வாழ்க்கையின் அர்த்தத்தை ஜார்கண்ட் சிறையில் அதிகம் கற்றுக் கொண்ட சிஇஓ!
இது பாலிவுட் படத்தில் வரும் ஒரு காட்சி. சூப்பர் ஸ்மார்ட் கார்ப்பரேட் நபர். கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ முடித்தவர், அமெரிக்கா சென்று திரும்பியவர். கை நிறைய சம்பளம், மிகப்பெரிய வீடு, அழகான மனைவி, அழகான இரண்டு குழந்தைகள், இரண்டு நாய்கள், இரண்டு கார்கள். அற்புதமான கனவு போன்ற வாழ்க்கை. அவர் மோசடிக் குற்றம்சாற்றப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 34, 406 மற்றும் 420ன் கீழ் கைது செய்யப்படும் வரையில், இதெல்லாம் நிஜமாகவே இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் சேத்தன் மகாஜனின் கதை - இடைவேளைக்கு முந்தைய கதை - இதுதான்..
சேத்தன் தற்போது எச்.சி.எல் லேர்னிங்(HCL Leaning) பிரிவின் சிஇஓ.
2012ஐ திரும்பிப் பார்த்தால், அங்குதான் சிறைச்சாலை கதை துவங்குகிறது. அந்த நேரத்தில் அவருக்கு, எவரான் (Everonn) நிறுவனத்தில் மண்டல மேலாளராக வேலை கிடைத்திருந்தது. மத்திய கிழக்கில் உள்ள ஜெம்ஸ் குரூப் எனும் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் அது. எவரான், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வந்தது. அதன் பெயர் “டாப்பர்ஸ்” (Toppers). ஜார்கண்ட்டில் உள்ள பொக்காரோவில் டாப்பர்ஸ் மிகவும் பிரபலம். சேத்தன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்த சில ஆசிரியர்கள் (faculty) திடீரென போட்டி நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால், அங்கு படித்த மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்தனர். அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கட்டிய கட்டணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டனர். அந்த நேரத்தில் சேத்தன்தான் அங்கு உயர்ந்த பதவியில் இருந்தார். எனினும் பணம் திருப்பித் தர வேண்டுமென்றால் அதற்கு அவர் மேலிடத்தில் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான அதிகாரம் அவரிடத்தில் இல்லை. பிரச்சனை கைமீறிப் போய்விட்டது. போலீஸ் வந்து எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல அந்த மையத்தை மூட வேண்டும் என்றார்கள். எல்லாம் முடிந்தது. சேத்தன் கைது செய்யப்பட்டார். “மண்டல மேலாளர் சேத்தன் மகாஜன், குர்கானைச் சேர்ந்தவர், தப்பி ஓடிவிடுவார் என்ற சந்தேகத்தில், அவரை மாணவர்களும் பெற்றோர்களும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 200 மாணவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மகாஜன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.” அடுத்த நாள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இதுதான்.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த செய்தி வந்த தினம் டிசம்பர் 24. சேத்தன், பொக்காரோவில் உள்ள பொக்காரோ சாஸ் மண்டல் காரவாஸ் சிறைச்சாலைக்கு அவருடைய வழக்கமான ரால்ப்ஃ லாரென் ஜாக்கெட், ஆல்டோ ஷூவுடன்தான் சென்றார். அடுத்த நாளே சிறையைவிட்டு வெளியே வந்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அது விடுமுறைக் காலம். அவரது வழக்கு விசாரணைக்கு வருவதற்கே சில வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. தனது மனநிலையை சீராக வைத்துக் கொள்வதற்காக அவர், சிறைச்சாலையில் தனது அனுபவங்களை நாள்தோறும் எழுத ஆரம்பித்தார். அதுதான் சமீபத்தில் பெங்குவீன் பதிப்பகத்தில் "தி பேட் பாய்ஸ் ஆஃப் போகாரோ ஜெயில்" (The Bad Boys of Bokaro Jail)என்ற புத்தகமாக வெளிவந்தது.
கடினமான, ஒரு மாத சிறைவாசம் அவருக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகமாக இருந்தது. மோசடி, கொலை, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்தவர் என பல்வேறுவிதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அவரது சக சிறைக் கைதிகள். அவர்களையும் சிறைச்சாலை நடைமுறைகளையும் எதிர்கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அதே சமயத்தில் வாழ்க்கைப் பாடங்களை அது கற்றுக் கொடுத்தது. எது முக்கியம் என்பது இப்போது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. சேத்தன் சிறைக்கு வந்ததில் இருந்தே அவரை நேருக்கு நேர் பார்த்துப் பேச சிலர் தயங்கினர். ஒரு மாதம் சேத்தன் சிறையில் இருக்கிறார் என்றால், அவர் ஏதோ செய்திருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்.
இங்கே யுவர் ஸ்டோரிக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கற்றுக் கொண்ட கடினமான பாடங்களை பகிர்ந்து கொள்கிறார்.
