தடைகளை உடைத்து; மாளிகையை வர்த்தகமாக்கி வெற்றித் தொழிலபதிராக வலம்வரும் ஜோத்பூர் இளவரசி!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது உமைத் பவன் அரண்மனை. 347 அறைகள் கொண்ட ஆடம்பரமான அரண்மனை, உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்புகளில் ஒன்றாகும். ஜோத்பூர் இளவரசி சிவரஞ்சனி ராஜ்யே அதை வீடு என்று அழைக்கிறார். உண்மையில் அது அவரது வீடு மட்டுமில்லை, தொழிற்கூடமும்!.
வாழ்நாளில் ஒரு முறையாவது இளவரசியாக வேண்டும் என்று கனவு காணாதவர் யார்?
அரச மரபின் காரணமாக, இளவரசியாக ஒருவர் பிறந்தால் அவரது வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். தரையில் கால் படாதவொரு லக்சரியான வாழ்க்கையில் மிதந்து கொண்டிருப்பார்கள் எனும் உங்களது அனுமாத்திற்கு நேரெதிராக தொழிலதிபராக மிளிர்கிறார் இளவரசி சிவரஞ்சனி ராஜ்யே.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ளது உமைத் பவன் அரண்மனை. 347 அறைகள் கொண்ட ஆடம்பரமான அரண்மனை, உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்புகளில் ஒன்றாகும். சிவரஞ்சனி ராஜ்யேவோ அதை வீடு என்று அழைக்கிறார். உண்மையில் அது அவரது வீடு மட்டுமில்லை, தொழிற்கூடமும்!.
ஆம், அரண்மனையை நிர்வகிப்பதும் பராமரிப்பதும் அவரே. அரசக் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், சுதேச குடும்பத்தின் சொத்துக்களை வணிகமாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
அரண்மனையின் மன்னர் காஜ் சிங். காஜ் சிங்கின் மூத்த மற்றும் ஒரே மகள் சிவரஞ்சனி. அவரது இளைய சகோதரர் சிவராஜ் சிங் குடும்பச் சொத்துக்களின் அதிகாரப்பூர்வ வாரிசாக இருந்தாலும், சிவரஞ்சனி அவரது தந்தையுடன் இணைந்து கோட்டைகள், அரண்மனை அருங்காட்சியங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளடக்கிய குடும்பத்தின் வணிகத்தை வளர்த்து வருகிறார்.
கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்களுக்கு முன்னர் அவர் குடும்பத்தின் வணிகத்தை கையில் எடுத்தார். அச்சமயத்தில், பொருளாதார ரீதியாக அரண்மனை கடினமான நேரத்தைச் சந்தித்திருந்தது. அதே நேரத்தில், அவரது சகோதரர் போலோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட போது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் குணமடைய பல ஆண்டுகளாகி உள்ளது.
347 அறை.. 26 ஏக்கர்
14 ஆண்டுகள் கட்டப்பட்ட அரண்மனை
காஜ் சிங்கின் தந்தை ஹன்வந்த் சிங் விமான விபத்து ஒன்றில் இறந்துவிட, ஜோத்பூரின் 29வது மகாராஜாவாக காஜ் சிங் அவருடைய 4 வயதில் பதவியேற்றார். காஜ்சிங்கின் தாத்தா உமைத் சிங் பெயரால்தான் அரண்மனை அமைந்துள்ளது.
1929ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1943ம் ஆண்டில் நிறைவு பெற்றுள்ளன. அரண்மனையை கட்டி முடிக்க சுமார் 14 ஆண்டுகள் ஆகியுள்ளது. மேற்கத்திய தொழில் நுட்பங்களுடன், இந்திய கலைநயத்துடன் இந்த அரண்மனை கட்டப்பட்டது. ராஜபுத்திரர் காலத்தின் பெருமைக்கு சான்றாக விளங்குகிறது உமைத் பவன் அரண்மனை.
26 ஏக்கர் பரப்பளவில், 347 அறைகளைக் கொண்டுள்ள அரண்மனையை அரச குடியிருப்பு, ஆடம்பரமான தாஜ் பேலஸ் ஓட்டல் மற்றும் ஒரு அருங்காட்சியகம் என மூன்று செயல்பாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1971ம் ஆண்டில் காஜ் சிங், அரண்மனையின் ஓர் பகுதியை சொகுசு தங்குமிடமாக மாற்றினார். இதனை தற்போது தாஜ் ஓட்டல் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இவை தவிர, லக்சரியான பேலஸ் திருமண மண்டபமாகவும் அவ்வப்போது ஜொலித்து, தம்பதிகளை இணைக்கிறது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது காதலரை மணம் முடித்தது உமைத் பவனில் தான். அரண்மனையின் சொத்துகளை அவர் வணிகமாக்கியுள்ளார் என்பதை தாண்டி, அதன் பாரம்பரியத்தை இழந்துவிடாமல் பராமரித்து வருகிறார்.
