‘சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் உள்ள வித்தியாசம்' - கொத்தடிமை மாதேஷ் மீண்ட கதை!
குவாரி அடிமையில் சுதந்திர காற்றை சுவாசிக்க நடந்த போராட்டம்!
இந்த வார சர்வைவல் தொடரில் கல் குவாரியில் அடிமையாக வேலை பார்த்து மீண்ட மாதேஷ் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்!
தான் மீண்ட கதையை கூறும் மாதேஷ், ”தெற்கு பெங்களூரில் உள்ள ஜிகானியில் உள்ள ஒரு கல் குவாரியில் பிணை தொழிலாளர்களாக இருந்த எனது பெற்றோருடன் வேலை செய்யத் தொடங்கியபோது எனக்கு ஐந்து வயதுதான். எனது சகோதரர்கள், என் சகோதரி, எங்கள் பெற்றோர் மற்றும் என் மாமாவின் குடும்பத்தினர் இருவரும் குவாரியில் 18 நீண்ட ஆண்டுகள் பணியாற்றினர். எங்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம். குவாரி உரிமையாளரின் தந்தையிடமிருந்து எனது பெற்றோர் ரூ.5,000 கடன் வாங்கிய போது எங்களின் சோதனை காலகட்டம் துவங்கியது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக குவாரியில் வேலை செய்யத் தொடங்கும்படி அவர்கள் எங்களைக் கட்டாயப்படுத்தினர். பல ஆண்டுகளாக, உரிமையாளரும் அவரது மகனும் எங்களை வெளியேற விடாமல் தடுத்தனர். போதாக்குறைக்கு அத்தனை ஆண்டுகள் வேலை பார்த்த பின்பும், நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியாக ரூ.50,000 தர வேண்டும் என்றும் அதிர்ச்சி அளித்தனர்.

நான் ஒரு குழந்தையாக வேலை செய்யத் தொடங்கியபோது, பாறைகளை சிறிய துண்டுகளாக உடைப்பதே எனது முக்கிய வேலை. என் பெற்றோர் பிரதான குவாரியில் பெரிய அளவில் பாறைகளை உடைத்து வேலை செய்தனர். பாறைகளை உடைக்கும் வேலையைத் தாண்டி, அதனை வண்டியில் ஏற்றும் வேலையையும் செய்யச் சொன்னார்கள். நாங்கள் வெட்டிய பாறைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.100 மட்டுமே எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஊதியத்திலும் நாங்கள் அடிக்கடி ஏமாற்றப்பட்டோம். எங்கள் வீட்டிற்கு அடுத்த உரிமையாளரின் கடையில் இருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயப்படுத்தினர். எங்களை ஒருபோதும் குடும்பமாக வெளியேச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆண்களை மட்டுமே வெளியே செல்ல அனுமதித்தனர். பெரும்பாலான குழந்தைகள் பகலில் குவாரியிலும், இரவில் உரிமையாளரின் வீட்டிலும் வேலை செய்தனர். அவர்கள் வீட்டில் நாங்கள் வீட்டை சுத்தம் செய்யவும், துணிகளைக் கழுவவும் கட்டாயப்படுத்தப்பட்டோம்.
நானும் எனது குடும்பமும் உரிமையாளரின் வீட்டைப் போன்ற ஒரு வளாகத்தில் ஒரு கொட்டகையில் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்ந்தோம், எனவே எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு அழைக்கப்படுவோம். குழந்தைகளாகிய எங்களுக்கு இந்த வேலைக்கு ஊதியம் கூட வழங்கப்படவில்லை. எனக்கு வயது வயது அதிகரிக்க, வாரத்தில் ஏழு நாட்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை குவாரியில் வேலை செய்தேன்.
எனக்கு 10 வயதாக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் கணக்குகளை தீர்த்துக் கொள்ளும்படி எங்கள் அம்மா குவாரி உரிமையாளரிடம் சொன்னார். மேலும், வீடு திரும்ப ஏதுவாக முன்கூட்டியே வாங்கிய கடனுக்கு வட்டியாக திருப்பிச் செலுத்த கிராமத்தில் உள்ள எனது தாத்தாவிடம் இருந்து ரூ.10,000 ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் குவாரி உரிமையாளர் அதை ஏற்கவில்லை. எங்களின் வட்டி ரூ.50,000 வரை இருக்கிறது என்று கூறி வெளியே அனுப்ப மறுத்துவிட்டார்கள்.

