Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி!

உங்கள் லட்சியத்தை நோக்கி நீங்கள் உறுதியாகவும் வலுவாகவும் இருந்தால், வெற்றி உங்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு வாழும் உதாரணம் ரஜினி பெக்டர்.

கொல்லைப்புற பேக்கிரி டு ரூ.7,000 கோடி சாம்ராஜ்யம் - தொழில்முனைவர் ரஜினி பேக்டரின் அசுர வளர்ச்சி!

Monday September 23, 2024 , 3 min Read

உங்கள் லட்சியத்தை நோக்கி நீங்கள் உறுதியாகவும் வலுவாகவும் இருந்தால், வெற்றி உங்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு வாழும் உதாரணம் ரஜினி பெக்டர்.

மிஸஸ் பெக்டர்ஸ் ஃபுட் ஸ்பெஷலிட்டிஸ் மற்றும் க்ரீமிகா குரூப் ஆஃப் கம்பெனிகளை நிறுவிய தொழிலதிபரான ரஜினி, அந்நிறுவனத்தை வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து தொடங்கினார் என்றால் நம்ப முடியுமா? சமையல் அறையில் இருந்து தொடங்கி இன்று ரூ.7,000 கோடி வருவாய் ஈட்டும் வணிகமாக வளர்த்துள்ள ரஜினி பேக்டருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவரது வணிக சாதனைகளுக்கு அப்பால், திருமதி. பெக்டரின் பயணம் தனிமனிதியின் வெற்றி மற்றும் நெகிழ்ச்சியின் கதையாகும்.

rajni bector

இந்தியா- பாக் பிரிவினை கலவரம், சிறுவயது திருமணம்...

1940ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த ரஜினி பெக்டர் லாகூரில் வளர்ந்தார். அவரது தந்தை ஒரு கணக்காளர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, அவரது குடும்பம் இந்தியாவிற்கு குடியேற முடிவெடுத்தது. ஆனால், அது அத்தனை எளிதாக நடக்கவில்லை.

"பதான்கோட்டில் ஒரு ரயில் வரும், அதில் சென்றுவிடுங்கள் என்றனர். ஆனால், ஏழு நாட்களாக காத்திருந்தும் எந்த ரயிலும் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரமாக மரத்தடியில் காத்திருந்தோம். அப்போது, ​​ஒரு சரக்கு ரயில் வந்தது. அந்த பயணம் நெடுக எண்ணற்ற இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது," என்று 70 ஆண்டுகளுக்கு பிறகும் வாழ்க்கையில் கடந்துவந்த கடினமான நாட்களை மறவாமல் நினைவுக்கூர்ந்தார்.

பின்னர், அவருடைய குடும்பம் டெல்லிக்கு குடியேறியது. 1957ம் ஆண்டில் ரஜினி, கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் 17 வயதிலே அவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவரது கணவர் லூதியானாவில் வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியுடன் ஒப்பிடும்போது சிறிய நகரமான லுாதியானா மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளது. அதேபோல, அவரது மாமியார், அவரது காலத்துடன் மிகவும் ஒத்திசைந்திருந்தாலும், பழமைவாதமாக இருந்துள்ளார்.

சிறுவயதிலே திருமணம், நேரெதிரான கருத்துக்கொண்ட உற்றார், உறவினர்கள், பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து தள்ளியிருப்பது என திருமணத்தின் ஆரம்பக்கட்டம் அவருக்கு கடினமாக இருந்துள்ளது. அப்போதைய சூழலில் அவருக்கு இருந்த ஒரே சந்தோஷம் சமையல்.

லுாதியானாவில் சமையல் தொடர்பான அனைத்து கருத்தரங்கிலும் கலந்து கொள்வார். பேக்கிங் பயிற்சியை மேற்கொண்டார்.

60, 70களில் உணவு வழங்கும் கேட்டரிங் ஆட்கள் பெரியளவில் இல்லை என்பதால், அனைத்து விதமான உணவுகளையும் வீட்டிலே சமைக்கத் தொடங்கினார். அப்படி தான், குக்கீகள், பிரட்கள், ஐஸ்கீரிம்களை வீட்டில் தயார் செய்ய தொடங்கினார். அதுவரை நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கு மட்டுமே உணவுகளை சமைத்து கொடுத்து வந்தநிலையில், முதன்முறையாக உள்ளூர் எம்.எல்.ஏ., அவரது பேத்தியின் திருமணத்தில் உணவு வழங்கும் பொறுப்பை ரஜினியிடம் ஒப்படைத்தார்.

RAJNI BECTOR
"நான் அதுவரை செய்யாத அளவில், 2,000 பேருக்கு உணவு சமைக்க வேண்டியிருந்ததால் கொஞ்சம் திகைத்துப் போனேன். ஆனால் இரண்டு உதவியாளர்களின் உதவியுடன், அதை சமாளித்து சமைத்து முடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது," என்று பகிர்ந்தார்.