"எங்களுடையது பாரம்பரிய குடும்பம். மகாராஜா முதல் மூத்த மகன் வரை குடும்பம் பெருகி இருக்கிறது. ஆனால், வணிகம் வளர வேண்டும் என்றால், தனித்தனி தலைவர்களுடன் குடும்ப வணிகமாக இயங்க வேண்டும். அதைத்தான் நான் நம்புகிறேன்,” என்கிறார் சிவரஞ்சனி.
பாரம்பரியச் சொத்துக்கள் விற்கப்படும்போதும் அல்லது பிரிக்கப்படும்போதும் அவற்றின் மதிப்பை இழக்கின்றன.
“உமைத் பவன் பாதியாகப் பிரிந்தால் அதன் மதிப்பை எப்படி இழக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் பிரித்தால், நீங்கள் பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்," என்று ரெடிஃப் செய்தி இணையதளத்திடம் பகிர்ந்தார் அவர்.
வணிகமாக மாறிய அரண்மனை
அரண்மனையின் சொத்துகளை வணிகமாக்கி அதன் மதிப்பை பெருக்கி வரும் சிவரஞ்சனியின் குழந்தைப் பருவத்தின் போது அவரது தந்தை மேற்கிந்தியத் தீவுகளின் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் துாதராக பணிபுரிந்துள்ளார். அவருக்கு 6 வயது இருக்கும் போதே இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். பள்ளிப்படிப்பை இந்தியாவில் படித்தவர், மேற்படிப்புகளுக்காக அயல்நாட்டு சென்றுள்ளார். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டமும், நியூயார்க்கில் திரைப்படத் தயாரிப்பும் பயின்றுள்ளார்.
இசை ஆர்வம் கொண்ட சிவரஞ்சனி, அரண்மனை நிர்வகிக்கும் நாகவுரில் உள்ள மிகவும் பிரபலமான மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் அஹிசத்ரகர் கோட்டையில் இசை திருவிழாவினையும் நடத்தி வருகிறார். வருங்கால சந்ததியினரும் மெஹ்ரான்கர் கோட்டையை காணவேண்டும் என்பதற்கான கோட்டையை புதுப்பிக்கும் 20 ஆண்டு திட்டத்தை துவங்கி அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாகவுரில் உள்ள சொத்தை மீட்டெடுக்க மானியம் கிடைத்தது. அஹிசத்ரகர் கோட்டை மீட்டெடுக்கப்பட்டு யுனெஸ்கோ விருதைப் பெற்றது. அதன் பிறகு மக்கள் இங்கு வந்து அதன் அழகைக் காண வேண்டும் என தீர்மானித்து, அதற்காக திட்டம் தீட்டினோம். மக்கள் வருகைப்புரிந்து, தங்கி பாரம்பரிய இசையைப் பார்ப்பதற்காக இசை விழாவைத் தொடங்கினோம்," என்று ஷி தி பிபள் டிவியிடம் கூறி விழாவிற்கான யோசனை எவ்வாறு உருவானது என்பதை நினைவு கூர்ந்தார் சிவராஞ்சனி.
”ஆண்டுக்கு 8 மாதங்கள் திருவிழாக்கள் மற்றும் ஓட்டல்களால் மக்கள் கூட்டம் ஜோத்பூரில் நிரம்பி வழிகிறது. வணிகப்பணிகளை குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு பகிர்ந்து கவனித்து கொண்டாலும், பரம்பரை என்று வரும் போது அது ஆண் வாரிசுக்கு செல்கிறது எனும் அவர், தலைமைத்துவத்தில் பாலின வேறுபாடு கலைய வேண்டும்,” என்று கூறுகிறார்.
"பெண்கள் இன்று வெவ்வேறு வேலைகளில் பணிபுரிகிறார்கள். தலைமைத்துவம் பற்றியுள்ள நமது கருத்து மாற வேண்டும் என்று நினைக்கிறேன். அது கார்ப்பரேட் பணியாக இருந்தாலும் சரி, கிராமத்துப் பெண் அவர்தம் வீட்டை விட்டு வெளியே வந்து புரியும் பணியாக இருந்தாலும் சரி, இங்கு பாலின வேறுபாடு உள்ளது. அந்நிலை மாற வேண்டும்," என்றார்.
சிவரஞ்சனியை பொறுத்தவரை இளவரசி என்பது மகிழ்ச்சியான பொறுப்பு.
தகவல் உதவி : டிஎன்ஏ இந்தியா | படங்கள் உதவி: ரெடிஃப்.காம்
ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்: ரேஷ்மா கேவல்ரமணி கதை தெரியுமா?