பெங்களுருவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை மீட்டுள்ள ஆர்வலர்!
பெங்களூருவைச் சேர்ந்த ஹாரிஸ் அலி சர்வோகம் வெல்ஃபேர் ட்ரஸ்ட் தொடங்கி நகர் முழுவதும் காயம்பட்ட நாய்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
ஹாரிஸ் அலி 12 வயதிலேயே நாய்கள் மீது அன்பு காட்டத் தொடங்கினார். இவரது வீட்டிற்கு அருகில் நாய் ஒன்று மூன்று குட்டிகள் போட்டிருந்தது. ஹாரிஸ் தான் அன்றாடம் சேமிக்கும் 2 ரூபாய் கொண்டு பிஸ்கெட் வாங்கி அந்த நாய்களின் பசியைப் போக்குவார்.
அந்த மூன்று நாய் குட்டிகளில் ஒன்றை அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் அடித்துக் கொன்றுவிட்டார்.
“அந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது. ஆண்டுகள் செல்லச் செல்ல அதை மறந்து போனேன். பின்னர் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி மிகவும் நோய்வாய்பட்டிருந்த நாய் ஒன்றைப் பார்த்தேன். அதை மீட்க நினைத்தேன். பல என்ஜிஓ-க்களையும் மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டேன். யாரும் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு நானே துணிந்து அந்த நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்,” என்று சோஷியல்ஸ்டோரி இடம் பகிர்ந்துகொண்டார் ஹாரிஸ்.
அந்த நாய்க்கு தொற்று நோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கும் தங்கவைப்பதற்கும் ஏற்பாடு செய்வது குறித்து ஹாரிஸ் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் இவரை அணுகி அந்த நாய்க்கு சிகிச்சையளித்து பராமரிக்க முன் வந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயம் பட்டோ அல்லது உடல்நிலை சரியில்லாமலோ தவித்து உதவி தேவைப்படும் நாய்கள் குறித்த தகவல்களை மக்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினார் ஹாரிஸ்.
வாட்ஸ் அப் குழு மூலம் தகவல் கிடைத்ததும் ஹாரிஸ் தானே சென்று நாய்களை மீட்கிறார். சிகிச்சை தேவைப்படும் நாய்களை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறார். அல்லது பெங்களூருவில் உள்ள Compassion Unlimited Plus Action (CUPA) என்கிற விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டு செல்கிறார்.
“பெங்களூரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பது அனைவரும் அறிந்ததே. தெற்கு பெங்களூருவில் இருந்து வடக்கு பெங்களூருவிற்கு பயணம் செய்வேன். நாள் முழுவதும் செலவிட வேண்டி வரும். இப்படி நேரத்தை விரயமாக்காமல் சரியான நேரத்தில் மீட்க மாற்று ஏற்பாடு செய்வது குறித்து யோசித்தேன்,” என்கிறார் ஹாரிஸ்.
2017-ம் ஆண்டு சிறிய அறை ஒன்றில் தங்குமிடத்தை அமைத்தார். முதல் நாளே 20 நாய்கள் இங்கு தஞ்சமடைந்தன. மீட்புப் பணிகள் மெல்ல அதிகரித்ததும் ஜே.பி.நகர் பகுதியில் பெரிய தங்குமிடத்தை ஏற்பாடு செய்தார். இப்படி உருவானதுதான் ‘சர்வோகம் வெல்ஃபேர் டிரஸ்ட்’ (Sarvoham Welfare Trust).
சர்வோகம்
சர்வோகம் தங்குமிடம் 12,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. இங்கு நாய்களுக்கான 25 தங்குமிடமும் ஒரு மருத்துவமனையும் உள்ளது. இந்த மருத்துவமனையில் நாய்களுக்கு வழக்கமான சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தவிர அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான தங்குமிடம், சேமிப்பு அறை, இரண்டு நிர்வாக அலுவலகங்கள், நாய் குட்டிகளுக்கான பிரத்யேக பகுதி ஆகியவை உள்ளன. நாய்கள் ஓடி ஆடி விளையாட திறந்தவெளியும் இருக்கின்றன.
நகர் முழுவதும் நாய்களை மீட்பதற்காக இந்த டிரஸ்ட் சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ் இயங்குகின்றன. தற்சமயம் இந்த தங்குமிடத்தில் கிட்டத்தட்ட 170 நாய்கள் உள்ளன. ஒவ்வொரு முறை ஒரு நாய் மீட்கப்படும்போதும் அதற்கு சரியான நேரத்தில் கருத்தடை செய்யப்படுகிறது.
“இந்த தங்குமிடத்தில் பல நாய்கள் உள்ளன. இவை பல வகையான நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக பிறக்கும் குட்டிகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் கட்டாயமாக இனப்பெருக்கம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது,” என்றார் ஹாரிஸ்.
புதிதாக ஒரு நாய் தங்குமிடத்திற்கு வரும்போது அதற்கு மருத்துவப் பராமரிப்பு, சிகிச்சை, மறுவாழ்வு, பிசியோதெரபி போன்றவை வழங்கப்படுகிறது. ஓய்வு எடுக்கவேண்டிய நிலையில் இருக்கும் நாய்களுக்கு படுக்கை வசதி செய்து தரப்படுகிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும் நாய்கள் நகர்ந்து செல்ல உதவும் வகையில் கால்களில் சக்கரங்கள் போன்ற அமைப்பு பொருத்தப்படுகிறது.