அதைத் தொடர்ந்து, வீட்டிலே சில மாணவர்களுக்கு சமையல் வகுப்புகளை நடத்தத் தொடங்கினார். ஆனால் அது அவருடைய மாமியாரை கோபப்படுத்தியது.

"குடும்பம் நல்ல சூழலில் இருக்கும்போது, எதற்காக நீ வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், ரஜினிக்கிருந்த சமையல் மீதான காதலை வணிகமாக்குவதற்கு அவருடைய கணவர் உறுதுணையாக இருந்துள்ளார். பின்னர், 1978ம் ஆண்டு அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் ரூ.20,000 முதலீட்டில் ஐஸ்கீரிம் தயாரிப்பு கூடத்தைத் தொடங்கினர். அதற்கு "க்ரீமிகா" (CREMICA) என்று பெயரிட்டனர்.

லுாதியானாவில் நடந்த விழாக்களில் உணவு ஸ்டாலை போட்டு விற்பனை செய்தார். அப்படி ஒரு முறை ஏற்பாடு செய்திருந்த விழாவில், சந்தையில் பிரபலமாக இருந்த குவாலிட்டி ஐஸ்கிரீம் ஸ்டாலுக்கு அருகில் ரஜினி அவரது ஸ்டாலை போட்டார். ஆச்சரியப்படும் விதமாக, குவாலிட்டியை விட மக்கள் க்ரீமிகாவின் ஐஸ்கிரீமை விரும்பி உண்டுள்ளனர். மக்களின் அங்கீகாரம் அசுர வளர்ச்சியை அளித்தது. ஐஸ்கிரீமை தொடர்ந்து பிஸ்கட், பிரட், குக்கீகள் தயாரிப்பிலும் இறங்கியது. அவருடைய மகன்களும் தாயின் தொழிலை கையிலெடுத்து அடுத்தக்கட்டத்திற்கான நகர்வில் பங்களித்தனர்.

1995ம் ஆண்டு மெக்டோனால்டுஸ் நிறுவனம் இந்திய சந்தைக்குள் வருகை தந்த போது, அவர்களுக்கு தேவையான பன் மற்றும் பிரட்களுக்கான சப்ளையர்களை இந்தியா முழுவதும் தேடி இறுதியில் க்ரீமிகாவை தேர்ந்தெடுத்தனர். அதன் முதல் பன் ஆலை லூதியானாவில் அமைக்கப்பட்டது. இப்போது டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் ஆலைகள் உள்ளன.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, க்ரீமிகா மெக்டொனால்டுக்கு தொடர்ந்து சப்ளை செய்கிறது. அதே போல், சிகாகோவை தளமாகக் கொண்ட குவாக்கர் ஓட்ஸு நிறுவனத்திற்கு சாஸ்களை வழங்கத் தொடங்கியது.

"மெக்டொனால்டு நிறுவனம் அவர்களுக்கான பன் சப்ளையர்களை இந்தியா முழுவதும் தேடி இறுதியாக எங்களைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் மெக்டொனால்டு போன்ற பெரிய பிராண்டுடன் வணிகம் மேற்கொள்வது சவால்கள் நிறைந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக, நாங்கள் தொடர்ந்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். அதனால், பெரிய இழப்புகளை எதிர்கொண்டோம். வெளிப்படையாக கூறினால் நாங்கள் சோர்வடைந்தோம். ஆனால் தொடர்ந்து முயற்சித்தோம். சரியான தரத்திலான கோதுமையை கண்டறிய நாடு முழுவதும் தேடி அலைந்து ஆய்வு செய்தோம். இறுதியாக, மத்திய பிரதேசத்தில் இருந்து கோதுமையை பெற்றோம்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இன்று ரஜினியின் அயராத உழைப்பாலும், தளராத முயற்சியாலும் க்ரீமிகா மிகப்பெரிய பிராண்ட் ஆக மாறி இந்தியாவின் இரண்டாவது பெரிய பிஸ்கட் ஏற்றுமதியாளராக உள்ளது. அதன் தயாரிப்புகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.

மேலும், வட இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான திருமணங்களுக்கு மேற்கத்திய இனிப்புகளை வழங்கும் ஒரே சப்ளையர் க்ரீமிகா ஆனது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.7,000 கோடியை எட்டி உள்ளது. அதுமட்டுமின்றி, 2021ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த பத்மஸ்ரீ விருது ரஜினிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தொழில்முனைவோராக வேண்டும் என்று கனவு காணும் மில்லியன் கணக்கான இந்தியப் பெண்களுக்கு ரஜினியின் தொழிற் பயணம் ஒரு உத்வேகம்.

தகவல் உதவி: outlookbusiness