்டார்ட் அப் வேலையில் இறங்கினோம். இது சர்வீஸ் சார்ந்தது என்பதால் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கு முன்னர் இந்தியா முழுவதிலும் உள்ள வாகன பழுதுபார்க்கும் சுமார் 14ஆயிரம் பேரை towman-க்கான நெட்வொர்க்கின் கீழ் இணைத்து, அதன் பின்னர், 18008890903 அல்லது 044 35009933 என்கிற 24 மணி நேர தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடி சேவை பெறுவது, https://towman.in/ இணைய தளத்தில் ஆண்டு சந்தா முறையில் சேவை என இரு வடிவங்களில் வாடிக்கையாளர்களை முதலில் அணுகினோம்.
தொடக்கத்திலேயே நல்ல வரவேற்பு இருந்த போதும் நகரப் பகுதிகளை மையப்படுத்தி சேவையை ஸ்திரப்படுத்தலாம் என்று எண்ணி முதலில் சென்னையில் இருந்து Towman-இன் வளர்ச்சியானது தொடங்கியது.
2021 முதல் 2022 வரையிலான அந்தப் பயணம் என்பது பரிசோதனை முறையில் சென்று கொண்டிருந்தது. 2022ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக நிறைய முதலீட்டாளர்கள் எங்களுக்கு பின்னால் இருந்த ஆதரவு தர முன்வந்தனர். இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் ஜாம்பவான்கள் என்பதால் அவர்களுக்கு நிகராக சந்தையில் நிற்க வேண்டுமெனில் ஒரு பலமான ஆதரவு தேவை என்று அரசின் TANSEED உடன் சேர்ந்து 6 மாதங்கள் பயணித்தோம்.
தற்போது சென்னையில் மட்டும் சுமார் 2000 வாகன சரிபார்த்தலை செய்கிறோம், கடந்த மாதம் கோவையில் சேவையை தொடங்கி இருக்கிறோம். அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் உள்ள டாப் 10 நகரங்களில் சேவையை வழங்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தன்னுடைய திட்டமிடல்களைப் பட்டியலிடுகிறார் இந்த முதல் தலைமுறை தொழில்முனைவர்.
இமாச்சல் டூ சென்னை வரை 10 மாநிலங்களைக் கடந்து விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப அதனை இங்கே கொண்டு வந்து கொடுத்தோம். நிறுவனம் தொடங்குவதற்கு முன்னரே நாடு முழுவதும் உள்ள Vendorகளை எங்களுடைய நெட்வொர்க்கில் இணைத்திருக்கிறோம், இந்தியாவின் எந்த சாலையில் வாகன பழுது அல்லது வாகனம் அசம்பாவிதங்களில் சிக்கி இருந்தாலோ அங்கேயே அதற்குத் தேவையான சேவையை வழங்க முடியும்.
மக்களுக்கு தெரிந்த பிராண்டாக Towmanஐ மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை,கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் தனிக்கவனம் செலுத்தி எங்களது பிராண்டை பிரபலப்படுத்தும் பணியை செய்து வருகிறேன். இருப்பினும், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்து எங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு உதவி அணுகினாலும் அவர்களுக்கான தீர்வு தரப்படும் என்று உத்திரவாதம் தருகிறார் சிலம்பரசன்.
ஆட்டோமொபைல் ஸ்டார்ட் அப்'பில் உடனடி லாபத்தை பார்க்க முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்த ஒன்றே. அதனால் இதற்கான திட்டத்தை போடும் போதே 10 வருட காலத்தை வளர்ச்சிக்கான இலக்காக வைத்தேன். இது டெக்னாலஜி சார்ந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை என்பதால் என்னுடைய பிராண்ட் மக்கள் மத்தியில் பிரபலமடைய கால அவகாசம் எடுக்கும்.
ஆனால், அது வரை காத்திருக்கத் தயாராக இல்லாத என்னுடைய நண்பர் ஒரு வருடத்திற்குள்ளேயே ஸ்டார்ட் அப்பில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும் நான் சோர்ந்து போய்விடவில்லை, தொடர்ந்து என்னுடைய ஸ்டார்ட் அப்பை மேம்படுத்துவதற்கான பணியைச் செய்தேன், இப்போது என்னுடைய குழுவில் 25 பேர் என்னுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சென்னையைத் தலைமையாகக் கொண்டு மண்டல வாரியாக ஊழியர்களை நியமித்து Towman செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்கிறார் சிலம்பரசன்.
கடந்து வந்த பாதை
தொழில்முனைவர் என்பது என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே புலப்படாத ஒரு விஷயம்.
”நான் படித்தது அரசுப் பள்ளியில், பின்னர் சென்னைக்கு வந்து ரூ.4 ஆயிரம் சம்பளம் வாங்கினால் போதும் என்பது தான் அதிகபட்ச கனவே. அது படிப்படியாக வளர்ந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கினன். அதிக சம்பளத்தை எட்டிய பின்னர் அடுத்தது என்ன என்று சிந்திக்கும் போது தான் எனக்கு வேறு எதோ திறமை இருக்கிறது அதை முயற்சித்து பார்க்கலாம் என்று என் மீதே எனக்கு நம்பிக்கை வந்தது.”