உங்களுடைய சிறை அனுபவங்கள் காரணமாக, ஒரு மேலாளராக என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
இந்த அனுபவம் எனக்கு அந்நியமானது. ஏனெனில் இரண்டு அனுபவங்களுமே நேர் எதிரானது. இரு வேறு வித்தியாசமான பரிமாணங்களைக் கொண்டது. ஒரு வகையில் பார்க்கும்போது, ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எடைபோட நான் விரும்புவதில்லை. நான் எப்போதுமே ஒருவரைப் பற்றிய முழுமையான விபரங்களைப் பரிசீலித்த பிறகே அவரைப் பற்றி முடிவுக்கு வர விரும்புகிறேன். ஒரே ஒரு அம்சத்தை வைத்துக் கொண்டு ஒருவரை முழுமையாக இப்படித்தான் என்று முடிவு செய்வது சரியாக இருக்காது.
ஆனால் மற்றொரு தளத்தில், எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று கடினமானதாக ஆகிவிட்டது. சில நேரங்களில் நான் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் தகுதியான ஒரு நபருக்கு பதவி உயர்வு அளிக்க முடியாமல் போகலாம். அல்லது இன்னும் மோசமாக சொல்வதானால், யாரையாவது வேலையை விட்டு அனுப்ப வேண்டி இருக்கலாம், அம்மாதிரியான நேரங்கள் எனக்கு முன்பெல்லாம் கடினமாக இருக்கும். ஆனால் இப்போது எனக்கு முரட்டுத்தனமான தோல் வந்து விட்டது. அது சிரமம்தான், எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கை எப்போதும் நியாயமானதாக இருப்பதில்லை – குறிப்பிட்ட ஒரு நாளில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதைப் பொருத்தது அது. டைர் ஸ்ட்ரைட்ஸ் (Dire Straits) சொன்னதைப் போல:
“சில நேரங்களில் நீங்கள் காக்கும் கண்ணாடியாக இருக்கிறீர்கள்
சில நேரங்களில் நீங்கள் துளைக்கும் வண்டாக இருக்கிறீர்கள்”
உங்களது வேலையை இழப்பது என்பது இந்த உலகில் மிக மோசமான விஷயமல்ல. ஆனால் அதைவிட மிக மோசமானது எல்லாம் இருக்கிறது.
கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் உங்களால் கற்றுக் கொள்ள முடியாத ஆனால் சிறையில் கற்றுக் கொண்ட மூன்று பாடங்களைச் சொல்லுங்கள்?
-யாராவது ஒருவர் உங்களது லேப்டாப்பையும் செல்போனையும் பறித்துக் கொண்டு, உங்களை சிறையில் அடைத்தால், அதன் விளைவு உண்மையில் ஒரு நல்ல விஷயமாகத்தான் இருக்கும்: ஒரு புத்தகம் வெளிவரும்.
- இந்திய சட்ட நடைமுறைகளின் ஒவ்வொரு இன்ச்சிலும் உள்ள ஊழலை எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளைக் கண்டடையலாம்.
- இதுபோன்ற விஷயத்தில் நிறுவனத்தின் போர்ட் மெம்பராக இல்லாத ஒரு நபருக்கு சட்டப்படி எந்த பொறுப்பும் இல்லை என்பதை ஒரு ஜார்கண்ட் காவல்துறை அதிகாரிக்கு எப்படி புரிய வைப்பது என்பதை அறியலாம். ஒரு அப்பாவியை கைது செய்வதற்கு ஊடகங்கள் ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் ஒரு போதுமான காரணமல்ல என்பதையும் எப்படி தெரியப்படுத்துவது என தெரிந்துகொள்ளலாம்.
சிறை அனுபவம் உங்களது அன்றாட வேலைகளை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது?
ஊரகப் பகுதி அல்லது விலை குறைந்த பொருட்களை எதிர்பார்க்கும் மக்கள் எப்படிச் சிந்திப்பார்கள், எப்படி முடிவெடுப்பார்கள் என்பதை நான் அறிய முடிந்தது. அவர்களுக்கான பொருட்களை தயாரிப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கும்போது எனக்கு அது உதவியாக இருக்கிறது.
-நான் நன்றாக எழுத ஆரம்பித்தேன்.
சிறைக் கைதியாக இருந்தவர் என்பதால் உங்களது வேலைவாய்ப்பில் அது ஏற்படுத்திய பாதிப்பு குறித்து கூறுங்கள்:
உண்மையில், பணி அமர்த்தலில் எச்.சி.எல் ஒரு அற்புதமான நிறுவனம். என்னை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள அவர்கள் தயாராகவே இருந்தனர். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு நிபந்தனை – அது நியாயமான நிபந்தனைதான் – விதித்தனர். “எனக்கு எதிரான சட்ட விவகாரம் எல்லாம் முடிந்திருக்க வேண்டும்”. பொதுவாக ஒரு விசாரணைக் கைதி நிலையில் இருப்பவர்களை பணி அமர்த்தி கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். 2013 மார்ச்சில் வழக்கு முழுவதும் முடிவுக்கு வந்த பிறகு, உடனடியாக எவரான் நிறுவனத்தை விட்டுவிட்டு எச்.சி.எல்.லில் சேர்ந்து விட்டேன்.
