வேளாண் கழிவுகளில் இருந்து பயோ செங்கல் வீடு: ஐஐடி ஐதராபாத் புதிய சாதனை!
பயோ செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிடம் திறப்பு!
ஐஐடி ஐதராபாத் வேளாண் கழிவுகளிலிருந்து தயாரித்த பயோ செங்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கட்டிடத்தைத் திறந்துள்ளது. ஐஐடி ஐதராபாத் இந்த பயோ செங்கற்களை 'கழிவிலிருந்து செல்வம்' என்று அழைத்துள்ளது. ஐஐடியின் ஆராய்ச்சியாளர்கள் விவசாயக் கழிவுகளை நிலையான பொருட்களாக மாற்ற முடியும் என்பதை இந்த பயோ செங்கல் ஆய்வின்போது நிரூபித்தனர்.
மேலும், இது சுற்றுச்சூழல் நட்பு, செலவு குறைந்த கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுகிறது என்பதும் நிரூபணமானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பயோ செங்கல் பொருள் மற்றும் அதன் உற்பத்தித் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஐஐடி ஐதராபாத் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற சமூகத்தின் பரந்த தொழிலை ஊக்குவிக்க இந்த தொழில்நுட்பம் தொடர்பாக விவசாய அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஐஐடி ஐதராபாத் முயற்சி செய்யும் என ஐஐடி-எச் இயக்குநர் பிஎஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் தீபக் ஜான் மேத்யூவின் மேற்பார்வையில், ஆராய்ச்சியாளர் பிரியாபிரதா ரவுத்ரேவால் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் மேத்யூ பேசுகையில்,
“இந்த கண்டுபிடிப்பு கிராமப்புற கிராம விவசாயிகளுக்கு ஒரு மாற்றாக இருக்கும். ஏனெனில் அவர்களின் விவசாயக் கழிவுகள் அவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும். வறட்சி காலத்தில் இது அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும்," என்றுள்ளார்.
ஐஐடி ஐதராபாத், ICED 2019, டெல்ஃப்ட் பல்கலைக்கழகம் மற்றும் ICoRD 2021, IIT மும்பையில் சர்வதேச மாநாடுகளில் தங்களது பயோ-செங்கற்கள் பற்றிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை கூட்டாக வெளியிட்டுள்ளது.
அறுவடைக்குப் பின் வேளாண் கழிவுகளை எரிப்பது இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாகும். பயோ-செங்கல் தொழில்நுட்பம் ஸ்டபிள் எரிப்பால் ஏற்படும் இத்தகைய மாசுபாட்டை தடுக்கவே உருவாக்கப்பட்டது. பயோ-செங்கற்கள் சிக்கனமானவை மற்றும் எரிந்த களிமண் செங்கற்கள் மற்றும் கான்கிரீட் தொகுதிகளுடன் ஒப்பிடும்போது முறையான அளவு 1/8 மற்றும் 1/10 எடையுடன் காணப்படுகின்றன.
”எரிந்த களிமண் செங்கற்களுடன் ஒப்பிடுகையில், பயோ செங்கற்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் போது சுமார் 2-3 ரூபாய் செலவாகும். விவசாயிகள் இந்தப் பொருளை தங்களது தளத்திலேயே தயாரித்து மேலும் தொழிலாளர் செலவைக் குறைக்கலாம். பயோ-செங்கற்களை உற்பத்தி செய்வது விவசாயிகளின் ஓரளவு வருமானத்தை அதிகரிக்கவும் மற்றும் பருவ காலங்களில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவும் முடியும்," என்று ஐஐடி ஐதராபாத் வெளியிட்ட செய்தி அறிக்கை கூறுகிறது.
ஐஐடி ஐதராபாத் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்த பயோ செங்கற்கள், சிறந்த வெப்ப காப்பு மற்றும் தீ-தடுப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. கூரை மற்றும் சுவர் பேனலிங்கில் பயன்படுத்தும்போது, அது 5 - 6 டிகிரி வெப்ப அதிகரிப்பை திறம்பட குறைக்கும். வழக்கமான செங்கற்களுக்கான தேவை அதிவேகமாக வளரும் போது, நாட்டில் வளமான மேல் மண் இழப்பு மற்றும் அதிக காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும்.
இதுபோன்ற தருணங்களில் பயோ செங்கற்கள் உதவிகரமாக இருக்கும். விவசாயிகளும் கிராம மக்களும் தங்கள் வீடுகளைக் கட்ட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன், என்று இந்த பயோ செங்கற்களை உருவாக்க காரணமாக இருந்த பிரியாபிரதா ரவுத்ரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.