'வெள்ளை மிளகு' வழங்கும் கொள்ளை ஆரோக்கியம்: கோவை ஆராய்ச்சியாளர்களின் தொழில் முயற்சி!
மிளகை நாம் அனைவரும் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த மிளகை மேலும் மதிப்புக்கூட்டி அதன் வாசனை மற்றும் சத்துக்களை அதிகரிக்கச் செய்து வெள்ளை மிளகாக விற்பனை செய்து வருகின்றனர் கோவையைச் சேர்ந்த வி.டி எக்கோகிரீன் டெக்னாலஜிஸ்
’பத்து மிளகு உண்டால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்,” என்பது பழமொழி.
அந்தளவுக்கு மிளகில் விஷத்தை அழிக்கும் திறனும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உள்ளது. இத்தகைய மிளகைத்தான் நாம் அனைவரும் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த மிளகை மேலும் மதிப்புக்கூட்டி அதன் வாசனை மற்றும் சத்துக்களை அதிகரிக்கச் செய்து வெள்ளை மிளகாக விற்பனை செய்து வருகின்றனர் கோவையைச் சேர்ந்த வி.டி. எக்கோகிரீன் டெக்னாலஜிஸ் (VT ECOGREEN TECHNOLOGIES PVT LTD).
இந்நிறுவனத்தின் இயக்குநர்களான டாக்டர்.தங்கவேலு மற்றும் லிபின் தேவ் ஆகிய இருவரும் பயோ-டெக்னாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அதிலும் குறிப்பாக தங்கவேலு இஸ்ரேல் மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்தவர். தற்போது இவர்கள் இருவரும் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள், ஆராய்ச்சியாளர்களாக மாறி, தாங்கள் கற்ற கல்வியின் மூலம் நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஓர் ஸ்டார்ட்அப்பை தொடங்க வேண்டுமென திட்டமிட்டபோது, அவர்களுக்கு உதித்த சிந்தனைதான் ’வெள்ளை மிளகு’.
கருப்பு மிளகில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட வெள்ளை மிளகை பிரித்தெடுத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து இந்தத் தொழிலில் கொடிகட்டி பறந்து வரும் தங்கவேலு மற்றும் லிபின் தேவ் ஆகிய இருவரும் அவர்களின் புதிய ஸ்டார்ட்அப் குறித்து நம்மிடம் பகிர்ந்தனர்.
உலகம் முழுவதும் வெள்ளை மிளகின் பயன்பாடு பரவலாக உள்ளது. ஆனால், மிளகின் தாயகமான இந்தியாவில் இதுகுறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. நாம் கற்ற கல்வியின் மூலம் நாட்டு மக்களுக்கு ஏதேனும் நலம் பயக்கும் செயலை செய்ய வேண்டும், அதே நேரத்தில் அது நல்ல லாபமளிக்கும் தொழிலாகவும் இருக்கவேண்டும் என திட்டமிட்ட போதுதான் நாம் பாரம்பரியமாக மருந்தாகவும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தி வரும் கருப்பு மிளகை தோல் உரித்து வெள்ளை மிளகாக மதிப்புக்கூட்டி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினால் என்ன என்று தோன்றியது.
ஏனெனில், பெரும்பாலானவர்கள் மிகுந்த காரம் காரணமாக மிளகை பயன்படுத்துவதில்லை. ஆனால் மிளகை இயற்கையான முறையில் தோலை நீக்கி, மதிப்புக்கூட்டி வழங்கும்போது, அவர்களுக்குத் தேவையான சுவை, அளவான காரம், விட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. அதிலும் தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டு, மிக எளிய இயற்கை முறையில் நன்கு விளைந்த மிளகில் இருந்து மூன்றே நாள்களில் அதன் தோலை நீக்கி, அதனை மதிப்புக்கூட்டி மிகுந்த நறுமணத்துடன், கூடுதல் சத்துக்களுடன், நல்ல சுவையுடன் வழங்க முடியுமென கண்டறிந்து, அதனைத்தான் எங்களின் நிறுவனம் மூலம் செயல்படுத்தி வருகிறோம் என்கின்றனர்.
மேலும், இவர்கள் இருவரும் தங்களின் இந்த வெற்றிகளுக்கு வழிகாட்டியாக தூண்டுகோளாக இருந்தது கேரள பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை முனைவர் தங்கமணி என நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.