எந்த அளவிற்கு வளர்ச்சியைக் கண்டேனோ அதே அளவிற்கு தொழில் தொடங்கிய 3 ஆண்டுகளில் பல வீழ்ச்சிகளையும் சந்தித்திருக்கிறேன்.
டோயிங் வாகனத்தை நாமே சொந்தமாக வைத்திருக்கலாம் என்று நினைத்து என்னுடைய மொத்த சேமிப்பான ரூ.21 லட்சத்தை போட்டு ஒரு டோ வண்டியை வாங்கினேன். ஆனால், அந்த சமயத்தில் கோவிட் ஊரடங்கால் வாகன நடமாட்டம் இல்லாததால் வாங்கிய வாகனத்திற்கு தவணை செலுத்த முடியாமல் பாதி விலைக்கு விற்றதால் 50 சதவிகித சேமிப்புப் பணம் வீணாகிப் போய் நஷ்டத்தையே கொடுத்தது.
நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னரே கையில் இருந்த மொத்த சேமிப்புப் பணமும் செலவாகிவிட்டது. சொல்லப்போனால் நிறுவனப் பதிவிற்கான ரூ.1 லட்சம் பணத்தைக் கூட கடன் வாங்கித் தான் செய்தேன். ஆனால் இப்போது ஒரு ஆரோக்கியமான நிதிச்சூழலை இந்தத் தொழில்முனைவு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இந்த நிறுவனத்தைத் தொடங்கி நாடு முழுவதும் அறிமுகம் செய்ய ரூ.5 கோடி நிதி தேவைப்பட்டது. பெருநிறுவனத்துடன் போட்டி போட்டு இந்தத் துறையில் ஜெயிக்க இது சிறிய முதலீடு என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பிராண்ட் சந்தையில் பிரபலமடைவதற்குள்ளேயே 5 கோடி நிதி இருந்த இடம் தெரியாமல் கரைந்து போய்விடும் என்று முதலீட்டாளர்கள் தயங்கினர்.
அதனால் என்னுடைய இலக்கை இருசக்கர வாகனங்களை மையப்படுத்தி அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் என்று இலக்கு வைத்து பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினேன். என்னுடைய தொழில் திட்டத்தையும் பட்ஜெட்டுக்குள் வரும்படியானதாக உருவாக்கினேன்.
“கண்டிப்பாக 2 ஆண்டுகள் இதில் இருந்து எந்த மாத சம்பளமோ வருமானமோ கிடைக்காது வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் கட்டணத்தை வைத்து கம்பெனிக்கான வாடகை இதர செலவுகளை சமாளிப்பது என்று முடிவெடுத்து செயல்படத் தொடங்கினேன். இந்தத் திட்டம் ஒத்துவராததாலேயே என்னுடன் இணைந்து பணியாற்றிய நண்பர் பாதியிலேயே விலகிக்கொண்டார்.”
ஆனால், என்னுடைய ஸ்டார்ட் அப் வளர்ச்சி காணத் தான் போகிறது, வாகன பெருக்கம் என்பது அதிகரித்தக் கொண்டே தான் இருக்கப்போகிறது, 2050 வரை எலக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு கூடிக்கொண்டே இருக்கும் என்கிற எதிர்கால நோக்குப் பார்வை எனக்கு இருந்ததால் நான் தயங்கவில்லை.
அன்று வெறும் ரூ.50,000 ஆயிரம் கிடைத்தால் அதை வைத்து நிறுவனத்தை நடத்தத் தொடங்கினேன், இன்று சென்னையில் மட்டும் ரூ.6 லட்சம் வரை கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அதற்கேற்ப ஊழியர்களை மற்றும் இதர தேவைகளை செய்து கொண்டு வெளியில் இருந்து வேறு முதலீடு இல்லாமல் நல்ல முறையில் வளர்ச்சிப்பாதையை நோக்கி என்னால் பயணிக்க முடிகிறது, என்று நம்பிக்கையோடு பேசுகிறார் சிலம்பரசன்.
சவால்கள் மற்றும் வருங்காலம்
தொழில்முனைவு பயணம் என்பது நிச்சயம் சவாலானதே, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இதை சாத்தியப்படுத்தவே முடியாது.
என்னுடைய மனைவி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கிளர்க்காக பணியைத் தொடங்கி இப்போது மேலாளராகப் பணியாற்றுகிறார், நானும் மண்டல மேலாளராக இருப்பதே சரியாக இருக்கும் என்று அவர் விரும்பினார். எனினும் அவருக்கு என் மீது நம்பிக்கை இருந்தது, அவரிடம் நான் முன்வைத்த ஒரே ஒரு விஷயம் 2 ஆண்டுகள் என்னுடைய வருமானத்தை எதிர்பார்க்காமல் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பது தான். அதே போல, அவரே அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொண்டதோடு எனக்கான பணத்தேவைகளுக்கும் அவர் நிதி உதவி செய்தார்.