எனினும், நான் சிறைக்குப் போய் வந்ததில் இருந்து, ஒரு சிலர் என்னை வேறு விதமாகத்தான் பார்த்தார்கள். சிலர் என்னை நேருக்கு நேர் பார்த்து பேசுவதை தவிர்த்தனர். நான் சிறையில் இருந்தவன் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு விதமான அசௌகரியத்தைக் கொடுத்தது. உண்மையில் என்ன நடந்தது என நான் முழுவதுமாக புத்தகத்தில் எழுதிய பிறகும் கூட, ஒருமாதம் சிறையில் இருந்திருக்கிறான், நிச்சயம் இவன் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்.
உலகம் குறித்த உங்களது பார்வையிலும், பிரச்சனைகளை அணுகுவதிலும் சிறை அனுபவம் உங்களை எந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது?
வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட இப்போதெல்லாம் கொண்டாடுகிறேன். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும், அதெல்லாம் மிகப்பெரிய விஷயமாகி விட்டது – ஒரு ஹோடலில் எனக்குப் பிடித்த ஒரு உணவை ஆர்டர் பண்ணி சாப்பிடுவது கூட இப்போதெல்லாம் ஆடம்பரமாகத் தெரிகிறது, குழந்தைகள் என்னைக் கட்டிக் கொள்வது, விலை மதிப்பில்லாததாகத் தோன்றுகிறது. ஏற்கனவே மதிப்பிற்குரிய விஷயமாக நான் கருதிய பல விஷயங்கள் இப்போது மேலும் மதிப்பிற்குரிய விஷயமாக மாறிவிட்டன. அதில் முதல் இடத்தில் இருப்பது என் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது தான்.
இப்போதெல்லாம் ஒரு சில விஷயங்களை நான் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறேன். ஒரு எதிர்பாராத அனுபவத்தை நான் எதிர்கொள்ள வேண்டுமெனில், அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், ஏனெனில் என்னை அது நிகழ்காலத்தில் முழுமையாக வாழச் செய்கிறது. பத்து ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவதில் அர்த்தமில்லை. அந்த காலம் வராமலே கூட போய்விடலாம். இப்போது என்னவோ அதை அப்படியே முழுமையாக வாழ விரும்புகிறேன். ஏனெனில் நிகழ்காலம் என்பதுதான் இப்போது எனக்கு முக்கியம். இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அது மிகவும் முக்கியம்.
உங்கள் புத்தகத்தில் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் தெரியும், அது ஒரு நாட்குறிப்பு போலத்தான். அது ஒரு புத்தகத்தைப் போல இல்லை. அதில் கதைக் கரு எதுவும் இல்லை. கிளைமாக்ஸ் கிடையாது. ஒவ்வொரு நாளும் என்ன நடந்ததோ அது மட்டும்தான் அது. எனவே அதில் வாசகர்களுக்கென்று குறிப்பாக சொல்வதற்கு என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அந்தப் புத்தகம் ஒன்றும் அல்கெமிஸ்ட் (நாவல்) அல்ல.
சொல்லப் போனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் முக்கியமானதாக தோன்றியிருக்கிறது. அந்தப் புத்தகம் வெளியானதே எனது மிகப் பெரிய வெற்றி என்று சிலர் நினைக்கின்றனர். “மோசமான விஷயத்தில் இருந்து ஒரு நல்ல விஷயத்தை உருவாக்கியது” தான் அந்த புத்தகம். நான் சிறையில் தினமும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டது பெரிய விஷயம் என்று சிலர் நினைக்கின்றனர்.
என்னைப் பொருத்தவரையில், மனிதாபிமானத்தின் மீதான நம்பிக்கையை மறுஉறுதி செய்து கொண்டதுதான் நான் அங்கு கற்றுக்கொண்ட உண்மையான விஷயம். சிறையில் உள்ளவர்கள் அனைவருமே மோசமான மிருகங்கள் இல்லை. அவர்களும் உணர்வுகள், விருப்பு வெறுப்புகள், திறமைகள் எல்லாம் கொண்ட மனிதர்கள்தான் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
நான் உணர்ந்துகொண்ட மற்றொரு விஷயம், நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் சிறையில்தான் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள்தான் அந்த சிறை. வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் மாற்றி சிந்திக்க தொடங்கினால், நாம் அனைவருமே அந்த சிறையை விட்டு வெளியேற முடியும்.
நீங்கள் தகர்த்தெறிய விரும்பும் உங்களை சிறைப்படுத்தி வைத்திருக்கும் விஷயங்கள் என்ன ? கீழே கமெண்ட்ஸ் பகுதியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.