விமானத்தில் வாழை இலைச் சாப்பாடு: பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய முயற்சி!
ஒவ்வொரு விமானப் பயணியும் சராசரியாக பயணத்தின் முடிவில் 1.36 கிலோகிராம் கழிவுகளை விமானத்தில் விட்டுச் செல்கின்றனர் தெரியுமா?
ஐ.நா சபையின் பருவநிலை மாற்றச் செயல்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பருவநிலை பாதுகாப்பு போராளி கிரெட்டா துன்பெர்க், ஆற்றிய உணர்ச்சிமிகு உரை உலகத்தாரை வியக்கவைத்தது. உரை மட்டுமின்றி விமானத்திலிருந்து வெளியேறும் புகையால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க அவர், ஸ்வீடனில் இருந்து அமெரிக்காவுக்கு சூரியச் சக்தியால் இயங்கும் ஒரு படகின் மூலம் 3500 கடல் மைல்களைக் கடந்து 15 நாட்கள் கடற்பயணம் மேற்கொண்டதில் உலகம் முழுவதும் பேசப்பட்டார். அது சரி... ஆனால், விமானத்துக்குள் உள்ள பொருள்களால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான தீர்வு?
சராசரியாக, ஒவ்வொரு விமானப் பயணியும் பயணத்தின் முடிவில் 1.36 கிலோகிராம் கழிவுகளை விமானத்துக்குள் விட்டுச்செல்கின்றார். இதை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பு நிறுவனமான ’Priestmangoode’.
அதன் ஒரு பகுதியாக, பயணிகளும், விமான நிறுவனங்களும் சூழல்நலன் கருதி சிந்திக்கவைக்கும் வகையில் காப்பித்தூள் சக்கை, தென்னை மரம் மற்றும் வாழையிலை கொண்டு பயணிகளுக்கான உணவுத்தட்டுகளை வடிவமைத்துள்ளது. மெயின் டிஷ்ஷுக்கு ஒரு குழி, சைடு டிஷ்ஷுகளுக்கு 3 குழிகள், தண்ணீர் கப் வைப்பதற்கு ஒரு குழி கொண்ட ட்ரேயினை வடிவமைத்துள்ளது.
தண்ணீர் கப்கள் கரையக்கூடிய கடற்பாசியிலிருந்தும், சைடு டிஷ்களுக்கான குட்டி தட்டுகள் கோதுமை தவிடு மற்றும் வாழை இலையில் இருந்தும், சாப்பாடு வைப்பதற்கான தட்டு காப்பித்தூள் சக்கையிலிருந்தும் தயாரிக்கப் பட்டுள்ளது.
வழக்கமாக விமானப் பயணிகளுக்கு வழங்கப்படும் ஒரு புறம் மட்டும் கூர்மையுடைய கத்தி, ஃபோர்க் ஸ்பூன் மற்றும் கரண்டி ஆகியவற்றிற்கு மாற்றாக தென்னை மரத்தால் செய்யப்பட்ட ஃபோர்க் ஸ்பூனை தயாரித்துள்ளது இந்நிறுவனம். மேலும், உணவு தட்டுகளை மூடுவதற்கு மூங்கிலால் தயாரிக்கப்பட்ட மூடிகளையும் உருவாக்கியுள்ளது.
பயணிகள் சாப்பிட்டு முடிந்தவுடன் கழிவுகளை அகற்றுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அம்மூங்கில் மூடிகள். ட்ரேவில் உள்ள அனைத்து தட்டுகளும், கப்பும் உண்ணக்கூடியதாகவோ அல்லது மக்கும் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 'பிரீட்ஸ்மேன்கூட்' நிறுவனம் உணவு ட்ரே உடன் சேர்த்து, தக்கை மற்றும் உரம் தயாரிக்கும் பயோ பிளாஸ்டிக்கிலிருந்து வாட்டர் பாட்டில் ஒன்றையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர் ஜோ ரோவன் கூறுகையில்,
“எங்கள் நிறுவனம் கிளாமரசான தயாரிப்புகளில் கவனம் செலுத்தாமல், சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வழங்க முயற்சித்து வருகிறது. விமானத்துக்குள் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆண்டுக்கு 4 பில்லியன் மக்கள் விமானப் பயணம் மேற்கொள்வதால், குப்பைகளும் விரைவில் குவிந்துவிடுவது எளிது,” என்றார்.
