5 மாதக் குழந்தைக்காக 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி தள்ளுபடி: பேபி டீரா-வின் நெகிழ்ச்சி கதை!

- +0
- +0
பிறந்து 5 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மருந்திற்கான 6 கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தம்பதியின் 5 மாதக் குழந்தை டீரா காமத். குழந்தை டீரா பிறந்தது முதலே அரிய வகை மரபியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அரிய வகை மரபியல் நோய் என்றாலும் இதற்கான சிகிச்சை செய்தால் அதனை சரி செய்யலாம். அதன்படி, டீராவுக்கு மரபணு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் மரபணு மாற்ற அறுவை சிகிச்சை செய்ய Zolgensma என்ற மருந்து அவசியம் தேவைப்படும்.

இந்த ஜோல்கென்ஸ்மா என்ற மருந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யமுடியும். மேலும் இந்த மருந்தின் விலை 16 கோடி ரூபாய். மருந்தின் விலை மலைக்க வைத்தாலும், குழந்தை டீராவை காப்பாற்ற அவர்களின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். அந்தவகையில், அரும்பாடுபட்டு தங்களால் முடிந்த தொகையை திரட்டினர். மேலும் சமூக வலைத்தளங்கள் வழியாக குழந்தை டீராவின் நிலையை விளக்கி மக்களிடம் இருந்து மருந்திற்கான பணத்தை வசூல் செய்தனர்.
ஆனால் அதிலும் சிக்கல் இருந்தது. மருந்தின் விலை ரூ.16 கோடி என்பதைத் தாண்டி அதை இந்தியாவில் இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டவேண்டியிருந்தத்து. இதனால் செய்வதறியாது குழந்தை டீராவின் பெற்றோர் மனமுடைந்து போயினர். ஆனால், குழந்தையைக் காப்பாற்றியே ஆக வேண்டிய நிலையில் இருந்த பெற்றோர்கள் கடைசியாக அரசை அணுகுவது என்ற முடிவை எடுத்தனர்.

ஜிஎஸ்டி வரியில் இருந்து மருந்திற்கு தள்ளுபடி கேட்டு பிரதமர் மோடிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மூலமாக டீராவின் பெற்றோர் கடிதம் எழுதினர். கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மருந்துக்கான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தது.
இதனால் குழந்தை உயிர் பிழைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து பச்சிளம் குழந்தையின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் செயல் நெட்டிசன்களையும் கவர அவர்கள் மத்திய அரசை வாழ்த்தி வருகின்றனர்.
தகவல் உதவி: zee news | தொகுப்பு: மலையரசு
- ஜிஎஸ்டி
- பிறந்த குழந்தை
- New born baby
- குழந்தைகள்
- மத்திய அரசு
- GST
- Narendra Modi
- ஜிஎஸ்டி தள்ளுபடி
- GST Discount
- Baby Teera
- +0
- +0