‘பணத்தால் இதை வாங்கமுடியாது’ - சிறிய மளிகைக்கடை நடத்தும் கோடீஸ்வரரின் மாமனார் கற்றுக் கொடுத்த பாடம்!
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை நிர்வாகம் செய்யும் ‘Zerodha’ நிதின் காமத், ‘பணத்தால் இதை வாங்க முடியாது, உண்மையான சுதந்திரம் என்பது இதுதான்’ என சிறிய மளிகைக் கடை நடத்தும் தனது மாமனாரைப் பற்றி பகிர்ந்துள்ள பதிவு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ப்ரோகரேஜ் நிறுவனங்களில் ஒன்றான
-வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் காமத், தனது 70 வயது மாமனார் குறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அதிக லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழில்முனைவர் நிதின் காமத், ஜெரோதா (Zerodha) மற்றும் ரெயின் மேட்டர் (Rainmatter) ஸ்டார்ட் அப்’பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
தன்னம்பிக்கை நாயகன்
அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்து இன்று தனது நிறுவனத்தை முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக நிலை நிறுத்தி, இளம் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருபவர் நிதின்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கால் சென்டரில் 8000 ரூபாய்க்கு பணியாற்றி வந்த நிதின் காமத், இந்த ஆண்டு 2000 கோடி ரூபாய் அளவில் சம்பாதித்து உள்ளார். 2.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், உலகின் இளம் பில்லினியர் ஆக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இடம் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலில் 1104 இடத்தில் உள்ளார் அவர்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவரை, டிவிட்டரில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது வளர்ச்சியைப் பார்த்து, தொழில்துறையில் இருக்கும் பலரும் வியந்து கொண்டிருக்க, நிதினோ தனது டிவிட்டர் பக்கத்தில் தனது மாமனார் சிவாஜி பாட்டீல் பற்றி வெளியிட்டுள்ள யதார்த்த வாழ்க்கைப் பற்றிய பதிவு, அவரைப் பின் தொடர்பவர்களையும் மேலும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
70 வயது இளைஞர்
அதில், கார்கில் வீரரான தனது மாமனார், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், தனது 70 வயதில் எப்படி சுறுசுறுப்பாக, வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார் என அந்தப் பதிவுகளில் அவர் விளக்கமாகக் கூறியிருந்தார்.
படிப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்த சிவாஜி பாட்டீலின் கதை, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. நிதின் காமத்தின் டிவீட்டை இதுவரை இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் படித்துள்ளனர். இந்தப் பதிவிற்கு லைக்குகளும், பாராட்டு கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
இப்படி லைக்குகளைக் குவிக்கும் அளவிற்கு அந்தப் பதிவில் அப்படி என்ன இருந்தது என உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.
இதோ தனது மாமனார் சிவாஜி பாட்டீல் பற்றி நிதின் வெளியிட்ட பதிவு விரிவாக...
“திருப்தியாக இருப்பதே உண்மையான சுதந்திரத்திற்கான ஒரே வழி. இதை உணர்த்துபவர் என் மாமனார் சிவாஜி பாட்டீல்” ... என தனது பதிவை ஆரம்பித்திருக்கிறார் நிதின்.
“எனது மாமனார் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். கார்கில் போரின் போது பனிக்கட்டிகளால் பாதிக்கப்பட்டு தனது கை விரல்களை இழந்தார். அதன் பின்பு, ராணுவத்தில் ஹவால்தாராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவர், கர்நாடக மாநிலம் பெல்காம் திரும்பியதும், அங்கு சிறிய பலசரக்கு பெட்டிக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
தற்போது 70 வயதாகும் அவர், தனது பழைய மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டரில் தினமும் உள்ளூர் மார்க்கெட்டிற்கு சென்று, தனது கடைக்குத் தேவையானவற்றை தானே நேரடியாக பார்த்து வாங்கி வருகிறார். அவரது ஒரே ஒரு உதவியாளர் எனது மாமியார் தான். கடையில் தனது கணவருக்கு உதவியாளராகவும், வீட்டு வேலைகளையும் அவரே கவனித்துக் கொள்கிறார்.
நானும், எனது மனைவி சீமாவும் (சிவாஜி பாட்டீலின் மகள்) எங்கள் தொழிலில் வெற்றியாளராக திகழும் இந்த தருணத்திலும், என் மாமனார் தனது வேலைகளில் இருந்து ஓய்வு பெற மறுக்கிறார். இந்த வயதிலும் தனது சொந்த வருமானத்தில் வாழ்வதையே அவர் தனது சுதந்திரமாகக் கருதுகிறார். அவரது கடையில் உள்ள பொருட்களின் மார்ஜின்களைப் பற்றிக் கேட்கும் போது, அவர் கண்களில் ஒரு சந்தோசத்தை நான் பார்க்கிறேன். கடலை மிட்டாய்களுக்கு 25% லாப மார்ஜின் கிடைக்கும் என்றும், ஒரு பெட்டியை ரூ.200க்கு வாங்கி, அதனைத் தனித்தனியாக விற்று ரூ.250 பெறுவதாகவும் அவர் கூறுகிறார்.
அவர் யாரைப் பற்றியும் புகார் கூறி நான் இதுவரைக் கேட்டதில்லை. போரில் தன் விரல்களை இழந்ததைப் பற்றிக்கூட அவர் இதுவரை கவலையாக பேசியது கிடையாது.
2007ம் ஆண்டு நான் என் தொழிலில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அவரது மகளைத் திருமணம் செய்து வைக்க அவரிடம் அனுமதி கேட்டபோது, அரசு வேலையில் முயற்சித்து சேருமாறு எனக்கு அறிவுரை கூறினார்.
பணத்தால் வாங்க முடியாது
நான் என் வாழ்நாள் இறுதிவரை ஆரோக்கியத்தை அதிகரிப்பது அல்லது எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வது என்பது பற்றி ஆராய்ந்து வருகிறேன். என் கண் முன்னால் எனக்கு சிறந்த உதாரணமாக என் மாமனார் வாழ்ந்து வருகிறார்.
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பதை எந்த காலத்திலும் நிறுத்தக் கூடாது, என்ற பாடத்தை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அதில் தான் திருப்தி இருக்கிறது. நிச்சயமாக அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனென்றால், பணத்தால் அவற்றை வாங்க முடியாது. இதற்கு என் மாமனாரே எனக்கு சிறந்த உதாரணம்,” என அந்தப் பதிவை நிதின் முடித்திருக்கிறார்.
இந்தப் பதிவு மூலம், உலகின் முன்னணி பில்லியனர்களில் ஒருவராக திகழும் நிதினின் சொந்த மாமனார், இப்படி சிறிய மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருவது நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
சுதந்திரமான, நிம்மதியான வாழ்க்கை என்பது தான் கொண்ட தொழிலில் வெற்றியாளராக, பணத்தை குவித்தால் மட்டுமே கிடைக்கும் என்றில்லை. தன் மனதுக்கு விரும்பிய வேலையை, வயதைப் பொருட்படுத்தாமல், தன் மகள் மற்றும் மருமகன் கோடீஸ்வரர்களாக இருந்த போதும்கூட, மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தான் விரும்பியபடி செய்வது, எளிமையான, அமைதியான வாழ்க்கையை வாழ்வது மட்டுமே உண்மையான சுதந்திரம், வெற்றி என்பதை நிதினின் இந்தப் பதிவு உணர்த்துகிறது.
Zerodha-வில் பல லட்சம் மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை நிர்வாகம் செய்யும் நிதின் காமத், சிறிய மளிகை கடை நடத்தும் தனது மாமனாரிடம் இருந்து முக்கியமான வாழ்க்கை பாடத்தை கற்றுள்ளதாகக் கூறியுள்ள இந்தப் பதிவு, அதிக லைக்குகளைக் குவித்து வருகிறது. இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தப் பதிவைப் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘34 வயதில் 1.17 பில்லியனுக்கு அதிபதி’ - இந்தியாவின் ‘இளம் பில்லியனர்’ நிகில் காமத்!