பொதுவாக கருப்பு மிளகு மிகுந்த காரம் நிறைந்தது. மேலும், அதன் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனை இயற்கை முறையில் தோலை நீக்குகிறேன் என்று மிளகை சாக்குகளில் அடைத்து, மாதக்கணக்கில் தண்ணீரில் ஊற வைத்து, பின்பு தோலை உரித்து, வெள்ளை மிளகு என்ற பெயரில் மக்களுக்கு மிளகின் சக்கையைத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கி வந்துள்ளன.
இந்நிலையை இவர்கள் இருவரும் மாற்றி 3 நாள்களில் இயற்கை முறையில் தோலை நீக்கி, மிளகில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை பெருமளவுக்கு குறைத்து, அதில் உள்ள சத்துகளின் குறைவு ஏற்படாமல், ரசாயனம் இல்லாமல் நறுமணம் மற்றும் சத்துக்களை ஏற்றி ’குரோனஸ்’ என்ற பிராண்ட் (CRONUS BRAND) தரமான மிளகை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.
கிரேக்க மொழியில் ’CRONUS’ என்பது ’விவசாயத்தின் கடவுள்’, அறுவடையின் கடவுள், நல்ல காலத்தின் கடவுள் என பொருள்படுகிறது. மக்களுக்கு நல்ல தரமான, ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருளை உலகமெங்கும் அளிக்க முடிந்துள்ளதால்தான் குரோனஸ் வெள்ளை மிளகு உலகெங்கும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த இருவரும் இணைந்து மேற்கொண்ட பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் பலனாய் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கருப்பு மிளகை வெள்ளை மிளகாக மாற்றும் முறையை அங்கீகரித்த இந்திய அரசின் Department of Biotechnology, Center for Cellular And Molecular Platfoms, Bangalore என்ற அமைப்பின் மூலம், இவர்களின்’ விடி எக்கோகிரீன் டெக்னாலஜிஸிக்கு’ ரூ. 49 லட்சத்தை நிதி உதவியாக அளித்து கெளரவித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி இயந்திரங்கள் மூலமாகவும், மனித சக்தியின் மூலமாகவும் தரமான மிளகை, அதன் சைஸ் வாரியாக பிரித்தெடுத்து, அதன் தோலை நீக்கி பொடியாகவும், மிளகாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக, சந்தைகளில் தரமான மிளகு ரூ.450 முதல் 500 வரை விற்பனையாகிறது. ஆனால் 2 கிலோ கருப்பு மிளகை, தோல் நீக்கி, மதிப்புக்கூட்டி வெள்ளை மிளகாக மாற்றும்போது 1 கிலோதான் கிடைக்குமாம். இந்த 1 கிலோ வெள்ளை மிளகை ரூ.800-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
கருப்பு மிளகை கொள்முதல் செயவதில் தொடங்கி, போக்குவரத்து, தொழிலாளர் ஊதியம், தொழிற்சாலை பராமரிப்பு என அனைத்தையும் கழித்துப்பார்த்தால் இவர்களுக்கு கிடைக்கும் லாபம் 10 சதவீதம்தான். ஆனால், இந்தியா மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் தரமான நோய் எதிர்பாற்றல் மிக்க வெள்ளை மிளகு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே லாபத்தை கருத்தில் கொள்ளாமல் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்தபட்சம் மாதமொன்றுக்கு சுமார் 2 முதல் 3 டன்கள் வரை வெள்ளை மிளகை விற்பனை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.
வெள்ளை மிளகின் சிறப்பம்சங்கள் குறித்து அவர்கள் இருவரும் நம்மிடம் தெரிவித்ததாவது,
”உலகின் தலைசிறந்த மிளகு உற்பத்தி தளமான மலபார் பகுதிகளில் விளையும் தரமான நன்கு விளைந்த கருப்பு மிளகுகளை தேர்ந்தெடுக்கிறோம். இதனை எவ்வித ரசாயனங்களும் இன்றி, நவீன அறிவியல் தொழில்நுட்ப முறை மூலம் சுகாதாரமான முறையில் வெள்ளை மிளகாக மாற்றுகிறோம். இதன்மூலம் அருமையான நறுமணமும், தனித்துவமான சுவையும் கிடைக்கிறது,” என்கின்றனர்.
