பெங்களுரு சகோதரிகளின் ‘தொன்னே பிரியாணி: 10 கோடி வருவாயுடன் சுடச்சுட வளரும் பிரியாணி பிராண்ட்!
2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில் சகோதரிகள் ரம்யா, ஸ்வேதா ரவி தொடங்கிய RNR Donne Biryani 14 கிளவுட் கிச்சன்களுடன் இயங்கி வருகிறது.
ரம்யா, ஸ்வேதா ரவி இருவரும் சகோதரிகள். பெங்களூருவில் வளர்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து RNR Donne Biryani தொடங்கினார்கள். மக்களின் மனம் கவர்ந்த உணவாக இது மாறும் என அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
தொழில் தொடங்கிய முதல் மாதத்திலேயே 10,000 ஆர்டர்கள் கிடைத்தன. இன்று நகர் முழுவதும் 14 கிளவுட் கிச்சன் செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி RNR Donne Biryani பிராண்டின் சொந்த ரெஸ்டாரண்டும் பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக்கில் செயல்படுகிறது.
ரம்யா கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தார். பிறகு வெளிநாட்டில் குறுகிய கால கோர்ஸ் ஒன்றில் சேர்ந்தார். இந்தியா திரும்பியதும் பார்க் பிளாஸா உள்ளிட்ட நிறுவனங்களில் பல இண்டர்ன்ஷிப் முடித்தார். இவருக்கு விருந்தோம்பல் துறையில் ஆர்வம் அதிகம்.
இவர்களது அப்பாவும் இதே வணிகத்தில் இருந்ததால் இயற்கையாகவே இவருக்கும் இதில் ஆர்வம் இருந்தது.
ஸ்வேதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். முதுநிலைப் படிப்பிற்காக யூகே சென்று வார்விக் பல்கலைக்கழத்தில் படித்தார். பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து RNR Donne Biryani தொடங்கியுள்ளனர்.
“பெருந்தொற்று சமயத்தில் மக்களுக்கு பாதுகாப்பு மட்டுமே முக்கியமாகத் தோன்றியது. அதிலும் குறிப்பாக உணவைப் பொருத்தவரை கூடுதல் கவனம் செலுத்தினார்கள். டோன் பிரியாணி வகை பலரைச் சென்றடையவில்லை என நாங்கள் இருவரும் நினைத்தோம். அதனால் துணிந்து களமிறங்கிவிட்டோம்,” என்கிறார் ரம்யா.
தொன்னே பிரியாணி
’தொன்னே பிரியாணி’ கர்நாடகா வகை பிரியாணி. இதில் கொத்தமல்லி அதிகம் சேர்க்கப்படும். பெங்களூருவில் ஓரு சில இடங்களில் இந்த வகை பிரியாணி கிடைக்கும் என்றாலும் ஹைதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி போல் பிரபல பிராண்டுகள் எதுவும் இந்த வகையில் கவனம் செலுத்தவில்லை. இதை உணர்ந்த சகோதரிகள் தொன்னே பிரியாணி பிராண்ட் தொடங்கினார்கள்.
இவர்களது பாட்டி தயாரிக்கும் தொன்னே பிரியாணி மிகவும் பிரபலம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இவர்களும் அதே முறையில் தயாரிக்க முடிவு செய்தனர். இவர்களது அப்பாவின் பெயர் ரவிச்சந்திரன். தாத்தாவின் பெயர் ராமசாமி. இவர்கள் இருவரின் பெயரையும் இணைத்தே RNR Donne Biryani என பெயரிட்டுள்ளனர்.
“உணவு டெலிவரி பிராண்டாகவே நாங்கள் தொடங்கினோம். கொரோனா பரவல் சமயத்தில் தொடங்கியதால் அது மட்டுமே சாத்தியமாக இருந்தது. பல ரெஸ்டாரண்டுகள் தங்கள் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டதால் சில இடங்களை வாடகை முறையில் கிளவுட் கிச்சனாகப் பயன்படுத்திக் கொண்டோம். மேற்கு பெங்களூருவின் நகர்பவி பகுதியில் எங்கள் முதல் கிச்சன் தொடங்கப்பட்டது. இங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என ரம்யா விவரிக்கிறார்.
ஸ்விக்கி மூலமாகவும் இந்த பிராண்டின் வலைதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து இதைப் பெற்றுக்கொள்ளலாம். மக்களுக்கு இதன் ருசி மிகவும் பிடித்துப்போக இந்த பிராண்ட் வெகு விரைவில் மற்ற இடங்களிலும் விரிவடைந்து 14 கிளவுட் கிச்சன்களைக் கொண்டுள்ளது.
பேக்கிங் வேலைகளில் இந்த சகோதரிகள் அதிக கவனமாக செயல்படுகின்றனர். RNR Donne Biryani வாழை இலையில் பேக் செய்யப்படுகிறது. பிறகு இந்த வாழை இலைப் பொட்டலம் டின் பாக்ஸில் பேக் செய்யப்படுகிறது.
இந்த பிராண்ட் மக்களுக்குப் பிடித்திருப்பதால் பலருக்கு பரிந்துரை செய்கின்றனர். இப்படியே வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். இதுதவிர மார்க்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு இந்த பிராண்ட் அதிகம் செலவிடவில்லை.
RNR Donne Biryani 189 ரூபாய் முதல் 259 ரூபாய் வரை கிடைக்கிறது.
2021-ம் ஆண்டு இந்த சகோதரிகள் முதல் RNR Donne Biryani ரெஸ்டாரண்டை ஜெயநகர் 4-வது பிளாக்கில் திறந்தனர். இங்கு வெவ்வேறு வகையான டோன் பிரியாணி மட்டுமல்லாது இதர பிரபல உணவு வகைகளும் இங்கு கிடைக்கின்றன.
“நாங்கள் ரெஸ்டாரண்ட் திறந்தது முதல் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும்,” என்கிறார்.
இந்தியா முழுவதும் தொன்னே பிரியாணியைப் பிரபலப்படுத்த விரும்புகின்றனர் இந்த சகோதரிகள். முதல் கட்டமாக பெங்களூருவில் கூடுதல் அவுட்லெட்களைத் திறந்து படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் விரிவடைய திட்டமிட்டிருக்கின்றனர்.
லாபகரமாக செயல்பட்டு வரும் இந்த பிராண்ட் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உள்ளது.
“கொரோனா பெருந்தொற்று சமயத்தில் எல்லோரும் வெளியில் வர பயப்பட்டனர். மூலப்பொருட்களை வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் துறையில் ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் விகிதமும் அதிகமாகவே இருந்தது. இத்தனை சவால்கள் இருப்பினும் நாங்கள் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறோம்,” என்கிறார் ரம்யா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா