‘34 வயதில் 1.17 பில்லியனுக்கு அதிபதி’ - இந்தியாவின் ‘இளம் பில்லியனர்’ நிகில் காமத்!
34 வயதில் 1.17 பில்லியன்-க்கு அதிபதி!
கொரோனா, லாக்டவுன் என கடந்த ஆண்டு முழுவதும் உலக மக்கள் திணறி போயிருந்தாலும் ஒருபுறம் பிஸினஸ்மேன்கள் காட்டில் அடை மழைதான். ஊரடங்கு காலகட்டத்திலும் அவர்கள் பல கோடிகளை சம்பாதித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பல பட்டியல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் பட்டியலும் அதையே உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தப் பட்டியலில் அம்பானி, அதானி என பல பெரிய தலைகளுக்கு மத்தியில் 34 வயதான இரு இந்திய இளம் பில்லியனர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபூர்வா மேத்தா, இன்ஸ்டாகார்ட் நிறுவனர், ஜீரோதா நிறுவனத்தின் நிகில் காமத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இருவரில் நிகில் காமத் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.
Zerodha-வின் இணை நிறுவனர் நிகில் காமத்
2010ம் ஆண்டு தனது சகோதரர் நிதினுடன் இணைந்து நிகில் காமத் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தரகு நிறுவனமான ஜீரோதாவை தொடங்கினார். ஜீரோ மற்றும் ரோதா ஆகியவற்றின் இணைப்புச் சொல்தான் ஜீரோதா. இதற்கு சமஸ்கிருத்ததில் தடை என்று பொருள்.
கொரோனா பெருந்தொற்றின்போது இந்த நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதுமட்டுமல்லாமல் தினசரி 10 பில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
"நிகில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவமுள்ள ஒரு விவேகமான முதலீட்டாளர். மேலும், அதிநவீன நீண்ட கால முதலீட்டு உத்திகள் மற்றும் இலாகாக்களை மாடலிங் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். ஜெரோதாவில் முதலீடுகள் மற்றும் இடர் மேலாண்மைக்கு தலைமை தாங்குகிறார். சொல்லப்போனால் அவர் புத்தகங்களை வாசிப்பதில் தீரா ஆர்வம் உடையவர். அதேபோல, செஸ் விளையாட்டின் மீது அதீத காதல் கொண்டவர்.
14 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவர்
செஸ் விளையாட்டில் மாஸ் காட்டியவர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் செஸ் போடிகளில் கலந்துகொண்டு விளையாடியவர். இன்றும் செஸ் போட்டிகளுக்கு ஆதரவளிப்பவர்.
“ஒரு கட்டமைப்பின் கீழ் எப்படி செயல்படுவது என்பதை செஸ் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். அந்த குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் உங்களது ஆக்கப்பூர்வமான முயற்சிகளை செய்துகொண்டேயிருங்கள்,” என்கிறார் நிகில் காமத்.
நிகில் காமத் தனது 14 வயதில் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். மேலும் கல்லூரியில் பட்டம் எதுவும் பெறாமல் இருந்த நிகிலை வேலைக்கு அமர்த்த எந்த நிறுவனமும் தயாராக இல்லை. அதனால் அவர் தனியாக தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டியதாயிற்று.
நல்ல வாசகர்
அடிப்படையிலேயே நிகில் காமத் ஒரு சிறந்த வாசகர். புத்தகப்புழு என்று கூறும் அளவுக்கு புத்தகத்தின் மீதான காதலைக் கொண்டிருப்பவர். வாரத்திற்கு 1 முதல் 2 புத்தகங்களைப் படித்துமுடித்து விடுவார். 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருக்கிறார்.
வர்த்தகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்
”என்னுடைய 17வது வயதில் டிரெடிங்-ல் ஈடுபடத் தொடங்கினேன் என அவர் 2017ம் ஆண்டு ஜீரோதா நிறுவன வீடியோ ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
"பங்குகளில் எனக்கு தீவிர ஆர்வம் இருந்தது, அந்த நேரத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த எனது தந்தை மற்றும் சகோதரரால் இன்னும் அதிகரித்தது. குறைந்த பண முதலீட்டைக் கொண்டு நீங்கள் டிரேடிங் செய்யத் தொடங்கினால் உங்களுக்கான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும். அன்றிலிருந்து எனக்கும் இது தொடர்கிறது. வர்த்தகத்தின் மிகப்பெரிய விஷயம் அதில் உச்சவரம்பு இல்லை,” கடந்தாண்டு அர்னாப் பிஸ்னஸூக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
"நீங்கள் ஒரு நல்ல வர்த்தகர் என்றால் நீங்கள் ஒரு பெரிய தொகையை வாங்கலாம். இதில் நீங்கள் பல விஷயங்களில் கட்டுப்படுத்தப்படுவதில்லை. சொல்லப்போனால் இது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது என்று நினைக்கிறேன். வர்த்தகத்தில் ஒரு வேலைக்கு குறைந்தபட்ச தகுதி தேவையில்லை என்பதும் உண்மை.
”நிதிச் சந்தைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நீங்கள் ஆன்லைனில் படிக்கலாம், வெவ்வேறு அமைப்புகள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் முறைகள் பற்றிய புத்தகங்களை வாங்கலாம் மற்றும் உங்களால் சொந்தமாக ஒரு நல்ல வர்த்தகராக முடியும்."
ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் நிறுவிய நிகில்
தனது சகோதரருடன் இணைந்து, ‘ட்ரூ பெக்கன்’ True Beacon இணை நிறுவனராக இருக்கிறார் நிகில்காமத்.
"தனியுரிம முதலீட்டு தயாரிப்புகளின் சுற்றுச்சூழல் அமைப்பு, போர்ட்ஃபோலியோ மேலாண்மை மற்றும் ஆலோசனை, மூலதனச் சந்தை சேவைகள் மற்றும் மூலோபாய முதலீட்டாளர்களுக்கான வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பொது மற்றும் தனியார் சந்தைகளில் கவனம் செலுத்துகின்றன," என்கிறார் அவர்.
credit - asiatatler