பிளாஸ்டிக் தீங்கில்லா ‘குட் கம்’ - ‘சூயிங்கம்’ சகோதரர்களின் சக்சஸ் கதை!
உடலுக்கும் உலகுக்கும் தீமை தரக்கூடிய பிளாஸ்டிக் தன்மை கொண்ட சூயிங்கத்துக்கு மாற்றாக ‘குட் கம்’ மூலம் லாபமும் ஈட்டத் தொடங்கிய இரு சகோதரர்களின் வெற்றிக் கதை.
பெங்களூரைச் சேர்ந்த மயங்க், புவன் என்ற இரு சகோதரர்கள், பிளாஸ்டிக் தன்மையினால் பூமியை மாசுபடுத்தும் வழக்கமான சூயிங்கத்துக்கு மாற்றாக ‘மக்கும் சூயிங்கம்’ என்ற ஆரோக்கியமான சூயிங்கத்தை வழங்குவதற்காக ‘குட் கம்’ (
) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினர்.சூயிங்கத்தை நம் வயிறு ஜீரணிக்க ஏழு வருடங்கள் ஆகும் என்பது நிச்சயமாக உண்மையல்ல என்றாலும், அது நம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
புழக்கத்தில் உள்ள சூயிங்கத்தில் ‘பாலிவினில் அசிடேட்’ (polyvinyl acetate-PVA) என்று அழைக்கப்படும் வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டயர்கள் மற்றும் பசைகளை உருவாக்கப் பயன்படுவது என்பது எச்சரிக்கையுடன் கவனிக்கத்தக்கது.
ரிசர்ச் கேட் ஆய்வின் படி, “ஒவ்வோர் ஆண்டும் சூயிங்கம் 105 டன்களுக்கு மேல் ‘பிளாஸ்டிக்’ குப்பைகளை உருவாக்குகிறது. இதனால், அப்புறப்படுத்தப்பட்ட பசையின் மக்காத எச்சம் பிளாஸ்டிக் மாசுபாட்டை உருவாக்குகிறது. இந்தக் கழிவுகளை சேகரிப்பதோ கண்காணிப்பதோ கடினம். மேலும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது, என்கிறது.
சூழலியலும் சூயிங்கமும்
சூயிங்கம் கழிவுகளைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக மயங்க், புவன் சகோதரர்கள் தொடங்கிய பெங்களூரு ஸ்டார்ட்அப் “பிளாஸ்டிக் இல்லாத, முழுமையாக மக்கும் இயற்கைச் சூயிங்கத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமாக இந்த சூயிங்கம் விற்கப்பட்டுள்ளது. இவர்களது ‘குட் கம்’ பூமியை மாசுபடுத்துவதில் இருந்து 700 கிலோ கம் பிளாஸ்டிக்கை ஒழித்ததாகக் கூறுகிறது.
“இது மிகவும் சிறிய பிரச்சனையாகத் தோன்றினாலும், சூயிங்கம்கள் சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்துகின்றன. எங்கள் சூயிங்கம் மூலம் நாங்கள் அதைக் குறைப்பது மட்டுமல்லாமல், வழக்கமான சூயிங்கமின் தீய விளைவுகள் குறித்து எங்கள் நுகர்வோருக்குக் கற்பிக்கிறோம்,” என்கிறார் மயங்க்.
மயங்க், புவன் ஆகியோரின் குழந்தைப் பருவ வாழ்க்கைதான் ‘குட் கம்’ உருவாக அடித்தளம் அமைத்துள்ளது. குழந்தைப் பருவத்தில் இருந்தே தங்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி போதிக்கப்பட்டது என்கின்றனர்.
“குழந்தைகளாக இருந்தபோது, எங்களால் முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு நட்பாக இருக்க கற்றுக்கொடுக்கப்பட்டோம். நாங்கள் மிகக் குறைந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினோம். இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொண்டோம். பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எப்போதும் எங்களுடன் பாட்டில்களை எடுத்துச் சென்றோம், அந்த ‘யூஸ் அண்ட் த்ரோ’ பொருட்களைப் பயன்படுத்தியதில்லை, நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்துச் செல்வோம்..” என்கிறார் மயங்க்
ஃப்ளாஷ்பேக் தந்த ஃப்ளாஷ்
மயங்க் தனது தேர்வுகளின்போது சூயிங்கம்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். “படிக்கும்போது சூயிங்கத்தை மெல்லும்போதும், பரீட்சையின்போதும் அதே சுவையை மென்று சாப்பிட்டால், தசை நினைவாற்றல் காரணமாக விஷயங்களை இன்னும் தெளிவாக நினைவில் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்று படித்திருக்கிறேன். அதனால், நான் நல்ல மதிப்பெண்கள் எடுக்க சூயிங்கத்தை மென்றேன்.