தற்போது 14 வயது நாய் ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக இங்கு ஓய்வில் இருக்கிறது. இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு தானாக சாப்பிட முடியாமல் தவிக்கும் நாய்களுக்கு தன்னார்வலர்கள் தாங்களே உணவை ஊட்டி விடுகின்றனர்.
விபத்தினாலோ அல்லது நோய் தாக்கத்தினாலோ உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் நாய்களுக்கே சர்வோகம் முக்கியத்துவம் அளிக்கிறது. கைவிடப்பட்ட நாய்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக ஹாரிஸ் தெரிவிக்கிறார்.
"கைவிடப்பட்ட நாய்களுக்கு முன்பு நாங்களே அடைக்கலம் கொடுத்து வந்தோம். அவற்றில் சில நாய்கள் வேறு தங்குமிடங்களுக்கு செல்ல முடியாமல் இன்னமும் இங்கேயே இருக்கின்றன. சிலர் வாசலில் நாய்களை விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அத்தகைய சூழல்களில் வேறு வழியின்றி அவற்றிற்கு அடைக்கலம் கொடுக்கிறோம்,” என்கிறார் ஹாரிஸ்.
ஹாரிஸ் முயற்சியாலும் சர்வோகம் நல்வாழ்வு அறக்கட்டளை செயல்பாடுகளாலும் பெங்களூரு நகரம் முழுவதும் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹாரிஸ் விலங்குகளை மீட்பது மட்டுமின்றி தொழில்முனைவராகவும் செயல்படுகிறார். Orcaza Cybersecurity என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக இந்த ஸ்டார்ட் அப் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டே சர்வோகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அலுவலகம் செயல்படவில்லை. இதனால் அறக்கட்டளைக்கு நிதியும் கிடைக்காமல் போனது. மிலாப் கூட்டுநிதி தளம் மூலமாகவே நிதி திரட்டப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் 10 லட்ச ரூபாய் வரை திரட்டப்பட்டது. மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடமிருந்து நிதி மட்டுமல்லாது இயந்திரங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிக்கான உதவியும் கிடைத்தது.
இங்குள்ள நாய்களுக்கு வெவ்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்டும் காயம் பட்டும் அவதிப்படுகின்றன. இருப்பினும் இவை கவலையின்றி வாழ்கின்றன. இதைப் பார்ப்பது உற்சாகமளிப்பதாக ஹாரிஸ் குறிப்பிடுகிறார்.
சர்வோகம் தங்குமிடத்தில் இருக்கும் நாய்களில் ஒன்று சோட்டி. இதற்கு உடம்பில் எட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக உயிருக்குப் போராடுகிறது. இருப்பினும் அனைவரிடமும் பாசமாகப் பழகி வருகிறது.
அதேபோல் நரம்பு பிரச்சனை காரணமாக நேராக நிற்கமுடியாமல் இருக்கும் காலு என்கிற மற்றொரு நாய் அத்தகையக் குறைபாடு இருக்கும் சுவடே தெரியாமல் மகிழ்ச்சியாக வலம் வருகிறது. இதுபோல் பல்வேறு பிரச்சனைகளுடன் இருக்கும் ஏராளமான நாய்கள் இங்கு உற்சாகத்துடன் வாழ்ந்து வருக்கின்றன.
சவால்கள்
மனிதர்கள் விலங்குகளை கருணையுடன் பார்ப்பதில்லை. இதுவே மிகப்பெரிய சவால் என்று ஹாரிஸ் வருத்தம் தெரிவிக்கிறார். வேதனையில் தவிக்கும் நாய்களை கண்டும் காணாததுபோல் கடந்து சென்றுவிடுகிறார்கள் என்றார்.
“விலங்குகளை வெறுக்கும் ஒரு கும்பல் இருக்கிறது. கைவிடப்பட்ட விலங்குகளுக்கு மற்றவர்கள் உதவுவதையும் இவர்கள் விரும்ப மாட்டார்கள். நாங்கள் மீட்கச் சென்றால் எங்களுடன் சண்டை போடுவார்கள்,” என்று ஹாரிஸ் பகிர்ந்துகொண்டார்.
அரசு தரப்பிலும் விலங்குகளைப் பராமரிக்கப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. கருத்தடை செய்யப்படுவதில்லை. இதனால் நாய்களை மீட்பவர்களும் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல் விலங்குகளைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கும் சிறிய தொகை மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் பொறுப்பேற்காமல் தப்பித்துவிடுகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் இந்த அறக்கட்டளை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இந்த அறக்கட்டளையில் ஒன்பது ஊழியர்களும் 20 தன்னார்வலர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
பெருந்தொற்று பரவலுக்குப் பிறகு மூன்று ஊழியர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனால் மீட்புப் பணிகளும் பெருமளவு குறைந்துள்ளது. நாள் ஒன்றிற்கு நான்கு முதல் ஐந்து நாய்களை மீட்ட இந்த அறக்கட்டளையால் தற்போது ஒரு மாதத்திற்கு 20 நாய்களை மட்டுமே மீட்க முடிகிறது. மற்றவர்களுக்கும் ஆபத்து இருக்கக்கூடாது என்பதற்காகவே ஹாரிஸ் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டுள்ளார்.
“அடுத்த ஐந்தாண்டுகளில் நாய்கள் மட்டுமின்றி மற்ற விலங்குகளுக்கு நல்வாழ்வு அளித்து விரிவடையவும் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் ஹாரிஸ்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா