பாடகி ஹரிணியின் தொழில்முனைவு ஆர்வம்!
தொலைபேசி அழைப்பை ஏற்ற இனியக்குரலின் சொந்தக்காரார் ஹரிணி ராமசந்திரன், திரைப்பட பின்னணி பாடல் உலகில் மேகா என்று அறியப்படுபவர்.
எதையும் கச்சிதமாக செய்ய வேண்டும் என்றெண்ணும் மேகா , மேடை நிகழ்ச்சிகளுக்கு எப்பொழுதும் பாடல் புத்தகம் வைக்கும் ஸ்டாண்டையும் உடன் எடுத்துச்செல்வாராம். தன்னுடன் பணியாற்றும் மேலாளர் அன்டனோ சோலார் ஜான் என்பவரை தன் நிகழ்ச்சியை காண அழைப்பு விடுத்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பாராட்ட வந்த அன்டனோ, மேகாவின் ஸ்டாண்டுடனான பிணைப்பை பற்றி கேட்டுள்ளார். "பாடல் வரிகளை நினைவு கூர்வது எனக்கு கடினம். ஆகவே இதை உடன் எடுத்து செல்வேன்". அப்பொழுது அன்டனோ தனது என்எல்பி (NLP) பயிற்சியின் மூலம் இதற்கு உதவுவதாக கூறினார். அதன்படி 45 நிமிஷங்கள் கொண்ட அமர்வில் அந்த பயிற்சியை ஹரிணிக்கு அவர் தந்தார்.
NLP என்றழைக்கப்படும் நரம்பியல் மொழியியல் நிரல் (Neuro linguistic programming ) என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் செய்முறை. இது 1970இல் அமெரிக்காவில் வசித்த ரிச்சர்ட் பென்ட்லேர் (Richard Bendler ) மற்றும் ஜான் க்ரைண்டர் (John Grinder ) என்பவர்களால் உருவாக்கப்பட்டது. செயல்முறை அனுபவங்கள் மூலமாக நரம்பியல் செயல்முறைகள், மொழி மற்றும் நடத்தை வெளிப்பாடுகள் ஆகியவற்றின் இடையே இணைப்பை உருவாக்குதலே இந்த தொழில்நுட்பம். நமது இலக்குகளை நோக்கி நம்மை செலுத்துவதே இதன் நோக்கம் என்கின்றனர் NLP பயிற்றுவிப்பவர்கள்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, ஹரிணி ஒரு பொது நிகழ்ச்சியில் தனியே பாட நேரிட்டது. வழக்கத்துக்கு மாறாக தனது ஸ்டாண்டை எடுத்துக் கொள்ள மறந்து போனார். பத்து புதிய பாடல்கள் அதுவும் அவர் பாடிராத பாடல்கள் பாட வேண்டிய நிகழ்ச்சி அது. மேடை ஏறியதும் தான் ஸ்டாண்ட் இல்லமால் போனது நினைவுக்கு வந்தது.
"ஒரு வாரம் முன்பாக பயின்ற பத்து பாடல்களை எப்படி பாடப் போகிறேன் என்று எண்ணினேன். நான் எதிர்பாரா விதமாக அந்த பாடல்களின் வரிகள் அனைத்தும் என் நினைவுக்கு வந்தது, அன்று அந்த நிகழ்ச்சி மிக நன்றாக அமைந்தது. இது நாள் வரை எனது திறமையின் மேல் நம்பிக்கையின்றி பாடல் புத்தக ஸ்டாண்டுடன் பயணித்ததையும், NLP என்ற சக்தி வாய்ந்த மீடியத்தை பற்றியும் அப்பொழுது தான் உணர்ந்தேன்"
அந்த சம்பவம் அவரை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. அவரின் சுற்றமும் அவரின் இந்த மாறுதலை உணர்ந்தனர். தொழில் முறை தேர்ச்சி பெற்றவராக ஆக்கியதுடன், இந்த மாற்றமே நிலையாகிப் போனது.
"என்னுடைய செயல்திறன் தேர்ச்சி அடைந்ததை இசையமைப்பாளர்களும் உணர்ந்தே இருந்த நிலையில், இது நீடித்த மாற்றமாகவே ஆகிப்போனது"
இவ்வாறாக NLP துறையில் அவரது பயணம் தொடங்கியது. இந்த நுட்பத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலை தூண்டியது. வேறு என்னவெல்லாம் செய்ய இயலும் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய பொழுது, பதட்டத்தை களைய, கவனத்துடன் செயலாற்ற முடியும் என்பதை உணர்ந்தார். தனக்கு தெரிந்த நுட்பத்தை அன்டனோ, ஹரிணிக்கு சொல்லிக் கொடுத்தார். இருவரும் இணைந்து அவர்கள் வட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சியை அளித்தனர். சாதகமான முடிவுகளை இந்த பயிற்சியின் மூலம் பெற்றதாக பிறர் கூறியது இவர்களை உற்சாகப்படுத்தியதுடன், மேலும் இம்முயற்சியை தீவிரமாக எடுத்தச் செல்ல வழி வகுத்தது.
"இந்த மாற்றம் நிலையான ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம். பயிற்சி மேற்கொண்டவர்கள் இதனை முறையாக செயல் படுத்துகிறார்களா என்றறிய ஒரு குழுவை நியமித்தோம். 90% வெற்றி கண்டு இவர்களால் தங்கள் கனவை மேற்கொள்ள முடிகிறது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் ஹரிணி.
தொழில் முனைவராக ஹரிணி
அன்டனோவுடன் இணைந்து "ஸ்கூல் ஒப் எக்ஸ்சல்லன்ஸ் "(School of Excellence ) என்ற நிறுவனத்தை தோற்றுவித்ததின் மூலம் ஹரிணி தொழில்முனைவராகியுள்ளார். நவம்பர் 2011இல் தொடங்கிய இந்நிறுவனம் மூலமாக தரமான பயிற்சியாளர்களை உருவாக்க எண்ணினர். 2000 பேர்களை இது வரை பயிற்றுவித்த இவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான பரந்த வயது வரம்பில் உள்ள தனிநபர்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆயிரம் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மாற்றத்தின் முன்னோடிகளாக ஆக்கும் முயற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர். "அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு மில்லியன் மக்களின் வாழ்கையில் மாற்றம் கொண்டு வரும் இலக்கை மேற்கொண்டுள்ளோம். இந்த செயல் நுட்பத்தின் மூலம் நிஜமான மாற்றத்தை மேற்கொள்வதே எங்கள் தொலைநோக்கு பார்வை" என்கிறார் ஹரிணி.
பாடகி ஹரிணி
சென்னையில் பிறந்து, பள்ளிப் படிப்பை பெங்களூருவில் பயின்றார் இவர். பிறகு பிகாம் பட்டப்படிப்பிற்கு சென்னை திரும்பினார். பின்னர் "மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க்" (Madras School of Social work) இல் மனித வள மேம்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றார். ஹரிணி தலைச்சிறந்த கர்நாடக இசை மேதை பாபநாசம் சிவம் அவர்களின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தை பருவம் முதல் இசை பயிலும் ஹரிணி, கர்நாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றவர். அகஸ்டீன் பால் அவர்களின் பயிற்சியின் கீழ் லண்டனில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் கிரேட் 8 அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஹரிணி பின்னணி பாட வாய்ப்பு அமைந்ததென்னவொ பட்டப்படிப்பின் இறுதியாண்டில் தான்.
ரோஜா படப் பாடல் கேட்டதிலிருந்து, பின்னணி பாடல் பாடும் ஆர்வம் வந்ததாக கூறும் ஹரிணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் முன்மாதிரி. சென்னையில் அவர் வசித்தததால், இங்கேயே இருக்க முடிவெடுத்தேன். என்னுடைய கிட்டார் பயிற்சியாளர் தான் பின்னணி பாடலை தெரிவு செய்யும் ஆர்வத்தை தூண்டினார். இதன் பிறகே தன்னுடைய மாதிரி சிடியுடன் இசையமைப்பாளர்களை அணுக ஆரம்பித்தேன் என்று கூறும் ஹரிணி அவருடைய கிட்டார் பயிற்சியாளர் ஒரு சமயத்தில் இளையராஜாவிடம் வேலை புரிந்ததும் உதவியாக அமைந்தது என்கிறார்.
2007இல் "நான் அவனில்லை" படத்தில் இரண்டு பாடல்களை பாடி, சினிமாவில் அவரின் இசை பயணம் தொடங்கியது. பிராந்திய மொழி மற்றும் பாலிவுட் படத்திற்கும் பாடியுள்ள இவர், தெலுங்கு மொழியில் பாடியதின் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.
தனது முதுகலை பட்டப்படிப்பிற்கு பின் ஆன்லைன் மூலம் கற்பிக்கும் ஈ லேர்னிங் நிறுவனத்தில் பணியாற்றிய போதுதான் அங்கு மேலதிகாரியான அன்டனோவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"எல்லா பெற்றோர்களும் படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றே நினைக்கின்றனர். நானும் கேம்பஸ் மூலமாக டிசிஎஸ் நிறுவனத்தின் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எனக்கு வேலையில் விருப்பமில்லை. பிற்காலத்தில் பிடித்தவற்றை செய்ய முடியவில்லை என்று கவலை படுவதை தவிர்த்து இசையில் உள்ள ஆர்வத்தினால் அதில் முயற்சி செய்ய விரும்பினேன். மாத வருமானம் அவசியம் என்ற சூழ்நிலை இல்லாததால், துணிந்து செயல்பட முடிந்தது" என்கிறார் ஹரிணி.
NLP மற்றும் இசையை இணைக்கும் ஆர்வம்
ஹரிணியால் ஸ்ருதி சுத்தமாக பாட இயலும். நிறைய ரியாலிட்டி நிகழ்சிகளில் பங்கு பெறுபவர்கள் ரிதம் மற்றும் ஸ்ருதி குறைந்து பாடுவதை பார்த்திருக்கிறார். "இங்கு தான் என் பங்களிப்பை உணர்கிறேன். NLP வாயிலாக அவர்களின் செயல் திறனை மேம்படுத்த இயலும். இதன் மூலமாக தலைமுறைக்கும் நிற்கும் திறனை வெளிக்கொணர எண்ணுகிறேன்" என்கிறார் ஹரிணி.
28 வயதாகும் இந்த இளம் பாடகியின் தாரக மந்திரம் என்ன தெரியுமா :
"சிறந்து விளங்குதல் என்பது அடையக்கூடிய ஒன்று தான் ; நடுத்தர நிலையில் என்றுமே பயணிக்காதீர்கள்"
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைப் பள்ளியில், கீழ்நிலையில் வாடும் குழந்தைகளுக்கு NLP முறையின் மூலம் இசைப் பயிற்சி அளித்துள்ளார் ஹரிணி.