மேலும், குரோனஸ் வெள்ளை மிளகில் ஆரோக்கியத்தை கூட்டக்கூடிய உயிர் சத்துகளும், ஊட்டச்சத்துகளும் பெருமளவில் அடங்கியுள்ளனவாம். அமினோ அமிலங்கள் (அலனைன், அஸ்பார்டிக் அமிலம், குளுட்டமிக் அமிலம், செரின், அர்ஜினைன், கிளைசின், புரோலின், டைரோசின், ஹிஸ்டைடின், ஐசோலூசின், லியூசின், லைசின், மெத்தியோனைன், ஃபெனிலலனைன், த்ரோயோனைன், வேலின்), புரதங்கள், நார், தாதுக்கள் (மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம்), வைட்டமின்கள் [வைட்டமின் சி, வைட்டமின் B Complex (தியாமின் (பி 1 ), ரிபோஃப்ளேவின் (B2), நியாசின் (B3), பைரிடாக்சின் (B6), ஃபோலிக் அமிலம் (B9)], PUFA கள், ஒலிக் அமிலம், லினோலிக் அமிலம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளனவாம்.
இந்த குரோனஸ் வெள்ளை மிளகில் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் உயிர்ச்சத்துக்கள் (Bioavailability-enhancers) (பைபெரின், ஓலியோரெசின், வாலட்டைல் ஆயில், விட்டமின்-சி, மெரிஸ்டிக் ஆசிட், பால்மிடிக் ஆசிட், ஃபிளாவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், மினரல்ஸ், செலினியம், காப்பர், ஸிங்க், மாங்கனைஸ், இரும்பு சத்து மற்றும் பல) அடங்கி இருக்கின்றன.
மற்ற வணிக வெள்ளை மிளகுடன் ஒப்பிடும்போது 3 மடங்கு அதிகமான இயற்கையான வாசனை மற்றும் எண்ணெய் சத்துகள் (volatile oils & oleoresins) அதிக அளவில் அடங்கி இருக்கின்றனவாம். எனவே, குரோனஸ் மிளகு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும், இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருள்களை நீக்கும் வல்லமையுள்ளது. இதனால் நமது உடல் சுத்தமாவதுடன், உடல் உள்ளறுப்புகள் இலகுவாக இயங்க வழி ஏற்படுவதால் நோய்கள் அண்டாமல் நீண்ட நெடுங்காலம் வாழ்வதற்கு வழிவகை ஏற்படுகிறது.
தற்போது உலகையே ஆட்டிப் படைத்துவரும் கொரோனா வைரஸ் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கிறது. எனவேதான் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள காய்கனிகள், பழங்கள், கீரைகள், மிளகு, மசாலாப் பொருள்களை மக்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் எனகின்றனர்.
இந்த உயிர்ச் சத்துக்கள் நிறைந்த குரோனஸ் வெள்ளை மிளகு எண்ணற்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளதால், நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதன் தேவையும் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
”சராசரியாக, ஒவ்வொரு மாதமும் 2 முதல் 3 டன் வரை குரோனஸ் வெள்ளை மிளகு விற்பனையாகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்வீடன், சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன,” என்றனர் தங்கவேலு மற்றும் லிபின்.
மக்கள் மிளகை அப்படியே உணவுப் பொருளாக பயன்படுத்த ஏதுவாக எதிர்காலத்தில் மக்களுக்கு சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் தரும் இந்த உயர்தரமான குரோனஸ் பிராண்ட் வெள்ளை மிளகை பயன்படுத்தி மிளாகாய் இல்லாத ரசம், சாம்பார் பொடிகள், இட்லிப் பொடி, ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்த திட்டமுள்ளது.
ஏற்கனவே குரோனஸ் வெள்ளை மிளகு அமேசான் போன்ற ஆன்லைன் கடைகளில் கிடைக்கிறது. மேலும், முக்கிய கடைகளிலும் கிடைக்கிறது. மக்கள் தங்களின் சொந்த உபயோகத்துக்காகவும், விற்பனைக்காகவும் உற்பத்தியாளர்களிடமிருந்தும் நேரடியாக வாங்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களை 63796 10846, 90470 49949 என்ற செல்போன் எண்களிலோ, அல்லது www.vtecogreen.com என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். பொதுவாகவே மிளகை அதிகளவில் பயன்படுத்தும் நம் நாட்டில், குரோனஸ் வெள்ளை மிளகு மிகவேகமாக இந்திய சமையல் அறைகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்றால் மிகையல்ல.