அவருடைய சேமிப்புப் பணத்தை கூட எனக்காக விட்டுக்கொடுத்தார், பெற்றோரைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செய்கிறேன் என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஏனெனில், கடலூர் டூ மும்பையில் வேலை என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய விஷயம். எனினும் என்னுடைய மனைவி எனக்கு பக்கபலமாக இருந்ததால் நான் எந்த நெருக்கடியும் இன்றி பணியாற்றியதால் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன், நான் சரியான முடிவை எடுத்திருக்கிறேன் என்று என்னுடைய மனைவியும் இப்போது உணரத் தொடங்கி இருக்கிறார்.
இதுவரை லாபம் என்பது கிடைக்கவில்லை, வருகின்ற வருமானத்தை வைத்தே அடுத்தடுத்த பணிகளை செய்கிறோம். குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டுமே இலக்காக இருந்தால் இந்த ஆண்டில் இருந்தே லாபத்தை பெற முடியும். ஆனால், என்னுடைய நோக்கமானது இந்தியா முழுவதிலும் towman என்று இலக்கு வைத்திருப்பதால் 2025க்குப் பிறகே லாபம் என்கிற பேச்சே எடுபடும் என்பது என்னுடைய அனுமானம்.
டயருக்கு பஞ்சர் போடுவது, பேட்டரி தீர்ந்து போனால் மாற்று ஏற்பாடு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அருகில் இருக்கும் நிலையத்தில் இருந்து சார்ஜிங் சப்போர்ட், சாவி உடைந்து போனால் மாற்றுச்சாவி ஏற்பாடு, சிறு சிறு வாகனப் பழுதுகளுக்கு இந்த இடத்திலேயே சரிபார்த்துத் தரப்படும். ஆனால் முழு வாகன சரிபார்ப்பும் அதில் இருக்காது, பழுதாகி நிற்கும் வாகனத்தை அங்கிருந்து இயக்குவதற்கான உடனடி தேவையை மட்டுமே செய்து கொடுப்போம். இது மட்டுமின்றி விபத்துகளில் சிக்கிய வாகனங்களை தூக்கிச் செல்வதையும் செய்து வருகிறோம்.
100 தொழில்முனைவர்களில் 4 பேர் மட்டுமே ஆட்டோமொபைல் சார்ந்தவர்களாக இருப்பார்கள். பல ஆண்டுகளாக மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கும் பிராண்டுகளின் மத்தியில் வாகன பாகங்கள் தயாரிப்பு என்று செல்வதை விட வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சேவையை வழங்கும் நிறுவனமாகக் கொண்டு செல்லலாம் என்கிற முடிவில் தான் Towman தொடங்கினேன்.
தமிழக அரசின் சிறந்த ஸ்டார்ட் அப்பாக தேர்வு செய்யப்பட்டு TANSIMன் ரூ.1 கோடி நிதியுதவி கிடைத்திருப்பது பொருளாதார ரீதியில் வளர்வதற்கு வித்திட்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மாநில அரசே அங்கீகரிக்கும் ஒரு ஸ்டார்ட் அப் என்கிற நற்பெயரையும் என்னுடைய பிராண்ட் பெற்றிருப்பது மென்மேலும் வளர்வதற்கான ஊக்கம்.
இந்தியாவில் எங்கே இருந்தாலும் வாடிக்கையாளருக்கு அரை மணி நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சேவையை என்னால் கொடுக்க முடிகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் இணைந்து அந்த ஷோரூம்கள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் Towman சேவையை பெறலாம்.
B2Bக்கென ஒரு தளம் வைத்திருக்கிறோம், டீலரோ, மெக்கானிக்கோ, வொர்க்ஷாப்போ யாரெல்லாம் நம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்களோ அவர்கள் நம்முடன் சேர்ந்து ஆண்டுச்சந்தா விற்பனையை செய்து வாடிக்கையாளருக்கான சேவையை அவர்களுக்கான மார்ஜின் கட்டணத்தோடு சேர்த்து வழங்கலாம்.
6 மாதத்தில் Towman-ஐ மக்கள் எளிதில் பயன்படுத்தும் செயலியாக அறிமுகம் செய்யப்போகிறோம். இதற்குப் பின்னர் Towman சேவையை 10 நிமிடத்திலேயே பெறலாம் என்பது கூடுதல் சிறப்பு என்று வளர்ச்சித் திட்டங்களைப் பகிர்கிறார் சிலம்பரசன்.
டிஜிட்டல் மார்கெட்டிங், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிராண்டு பிரபலப்படுத்துதலை செய்து வருகிறோம்.
ஒரு டூவீலரை குறைந்தபட்ச கட்டணமான ரூ.160லேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கிறோம். மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த கட்டணத்தில் கொடுக்கும் சேவைகளை எங்களுடைய பைக் ரைடர்ஸ் குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவும் மக்களை எளிதில் சென்றடைவதற்கான ஒரு யுத்தி என்று கூறும் சிலம்பரசன், Towman பொறுத்த வரையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு பிராண்டாக்கி வாடிக்கையாளர்களை அதிகம் பெறுவதே, என்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.
‘12 வயதில் வீடுவீடாக ஸ்னாக்ஸ் விற்றேன்’ - உற்பத்தித் தொழிலில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் தமிழ் இனியன்!