விண்வெளிக்கு போட்டிப்போடும் பில்லியனர்கள்: ஜெஃப் பெசோஸ் Vs எலான் மஸ்க்!
விண்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் இணைய சேவையில் போட்டிப்போடும் பில்லியனர்கள் குறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பல கட்டம் முன்னோக்கி வருகிறது. இந்த முன்னேற்றமானது பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் திகைப்பூட்டும் வகையில் இருக்கிறது. அதன்படி உலகின் பிரதான இரண்டு பில்லியனர்களின் போட்டி விண்வெளி நோக்கி திரும்பி இருக்கிறது.
அது எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூஆர்ஜின் நிறுவனம் தான்.
ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தில் பெருமளவு முணைப்புகள் காட்டி வருகின்றனர். பயனர்களை விண்வெளிக்கு சுற்றுலா பயணம் அழைத்து செல்வதே இந்த அனைத்து நிறுவனங்களின் நோக்கமாகும்.

Jeff Bezos Elon Musk space
விண்வெளி சுற்றுலாவில் பயணர்கள் புதுமைகளை அனுபவிக்க வேண்டும் அதற்கு தங்கள் நிறுவனமே காரணமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டு செயல்பட்டு வருகின்றன.
ட்விட்டரை வாங்கிவிட்டார், உலகின் முதல் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பல்வேறு புகழுடன் சமீப காலமாக இணையத்தை கலக்கி வருபவர் எலான் மஸ்க். இவரது நீண்ட நாள் கனவுத் திட்டம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தான். இதற்காக இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதேபோல், தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த ஆண்டு சோதனை செய்தது. இதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் பங்கு பெற்றது. இதன்மூலம் நாசாவில் பங்குபெற்ற முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது.
எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கருதப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக்கூடிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்மாதிரி சோதனையில் விண்கலன் வெடித்து சிதறியது. விண்கலன் மாதிரி வெடித்து சிதறியது முதன்முறையல்ல, தொடர்ந்து மூன்று முறை வெடித்துச் சிதறியது. இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து எலான்மஸ்க் தனது கருத்துகளை பதிவிட்டார். அதில்,
”விண்கலன் வெடித்து சிதறியது மிகப் பெரிய வெற்றி. காரணம், எப்படி தோல்வி அடையக்கூடாது என்பதை இந்த தோல்வியில் இருந்து கற்றுக் கொண்டேன்,” என குறிப்பிட்டார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிலுக்கு அமோக வரவேற்பு கிடைக்க, அடுத்த சோதனையில் விண்கலன் வெற்றிகரமாக பயணித்து பூமிக்கு திரும்பியது.

File photo of Blue Origin’s New Shepard rocket system lifting off from West Texas in January 2019. Credits: Blue Origin (Source: Nasa)
இதெல்லாம் ஒருபுறம் இருக்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் விண்வெளி சுற்றுலா திட்டத்தில் பல கட்டம் முன்னோக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றடைந்தது. தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பல்வேறு பயணங்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், ஜெஃப் பெசோஸ் என்று குறிப்பிட்டதும் நினைவுக்கு வருவது அமேசான் நிறுவனம் தான். சமீபத்தில் பெசோஸ் அமேசான் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார், அதற்குக் காரணம் அவர் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பியதே ஆகும்.
விண்வெளி பயணம் சார்ந்த நிறுவனம் ப்ளூ ஆர்ஜின், இதன் நிறுவனரும் ஜெஃப் பெசோஸ் தான். ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி சுற்றுலா திட்டத்தில் தற்போது கவனம் செலுத்தி பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தனது புதிய ஷெப்பர்ட் ராக்கெட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது ஒலியை விட வேகமாக பயணிக்கும் வகையிலும், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்வெளிப் பயண டிக்கெட்கள் ப்ளூ ஆர்ஜின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பெசோஸ் கடந்தாண்டு குறிப்பிட்டார். இருப்பினும் தற்போது வரை ஜெஃப் பெசோஸ் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் பயண டிக்கெட் விலையை குறிப்பிடவில்லை.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்துக்கு என்று தனி பெருமை இருக்கிறது. காரணம், ப்ளூஆர்ஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது. பயணிகளை ஏற்றிக்கொண்டு விண்வெளியின் கர்மன் கோட்டைக் கடந்த முதல் ராக்கெட் இதுதான்.
கர்மன் கோடு என்பது கடல் மட்டத்தில் இருந்து 100 கிமீ உயரத்தில் கணக்கிடப்படுகிறது. இந்த ராக்கெட்டில் பயணிகள் அமரும் கேப்ஸ்யூல் ஆனது பெரிய ஜன்னல்கள் மற்றும் சாய்ந்த இருக்கைகள் உடன் பயணிகளுக்கு சௌகரியமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த கேப்ஸ்யூல் பூஸ்டரில் இருந்து பிரிக்கப்பட்டு பூமிக்கு மேலே 62 மைல் அதாவது 100 கிலோமீட்டர் உயரம் கர்மன் கோட்டைக் கடந்த பயணித்தது.
விண்வெளி போட்டியானது விண்வெளி சுற்றுலாவுக்கு மட்டும் தானா என்றால் அது கிடையாது. செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதிலும் நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவுகிறது. அதாவது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது பிராட்பேண்ட் இணையத்தை வழங்க சுமார் 12000 செயற்கைக்கோள்களுக்கு அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.
செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கினால், அதிவேக இணையத்தை வழங்க முடியும் எனவும், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் செல்போன் டவர்கள் சென்றடைய முடியாத மலை உச்சியில் இருந்கு அடிப்படை கிராமங்கள் வரை தடையற்ற இணைய சேவை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், டினெடிக்ஸ் ஆஃப், ஹன்ட்ஸ்வில்லே, அலபாமா போன்ற நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் முணைப்புடன் செயல்பட்டு வருகிறது.

செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டம் பலவகையில் பெரிதும் பயன்படும் என்றாலும், இந்தத் திட்டம் குறித்து நாசா கவலை தெரிவித்திருக்கிறது.
அதாவது, அறிவியல் மற்றும் மனித விண்வெளி பயணங்களில் இந்த திட்டங்கள் மூலம் அதீத பாதிப்பு ஏற்படும் என நாசா தெரிவித்திருக்கிறது. விண்வெளி சுற்றுப்பாதையில் இதுவரை 25000 பொருள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 600 கிலோமீட்டர் தொலைவிற்கு 6100 பொருள்கள் இருப்பதாகவும் நாசா தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள் மூலம் இணையம் வழங்க முணைப்பெடுக்கும் போது விண்வெளி சுற்றுப்பாதை பொருள்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் விண்வெளி குப்பைகளும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
தொகுப்பு: துர்கா