விமானங்களில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளின் அளவு குறித்து அரசு புள்ளிவிவரங்கள் இல்லாததால், துல்லியமான கழிவுகளின் நிலை கண்டறிவது எளிதல்ல. ஆனால், சுமார் 300 விமானங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுவான சர்வதேச விமான போக்குவரத்து சங்கம், லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு சிறிய ஆய்வை நடத்தியது. அதில்,
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6.7 மில்லியன் டன் விமானக் கழிவுகளை விமானநிறுவனங்கள் உருவாக்கியதாக மதிப்பிட்டுள்ளது. விமான நிறுவனங்கள் பெருகுவதுடன், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்துள்ளது.
பார்சிலோனாவைத் தளமாகக் கொண்ட ஆய்வுக் குழுவான ‘வாழ்க்கை சுழற்சி மற்றும் காலநிலை மாற்றத்தின்’ இயக்குனர் பெரே புல்லானா ஐ பால்மர், ‘உங்களுக்கு சிஸ்டத்தை பற்றி தெரியவில்லை எனில், அதை மேம்படுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார். டாக்டர் புல்லானா ஐ பால்மரின் ஆராய்ச்சி குழு,
ஐபீரியா ஏர்லைன்ஸ், கேட் காமேட், ஃபெரோவியல் மற்றும் ஈகோஎம்பீஸ் ஆகிய விமான நிறுவனங்களுடன் இணைந்து 145 விமானங்களில் ஆய்வை நடத்தியது. அதில், 33% உணவுக் கழிவுகள், 28% அட்டை மற்றும் காகிதக் கழிவுகள் மற்றும் சுமார் 12% பிளாஸ்டிக் என 8,400 பவுண்டு குப்பைகள் விமானங்களில் தேங்குகின்றன என்பதை ஆராய்ந்து கூறியுள்ளனர்.
இதற்கு தீர்வுதான் என்ன?
விமானப் பயணத்தால் வெளிப்புற சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை நுகர்வோர் பெருகிய முறையில் உணரும்போது, விமான நிறுவனங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு உள்ளாகின்றன. அலாஸ்கா ஏர்லைன்ஸ், ரியானைர் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் விமானக் கழிவுகளை குறைப்போம் என பகிரங்கமாக அறிவித்துள்ளன. ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம்,
“இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை பயன்படுத்தப்படும் கப் மற்றும் உணவுக்குச்சிகள் போன்ற 210 மில்லியன் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும்,” என தெரிவித்துள்ளது.
தவிர, சிகாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்ற யுனைடெட் ஏர்லைன்சின் விமானம், முழுமையாக மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது உரம் தயாரிக்கக்கூடிய உணவு பரிமாறும் பொருள்களை பயன்படுத்தி உணவு பரிமாறியது.
மக்கும் தன்மை உடைய பிளாஸ்டிக்கிற்கு மாற்றான Priestmangoode-ன் தயாரிப்புகள், லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் 'Get Onboard: Reduce. Reuse. Rethink' என்ற கண்காட்சியில் செப்டம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
“விமான நிறுவனங்களும், சப்ளையர்களும் பிளாஸ்டிற்கு மாற்றான பிரீட்ஸ்மேன் கூட் தயாரிப்புகள் மீது ஆர்வம் காட்டிவருகின்றனர். பிப்ரவரி மாதம் வரை தயாரிப்புகள் கண்காட்சிகளிலே விற்பனைக்கு கிடைக்கும்,” என்றார்.
தகவல் உதவி: https://www.nytimes.com