“2010-ஆம் ஆண்டில், நான் 10 ஆம் வகுப்பில் எனது இறுதித் தேர்வுக்கு தயாரிப்பில் ஈடுபட்டபோது நாம் மெல்லும் சூயிங்கம்களில் பிளாஸ்டிக் எவ்வாறு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை நான் வாசித்தேன்,” என்று நினைவுகூர்கிறார்.
“அந்தக் கட்டுரை என்னை உலுக்கியது. நான் சூயிங்கம் மெல்வதை விட்டுவிட முடிவெடுத்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஆராய்ச்சியைத் தொடங்கவும், குட் கம் உருவாக்கவும் முடிவு செய்தேன்,” என்கிறார் மயங்க்.
அவர் தனது முதுகலை படிக்கும் போது, அமெரிக்காவில் மக்கும் சூயிங்கம் தயாரிக்கும் நிறுவனத்தைக் கண்டடைந்தார்.
“இது எனக்கு, இதேபோன்ற ஒன்றைச் செய்ய யோசனை கொடுத்தது. அந்த நேரத்தில், இந்தியாவில் அத்தகைய உற்பத்தியாளர்கள் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்,” என்றார்.
இதற்கிடையில், தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, மயங்க் உணவு அறிவியலில் பெண்களுக்கான ஆரோக்கிய பானங்களைத் தயாரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
“நான் அவர்களுடன் பணிபுரிந்ததால் வெளி உலகில் நன்கு அறியப்பட்டேன். பின்னர் எனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு பல ஸ்டார்ட்-அப்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினேன்,” என்றார்.
சர்வே தந்த சர்ப்ரைஸ்
கோவிட்-19 பெருந்தொற்று உச்சக்கட்டத்தின் இருந்தபோதுதான் இந்த இரு சகோதரர்களும் சூயிங்கம்களை எவ்வாறு மக்கும் தன்மையுடையதாக மாற்றுவது என்பது பற்றி மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நிறையவே நேரம் இருந்தது. ஸ்டார்ட்-அப் தொடங்குவதற்கு இது சரியான நேரம் என்று உணர்ந்தார்கள். தவிர, சொந்தத் தொழிலைத் தொடங்குவது எப்போதுமே இவர்களது நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.
மயங்க் தனது தயாரிப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, 300 பெங்களூர்வாசிகளிடம் சூயிங்கமில் உள்ள பிளாஸ்டிக் உள்ளடக்கம் பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்பதைக் கண்டறிய ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார். இது குறித்து அவர் விவரித்தவை:
“அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சூயிங்கம் ருசித்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஆனால், அவர்களில் 10 சதவீதத்துக்கு குறைவானவர்களே அவற்றில் உள்ள பிளாஸ்டிக் உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். சூயிங்கத்தில் பிளாஸ்டிக் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, மாற்று இருந்தால் அதை ஏற்கவும் தயாராக இருந்தனர்.”
“மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு கிடைத்து விட்டால் போதும், நமது மக்கும் சூயிங்கம் வர்த்தகம் வெற்றியடையும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார் நம்பிக்கையுடன்.
வேறுபாடும் லாபமும்
2022-ல் ‘குட் கம்’ பிறந்தது. சாதாரண சூயிங்கம்கள் பிளாஸ்டிக் அடிப்படையிலானது. அது மக்காது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்காது. மறுபுறம், எங்கள் சூயிங்கம்கள் சிக்கரி மரப்பசை பேஸ் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு தாவரத்தால் ஆனது. அதை நாங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இது தாவர அடிப்படையிலான சாறு, இது மக்கும் தன்மை கொண்டது.
இந்த சூயிங்கம்களுக்கு சுவையூட்டும் பொருட்களைச் சேர்ப்பதிலும் இயற்கைப் பொருட்களையே சேர்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் ‘குட் கம்’ ரூ.6 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
மூலப்பொருள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்த சூயிங்கம் மற்ற சூயிங்கம்களை விட விலை அதிகம். இந்த மூலப்பொருளை இந்தியாவிலேயே விளைவிக்க முயற்சி செய்து வருவதாகக் கூறுகின்றனர். ரெகுலர் சூயிங்கம் ரூ.1 என்றால் இந்த மக்கும் சூயிங்கம் ரூ.6 என்பது குறிப்பிடத்தக்கது.
உடலுக்கும் உலகுக்கும் ஆரோக்கியம் சேர்க்க சற்றே கூடுதல் செலவு ஆகத்தான் செய்யும் என்பது இந்த சூயிங்க சகோதரர்களின் வரவேற்கத்தக்க லாஜிக்.
பெங்களுரு சகோதரிகளின் ‘தொன்னே பிரியாணி: 10 கோடி வருவாயுடன் சுடச்சுட வளரும் பிரியாணி பிராண்ட்!
Edited by Induja Raghunathan