இந்த அநீதியை என் அம்மா எதிர்த்தபோது, உரிமையாளர் மற்ற தொழிலாளர்கள் அனைவரின் முன்னிலையில், என் அம்மாவை தாக்கினார். அன்று என் அம்மா மீது நடத்தபட்ட மிருகத்தனமான தாக்குதலை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த தாக்குதலில் இருந்து குணமடைய பல நாட்கள் ஆனது. நாங்கள் வெளியேற வேண்டும் எப்போதும் சொன்னாலும், எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ’உரிமையாளரை எதிர்த்தால் கர்நாடகாவில் நாங்கள் உயிர் வாழ முடியாது,' என்று ஒரு முறை என்னிடம் சொல்லி மிரட்டினார்கள்.
இது 2017 வரை தொடர்ந்தது. ஆனால், கிருஷ்ணகிரியில் இருந்து எங்கள் உறவினர்கள் சிலர் எங்களை சந்திக்க ஜிகானிக்கு வந்தபோது நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கண்டார்கள், கிருஷ்ணகிரிக்குத் திரும்புவதற்கு எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். பின்னர், அவர்கள் தான் ஒரு சமூக சேவையாளரிடம் எங்கள் அவலநிலை பற்றி பேசினர், பின்னர் அவர் போலீஸைத் தொடர்பு கொண்டு மீட்க உதவினார்.
15 டிசம்பர் 2017. அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்! எனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நாளாக அதை நான் நினைக்கிறேன். நானும் எனது குடும்பமும் வேலையில் மும்முரமாக இருந்தபோது காலையில் காவல்துறையும் பிற அரசாங்க அதிகாரிகளும் குவாரிக்கு வந்தார்கள். அவர்களை பார்த்து பயந்ததோடு, குழப்பமடைந்தோம். குவாரியில் எங்கள் வேலை மற்றும் வாழ்க்கை குறித்து அவர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள்.
பின்னர், போலீஸ் வாகனங்களில் உட்காரும்படி எங்களைக் கேட்கப்பட்டதும், எங்கள் பொருட்களும் ஏற்றப்பட்டபோதுதான், நாங்கள் உண்மையில் இந்த இடத்தை விட்டு செல்ல போகிறோம் என்பதை நம்ப ஆரம்பித்தேன். இறுதியாக அங்கிருந்து நாங்கள் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு எங்கள் அனுபவத்தை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு விவரித்தோம். நாங்கள் மீட்கப்பட்டபோதே, குவாரி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். உரிமையாளர் கைது செய்யப்படுவதை அறிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். நாங்கள் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டோம், அங்கு நாங்கள் சில நாட்கள் அரசு விடுதியில் தங்கினோம். எங்கள் உடனடி தேவைகளுக்காக எங்களுக்கு ஆரம்ப இழப்பீடாக வெளியீட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.20,000 வழங்கப்பட்டு கிருஷ்ணகிரியில் எங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டோம்.

நானும் என் குடும்பத்தினரும் வீடு திரும்புவது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருந்தது. அந்த கொடூரத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, நான் முதலில் என் கிராமத்திற்கு அருகிலுள்ள காய்கறி மற்றும் ரோஜா பண்ணைகளில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை செய்தேன்.
பின்னர், வாட்டர் பேக்கேஜிங் யூனிட் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனத்திலும் டெலிவரி நபராக வேலை செய்தேன். இந்த உதவியால், கிருஷ்ணகிரியில் உள்ள எங்கள் கிராமத்தில் எனது குடும்பத்தினர் வைத்திருந்த நிலத்தில் ஒரு சிறிய வீட்டைக் கட்ட முடிந்தது. நான் எனது கிராமத்திற்கு திரும்பி வேலை தேட முடிவு செய்துள்ளேன், அதனால் நான் எனது குடும்பத்துடன் இருக்க முடியும்.
இப்போது நாங்கள் வாழும் வாழ்க்கைக்கும் , குவாரியில் இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் சொர்கத்திற்கும் நரகத்திற்கும் உள்ள வித்தியாசம், என்று கண்ணீர் ததும்புகிறார்.
தகவல்: மாதேஷ் | தமிழில்: மலையரசு