ஏப்.1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாத தங்க நகைகள் விற்பனைக்கு தடை: ஏன் இந்த எண்? - எளிய விளக்கம்
HUID எண் என்றால் என்ன? தங்க நகைகளுக்கு ஏன் இது முக்கியமானது? இது நுகர்வோர் நலன் சார்ந்தது என அரசு தெரிவித்துள்ளது ஏன்? போன்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய ஆறு இலக்க தனித்த அடையாள எண் (HUID) இல்லாத தங்க நகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது என இந்திய அரசு அறிவித்துள்ளது. HUID எண் என்றால் என்ன? தங்க நகைகளுக்கு ஏன் இது முக்கியமானது? இது நுகர்வோர் நலன் சார்ந்தது என அரசு தெரிவித்துள்ளது ஏன்? - இதுபோன்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
தங்கத்திற்கான உலகச் சந்தையில் தங்க நுகர்வை அதிகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய நாட்டின் கலாச்சாரம் சார்ந்து தங்கம் இருப்பதுதான். மறுபக்கம் முதலீடு சார்ந்தும் இந்தியாவில் தங்க நுகர்வு உள்ளது. இந்நிலையில், ஆறு இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 31-க்கு பிறகு ஆறு இலக்க HUID எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது. இது நுகர்வோர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார். மேலும், சந்தையில் தற்போது 4 மற்றும் 6 இலக்க HUID எண் கொண்ட தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 31-க்கு பிறகு 6 இலக்க கொண்ட HUID இடம்பெற்றுள்ள நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HUID என்றால் என்ன?
ஆங்கில எழுத்து மற்றும் எண்களும் அடங்கியதுதான் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய ஆறு இலக்க தனித்த அடையாள எண் (HUID). இது தங்க நகைகள் ஹால்மார்க் செய்யப்படும் நேரத்தில் வழங்கப்படுவது. ஒவ்வொரு தங்க நகைக்கும் வழங்கப்படும் பிரத்யேக எண். இதை ஹால்மார்க் மையங்கள் வழங்குகின்றன. தங்கத்தின் தரத்தை ஆராய்ந்த பிறகு இது வழங்கப்படுகிறது.
நுகர்வோர் மத்தியில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் நோக்கில் இந்த எண்கள் இடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பயனர்கள் தங்க நகை வாங்கும்போது இதனை பார்த்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தரநிலைகளின் பணியகத்தால் (BIS) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்கிறது.
ஹால்மார்க் அடையாளத்தை சரிபார்ப்பது எப்படி?
ஹால்மார்க் நகைகளில் பிஐஎஸ் மார்க், தங்கத்தின் தரம் மற்றும் HUID எண் இருக்கும். இதை பயனர்கள் தங்க நகை வாங்கும்போது உறுதிசெய்து வாங்கலாம். தங்கத்தின் தரத்தை குறிப்பிடும் வகையில் 22K756 என இருக்கும். 22 காரட் தங்கம் மற்றும் அந்த நகையில் 75.6 சதவீதம் சுத்த தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இது குறிப்பிடுகிறது. பொதுவாக தங்கம் இலகுவான உலோகம் என்பதால் இன்னும் பிற உலோகத்துடன் சேர்த்துதான் தங்க நகைகள் வடிவமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Edited by Induja Raghunathan